விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி
கல்வியாளர் தி.அரிகோபாலன்
இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் புரட்சி வேலூரில் நடந்தது. அது தான் வேலூர் சிப்பாய் புரட்சியாகும். 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட நாளாகும்.
பெரும் எண்ணிக்கையில் நாட்டுப்பற்று மிக்க இந்திய சிப்பாய்கள் ஏகாதிபத்திய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக புரட்சி போராட்டத்தில் ஈடுபட்ட தினம் அது.
வேலூர் மாநகரின் கோட்டை பகுதியில் இந்திய சிப்பாய்கள் ஒரு நாள் முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக கலவரம் செய்தனர். ஆயுதம் ஏந்தி போராடினர். ஆங்கிலேயே அதிகாரிகளையும், ஆங்கிலேயே படை வீரர்களையும் சுட்டுக்கொன்றனர். சிறிய ரக பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன.
இந்த கலவரத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆங்கிலேய படையினர் கொன்று குவிக்கப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்திய சுதந்திர வரலாற்று புத்தகத்தில் வீரத்தின் அடையாளமாய், பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாக அந்த நிகழ்வு அமைந்தது.
இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் ஆற்காட்டில் இருந்து பெரும் படையை திரட்டினர். உயிரை துச்சமென மதித்து சுதந்திரத்துக்காக போராடிய நம் வீரர்களை படுகொலை செய்தனர். ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
இந்த புரட்சி ஏற்படுவதற்கு முக்கியமான சில காரணங்கள் இருந்தன. அதாவது, 1805-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிப்பாய்களின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்துக்கள் நெற்றியில் திலகமிடுவதும், முஸ்லிம்கள் தாடி, மீசை வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டது. ஐரோப்பியர்கள் அணியும் உடையை போன்று சீருடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் சென்னை தரைப்படையின் தலைமை கமாண்டரான ஜான் கிராடெக் என்பவர் நம்முடைய சிப்பாய்களின் தலையை சுற்றி தலைப்பாகை அணிவதற்கு தடை விதித்து தோலால் ஆன தொப்பி அணிய வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
இந்த உத்தரவு இந்திய சிப்பாய்களாக இருந்த இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு தரப்பினரையும் பெரும் அளவில் எரிச்சல் அடைய செய்தது. நமது சிப்பாய்கள் இந்த உத்தரவுகளை எதிர்த்தனர்.
1806-ம் ஆண்டு மே மாதத்தில் புதிய விதிகளை எதிர்த்த நமது சிப்பாய்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு ஒரு இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களுக்கு தலா 90 கசையடிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் ராணுவத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதுபோக, 19 சிப்பாய்களுக்கு தலா 50 கசையடிகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர். இதனால் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டது.
இந்த சூழலில் ஆங்கில படையினரால் தோற்கடிக்கப்பட்ட திப்பு சுல்தானின் மகன்கள், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் இந்த கலகத்தை தூண்டிவிட்டனர்.
வேலூர் கோட்டையில் குடியமர்த்தப்பட்டு இருந்த திப்புசுல்தானின் மகன்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்று திரண்டு ஒரு திட்டத்தை தீட்டினர். அதன்படி, 1806-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி திப்பு சுல்தானின் மகள் திருமணத்துக்கு அனைவரும் ஒன்று கூடுவது போல நடித்து சிப்பாய் கலகத்தினை மிகச் சிறப்பாக அரங்கேற்றினர்.
சிப்பாய்கள் அல்லாத மற்ற குடிமக்கள் சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டதின் நோக்கம் சரியாக தெரியவரவில்லை என்றாலும், மைசூரு சாம்ராஜ்யம் முழுவதும் ஒரு பெரும் எழுச்சியை உண்டாக்க முயன்றது போலத் தோன்றுகிறது. ஆனாலும் துரதிருஷ்டவசமாக திப்பு சுல்தானின் மகன்கள் கலகம் தொடங்கிய பின் தலைமை ஏற்கத் தயங்கி பின்வாங்கினார்கள்.
சிப்பாய் புரட்சிக்கு பின்பு அதில் ஈடுபட்ட 3 மெட்ராஸ் பட்டாலியன்கள் முழுவதுமாக கலைக்கப்பட்டன. கலகத்திற்குக் காரணமாக இருந்த மத உணர்வை புண்படுத்தும் சீருடையை அணிய உத்தரவிட்ட மூத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். தலைமை கமாண்டர் இங்கிலாந்து திரும்பி செல்ல பயண செலவு கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தொப்பி அணிய கோரிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மெட்ராஸ் கவர்னர் வில்லியமும் திரும்ப அழைக்கப்பட்டார்.
1806-ம் ஆண்டு வேலூரில் நடந்த சிப்பாய்புரட்சி இந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. இதுதான் இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் புரட்சி என்று தமிழக வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. மேலும் இந்த புரட்சி தான் 1857-ம் ஆண்டு நிகழ்ந்த புகழ்மிக்க புரட்சிக்கும் வித்திட்டது என்றால் மிகையல்ல.
சிப்பாய் புரட்சியின் நினைவாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாவட்ட கலெக்டர் முதல் பொதுமக்கள் வரை ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாம் அனைவரும் நம் வீரர்களின் தியாகத்தை போற்ற கடமைப்பட்டு உள்ளோம்.
நாளை (ஜூலை 10-ந் தேதி) வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு நாள்.
வாசகர்கள் தங்கள் கட்டுரைகளை 4thp-a-ge@dt.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
கட்டுரைகள் தொடர்பான வாசகர்களின் கருத்துகளை feedback@dt.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9176448888 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமும் தெரிவிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment