Monday, 9 July 2018

ஸ்டெம் செல் சிகிச்சை: மக்களை ஏமாற்றக் கூடாது!

ஸ்டெம் செல் சிகிச்சை: மக்களை ஏமாற்றக் கூடாது! ஸ்டெம் செல்லை மருந்தாகப் பயன்படுத்துவது முறைகேடுகளுக்கே வலுசேர்க்கும் கு.கணேசன் ஸ் டெம் செல் சிகிச்சை மேற்கொள்வதற்கு, மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்,1940-ல் உள்ள விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு மருந்தாக ஸ்டெம் செல்களைப் பயனாளிகளுக்குப் பயன்படுத்தலாம் என்பதே அந்தத் திருத்தம். புதிதாக ஒரு மருந்து தயாரிப்பதற்குப் பின்பற்றப்படும் எல்லா விதிகளும் ஸ்டெம் செல் சிகிச்சை அளிப் பதற்கும் பின்பற்றப்பட வேண்டும் என்கிறது சட்டத் திருத்தம். சிறிய அளவிலான இந்தத் திருத்தம் மட்டும் போதாது; இன்னும் பல விஷயங்கள் இதில் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) எதிர்பார்க்கிறது. குறிப்பாக, ஸ்டெம் செல் சிகிச்சையில் வணிகத் தன்மை நுழைந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி, 2007, 2013, 2017-ம் ஆண்டுகளில் இந்த சிகிச்சையின்போது மருத்துவத் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் தெரிவித்தது. புதிய சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னால், மத்திய சுகாதார அமைச்சகம் ஐசிஎம்ஆரின் கடந்த ஆண்டு நெறிமுறைகளைக் கருத்தில்கொள்ளவில்லை; பல விஷயங்களில் ஐசிஎம்ஆரிடம் கலந்தாலோசிக்கவில்லை. இவைதான் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. ஸ்டெம் செல் சிகிச்சை தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு ஸ்டெம் செல்லிலிருந்துதான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. ரத்தம், கருமுட்டை, தொப்புள்கொடி, நச்சுக்கொடி, தொப்புள்கொடி ரத்தம், மாதவிலக்கு ரத்தம், எலும்பு மஜ்ஜை, தசை, தோல், கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம், மூளை போன்றவற்றில் ஸ்டெம் செல்கள் ஏராளமாக உள்ளன. இவற்றைப் பிரித்துப் பாதுகாத்து, பலதரப்பட்ட புற்றுநோய்கள், தன்தடுப்பாற்றல் நோய்கள் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம் என்கிறது நவீன மருத்துவம். ஸ்டெம் செல் சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது. இந்த செல்களை எந்த உறுப்புக்கு அனுப்புகிறோமோ, அந்த உறுப்பாகவே அவை வளர்ந்துவிடும். இதனால், உடலில் பாதிப்படைந்த உறுப்பு சீராகிவிடும். இதுவரை 20-க்கும் மேற்பட்ட தீரா நோய்களுக்கு இந்த சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. ஆனால், இதற்கு ஆகும் செலவு பல லட்சங்களைத் தாண்டுகிறது. இந்தியாவில் சுமார் 500 மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை அல்லது தொப்புள்கொடி ரத்தம் மூலம் ஸ்டெம் செல்களைப் பெற்று சிகிச்சைக்குப் பயன்படுத்துவது, தற்போது நடைமுறையில் உள்ளது. மற்ற ஸ்டெம் செல்களைப் பயன்படுத்துவது ஆராய்ச்சி மற்றும் சோதனை நிலையில் மட்டுமே உள்ளது. இவற்றின் பலன்கள் இன்னும் உறுதிப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. ஐசிஎம்ஆரின் அக்கறை நாட்டில் எந்தவொரு மருத்துவத் தொழில்நுட்பம் புதிதாக நுழைந்தாலும், அதில் அறம் மறைந்த வணிகத் தன்மையும் நுழைந்துவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதை ஐசிஎம்ஆரே ஒப்புக்கொண்டுள்ளது. வாடகைத் தாய் தொழில்நுட்பத்திலும் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சையிலும் வணிகச்சூழல் புகுந்துகொண்டது இதற்குச் சமீபத்திய உதாரணங்கள். ஸ்டெம் செல் சிகிச்சை இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகிவருகிறது என்பதால், இதுகுறித்த விழிப்புணர்வு படித்தவர்களுக்கே அவ்வளவாக இல்லை. இதைப் பயன்படுத்தி, சில மருத்துவமனைகள் ஆராய்ச்சி நிலையில் உள்ள ஆட்டிஸம், அல்சைமர் போன்ற மரபு சார்ந்த நோய்களுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்கும் எனும் நம்பிக்கையைப் பயனாளிகளுக்கு ஏற்படுத்திப் பணம் பறிப்பதாக, ஐசிஎம்ஆரின் பொதுத் துணை இயக்குநர் கீதா ஜோட்வாணி தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவித்துள்ள மூன்று கருத்துகள் நம் கவனத்துக்குரியவை: இன்றைக்கு நாட்டில் தொப்புள் கொடி ரத்தத்தைச் சேமிக்கும் தனியார் வங்கிகள் பெருகிவருகின்றன. ரத்ததானம் பெறுவதுபோல், அடுத்தவரிடம் ரத்தம் பெற்றும் ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுக்கலாம். அப்போது வசதி படைத்தவர்களுக்குத் தேவையானால் அதை ஏழைகளிடமிருந்து பெறும்வகையில் இது பெரு வணிகமாகலாம். ஸ்டெம் செல்களைச் சரியாகப் பாதுகாக்கவில்லை என்றாலோ, முறையாகப் பயன்படுத்தவில்லை என்றாலோ, பயனாளிக்குச் சரிப்படுத்த முடியாத அளவுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படவும், உயிருக்கே ஆபத்து உண்டாகவும் அதிக வாய்ப்புள்ளது. இன்னொன்று, பல தனியார் தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு வங்கிகள், ‘பிரசவம் முடிந்ததும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைத்தால், பின்னாளில் அந்தக் குழந்தைக்குப் புற்றுநோய் அல்லது தடுப்பாற்றல் தொடர்பான பரம்பரை நோய்கள் ஏற்படுமானால் அதைத் தொப்புள்கொடி ரத்தம் மூலம் சரிப்படுத்தலாம்’ என்று விளம்பரம் செய்கின்றன. இதை நம்பி பொருளாதார வசதிபடைத்தவர்கள் பலரும் பல லட்சங்கள் செலவழித் துத் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமிக்க முன்வருகின்றனர். ஆனால், இந்த விளம்பரங்களை நம்புவதற்கு எந்த வித அறிவியல் ஆதாரங்களும் இதுவரை இல்லை என்றும், இந்தியாவில் இவ்வாறு சேமிக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தத்தைப் பரிசோதனை முயற்சியாக, அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிச் சோதித்தபோது, அந்த ரத்தத்தில் ஸ்டெம் செல்கள் உயிரோடு இல்லை எனப் பதில் வந்தது என்றும் கீதா ஜோட்வாணி உண்மையை உடைத்துள்ளார். சட்டத்தில் முரண்! மத்திய சுகாதார அமைச்சகம், ‘ஸ்டெம் செல்களை மருந்தாகப் பயன்படுத்தலாம்’ என்று சொல்வதே ஒரு முரண். இது வேதிப்பொருளால் ஆன ஒரு மருந்து இல்லை; இது ஓர் உயிர்ப் பொருள். இதைத் தவறாகப் பயன்படுத்தும்போது, அதன் விளைவுகள் எல்லோருக் கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்; விபரீதமாகவும் இருக்கும். எனவேதான், ஐசிஎம்ஆர் ஸ்டெம் செல் சிகிச்சைக்குக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவந்தது. மேலும், இந்தியா வில் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கும் சிகிச்சைக்கும் என்றே தொடங்கப்பட்டுள்ள ‘தேசிய உச்சமட்டக் குழு’விடம் பதிவுசெய்து, முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்திவந்தது. ஆனால், இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், தொலைக்காட்சி ஊடகங்களில் வரும் ஒற்றை வரிச் செய்தியைப் போல், ‘ஸ்டெம் செல்லை ஒரு மருந்தாகப் பயன்படுத்தலாம்’ என்று பொத்தாம் பொதுவாக மத்திய அமைச்சகம் அறிவித்திருப்பது பல்வேறு முறைகேடு களுக்கே வலுசேர்க்கும் என்று ஐசிஎம்ஆர் அச்சப்படு கிறது. ஸ்டெம் செல் சிகிச்சையிலும் நெறிமுறைகள் நொறுக்கப்பட்டு, வணிகச்சூழல் வளர்ந்து, மக்கள் ஏமாறுவதற்குள், மத்திய அரசு இதற்கான சட்டநெறிகளை இன்னும் விரிவுபடுத்தித் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். - கு.கணேசன், பொது நல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts