Saturday 7 July 2018

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும் By சொ. அருணன் | மனித மூளையின் செயற்பாடுகளைக் கொண்டே கணிப்பானும் கணினியும் கண்டறியப்பட்டன. மூளையோடு மனமும் இணைந்து செயல்பட உதவும் கணக்கீடே எண்ணங்களின் தோற்றமாகும். எண்களின் கூட்டே எண்ணமாகத் தோன்றிப் பின்னர் எழுந்து மொழியாக வெளிப்படுகிறது. அதனால்தான் "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு' என்று தெய்வப்புலவர் பாடினார். இதனையே, "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்னும் முதுசொல்லும் உறுதிப்படுத்துகிறது. காணும் பொருளை- உயர நீள அகலங்களிலும் வண்ணங்களின் வேறுகளிலும் பருமப் பொருண்மையிலும் கண்கள் கணக்கிட்டே மூளைக்குத் தகவல்களை அனுப்புகின்றன. அதற்குக் குத்துமதிப்பு என்று பெயருண்டு. தோராயம் எனவும் அது வழங்கப்படும். எந்தக் கருவியின் உதவியுமின்றிக் கண்களே அளவிடுவதால் அப்பெயர் வந்தது. அதனால்தான் "கண்ணளக்காததையா கையளக்கப் போகிறது?' என்று கிராமத்தில் கண்ணளவை அளவீடாகவே குறிப்பிடுவார்கள். வானத்தைப் பார்த்துக் காலத்தைக் கணக்கிடுவதும் பருமனைக் கொண்டு எடையைக் கணக்கிடுவதும் இந்தக் கணக்கீட்டைக் கொண்டுதான். இவற்றுக்கெல்லாம் உறுதுணையாக விளங்குவது வாய்ப்பாடு என்னும் அடிப்படைக் கணித முறைப் பயிற்சியேயாகும். தொடக்கப் பள்ளிகளில் இன்றுவரை அடிப்படைப் பாடம் வாய்ப்பாடு படிப்பதுதான். பெயருக்கேற்றாற் போலவே அது வாய்ப்பாட்டு வகுப்புத்தான். இசையோடு கூடிய கணக்குப் பாடம் முறை. இப்படிப் படிக்கிறபோது இலக்கணமும் சேர்ந்து கணக்குக்குள் அடங்கும். இதற்கு மகாகவி பாரதியாரே சான்றாவார். கணக்குப் பாடம் நுழையாத அவர் மனத்தில் கவிதை, கணக்கீட்டு வடிவில் குடிகொண்டது. "கணக்கு- பிணக்கு- ஆமணக்கு' என்று சொற்கணக்காடியவர் அவர். அடிப்படையில் தமிழ் மொழியமைப்பே கணக்கீட்டு முறையில் அமைவதுதான். உயிர், மெய், உயிர்மெய், நெடில், குறில் என்றவாறாக ஒன்றோடொன்று கலந்து எழுத்துக்கள் பிறக்கின்றன. அதனால்தான் எண்ணையும் எழுத்தையும் ஒன்றுபடுத்தி கூட்டிக் கண்களுக்கு ஒப்பாக்கினர். கணினி யுகத்தில் கருவிகளின் வளர்ச்சியால் கணக்கீட்டு முறை மெதுவாக மனத்தை விட்டு அகன்று வருகிறது. எதற்கெடுத்தாலும் கணிப்பானையும் கணினியையுமே நம்பியிருப்பவர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களுள் அதிகமானவர்கள் மாணவர்கள் என்பதுதான் வருத்தமான செய்தி. 1,98,227 என்பதை ஒரு இலட்சத்து தொன்னூற்று எட்டாயிரத்து இருநூற்று இருபத்து ஏழு என்பதை எழுத்தால் எழுதத் தெரியாதவர்கள் ஒன்று ஒன்பது எட்டு இரண்டு இரண்டு ஏழு என்று தனித்தனி எண்களாகச் சொல்லிக் கொண்டிருப்பதையும் கேட்க முடிகிறது. வாய்ப்பாடு என்பது கருவிப்பாடாக மாறிவிட்ட காலத்தின் கொடுமையால் நேர்ந்த விளைவிது. கணித மூளையுடைய மனிதர்கள் வெகுவாகக் குறைந்து வருகிறார்கள். ஆனால், அதே சக்தியையுடைய இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. இன்றைய சூழலில் பல்பொருள் அங்காடிகளில் விற்பனை எல்லாமே கணினிப் பயன்பாட்டில்தான். எந்தப் பொருளை எடுத்தாலும் ஒரு கருவிக்கு முன்னால் அதைக் காட்டினால் போதும். மொத்தப் பொருளுக்கான விலைகளையும் ஒன்று கூட்டித் தொகையைக் கணக்கிட்டு - வாங்குபவர் செலுத்தும் தொகையையும் கணக்கிட்டு - மீதம் தர வேண்டிய பாக்கியையும் குறித்துக் காட்டுகிறது. என்னே பொறியியலின் அற்புதம்? ஆனால் இயற்கை என்று ஒன்று இருக்கிறதே. ஒரு பல்பொருள் அங்காடியில் ஏதோ மின்சாரக் கோளாறு போலிருக்கிறது. எந்தக் கணினியும் இயங்கவே இல்லை. வேறு வழியில்லாமல் கணக்குப் புத்தகத்தில் விலைச்சீட்டினைத் தயார் செய்கிறார்கள். விற்பனைப் பிரதிநிதிக்குக் கைகள் நடுங்குகின்றன. கணினியின் விசைப்பலகையையே தட்டித் தட்டிப் பழக்கப்பட்ட கைகளல்லவோ அவை. அத்தனை சீக்கிரம் எழுதி விட முடியுமா என்ன? ஒருவாறு பட்டியல் தயாரானதும் அடுத்து, கூட்டுத் தொகைக்கு நகர்கிறது மூளை. கணக்கீடு உதைக்கிறது. உடனே அடுத்த பொறியாகிய கணிப்பானைத் தேடுகின்றன கைகள். என்னே கொடுமை? அதுவும் சதி செய்கிறது. எந்தக் கணிப்பானும் இயங்கவில்லை என்ற நிலையில் சுயகணக்கீட்டில் விலைச்சீட்டினைத் தயார் செய்யச் சொல்லி மேலாளர் ஆணையிடுகிறார். கணக்கீடு மறுபடி தகராறு செய்கிறது. எண்கள் வெறும் எண்களாகத் தெரிகின்றனவே ஒழிய கூட்டல் என்னும் விதிக்குள் அவை கணிய மறுக்கின்றன. மனம் பதறுகிறது. வாடிக்கையாளர் கூட்டமோ வரிசையில் நின்று கொண்டு உரக்கச் சப்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய சமுதாய நிலை. எத்தனைதான் நாம் அறிவியலில் வளர்ந்தபோதும் அதைப் புறத்தே - கருவிகளின் துணையால் பயன்படுத்துவதில் ஏதும் பயனேயில்லை. அதே அறிவை உளத்தில் - மூளையில் நிலைநிறுத்துவதே நம்முடைய முன்னோர் காட்டிய மரபு. எண்களிலிருந்துதான் எண்ணங்கள் பிறக்கின்றன. எண்ணங்களில் இருந்துதான் எழுத்துக்களாலாகிய மொழி தோன்றுகிறது. மொழி புதிய பல சிந்தனைகளுக்கு வித்திடுகின்றது. வாழும் உயிர்களாகிய அடுத்த தலைமுறைக்குக் கண்களைப் போன்ற எண்களாகிய கணிதத்தையும் எழுத்தாகிய இலக்கியத்தையும் கற்றுக் கொடுக்காமல் இயந்திரங்களுக்கு ஆணையிடும் இயந்திரத்தனத்தையே கற்றுத் தரப் போகிறோமா என்ன?

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts