Wednesday 4 July 2018

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் அங்கனூர் கிராமத்தில் 5 பேர் கொண்ட குடும்பத்தில் தலைப்பிள்ளையாகப் பிறந்தவர் (17.8.1962) திருமாவளவன். அப்பா பெயர் இராமசாமி. ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன், தந்தை இராமசாமியும் தன் பெயரை தொல்காப்பியன் என்று மாற்றிக்கொண்டதால், இரா.திருமாவளவன் பின்னர் தொல்.திருமாவளவன் ஆனார். சுற்றுப்புறத்தில் உயர்நிலைப் பள்ளிகூட இல்லாத சூழலிலிருந்துதான் உருவானார் திருமாவளவன். சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதி யியல், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., குற்றவியல், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்தார். சமீபத்தில் முனைவர் ஆனார். ஆனாலும், ‘படிப்பைவிட வாசிப்பே என்னை வளர்த்தது’ என்பார். திருமாவளவனின் தொடக்க ஆசிரியர் பெ.பெரியசாமி. அரசியல் உணர்வு ஊட்டியவர். மாதந்தோறும் வகுப்பறையில் மாதிரி சட்டசபை நடத்துகிறபோது, திருமாவை முதல்வராக்கி அழகுபார்த்தவர் பெரியசாமி. பின்பு, தன்னுடைய மகனுக்கே ‘திருமாவளவன்’ என்று பெயர் வைக்கும் அளவுக்குச் சிறந்த மாணவனாக வளர்ந்தார் திருமாவளவன். திமுகவில் இருந்திருக்க வேண்டிவர் திருமா. கருணாநிதியின் பேச்சு, முரசொலி கடிதங்கள், ‘முத்தாரம்’ இதழில் அவர் எழுதிய ‘பேச்சுக்கலையை வளர்ப்போம்’ எல்லாவற்றையும் தவறாமல் வாசித்த அவர், திமுக மாணவரணி ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் எல்லாம் பங்கேற்றார். அம்பேத்கர் அளவுக்குப் பெரியாரையும் உள்வாங்கியவர். இன்னமும்கூட திராவிட இயக்கத்துக்கு வெளியே இருக்கும் திராவிடத் தூண் என்றே திகவினர் திருமாவளவனைக் குறிப்பிடுவது உண்டு. அரசுப் பணி (தடய அறிவியல் துறை) கிடைத்து, மதுரைக்கு வந்தது திருமாவளவனின் வாழ்வின் திருப்புமுனை. ‘பாரதிய தலித் பேந்தர்’ இயக்கத்தின் தமிழ் மாநில அமைப்பாள ரான மலைச்சாமியுடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் திரு மாவளவன். 1992-ல் அதன் பெயரை ‘விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம்’ என்று மாற்றினார். தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாத திருமாவளவனை, பொது நீரோட்டத்தில் கலக்க வைத்தவர் ஜி.கே.மூப்பனார். 1999-ல் மூப்பனார் ஏற்படுத்திய மூன்றாவது அணியின் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அப்போதுதான் அரசுப் பணியைவிட்டும் விலகினார். திருமாவளவனிடத்தில் தனிப்பட்ட ஓர் உறவைக் கொண்டிருந்தவர் கருணாநிதி. ஓர் உதாரணம், 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை மாவட்டம், சமயநல்லூர் தொகுதியைக் கேட்டு வாங்கினார் திருமா. ஆனால், விழுப் புரத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திருமாவளவனிடம் எதுவும் சொல்லாமலேயே ‘மங்களூர் தொகுதியில் போட்டியிடுவார்’ என்று அறிவித்துவிட்டார் கருணாநிதி. ‘அந்தத் தொகுதியைவிட மங்களூரில்தான் வெற்றிவாய்ப்பு அதிகம்’ என்று உளவுத் துறை மூலம் தெரிந்துகொண்டதே காரணம். மக்களவை உறுப்பினராக இருந்தபோது தனது பேச்சாற்றலால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடங்கி, காவிரிப் பிரச்சினை வரையில் தமிழர் உணர்வுகளை உரக்கப் பேசினார் திருமாவளவன். நாடாளுமன்றத்தின் 60-வது ஆண்டையொட்டி, மக்களவை யில் தமிழில் பேசிய உணர்வாளர். கட்சித் தலைவர் என்ற முறையில் அதிகாரத்தையோ, ஆதிக்கத்தையோ தொண்டர்கள் மீது செலுத்தாதது இவரது தனித்தன்மை. எவ்வளவு நெருக்கடியான சூழலிலும்கூட, கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் ஆத்திரப்படாமல் பேசுபவர். வெறுமனே மகளிரணியோடு நிறுத்திவிடாமல், கட்சி யின் மாவட்டச் செயலாளராகவே பெண்களை அமர்த்தியவர். அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்குக் குரல்கொடுத்தவர். திருமாவளவனின் 20-வது வயதிலேயே திருமணப் பேச்செடுத்தார்கள் பெற்றோர். இதோ, அதோ என்று இழுத்தடித்தவர் வாழ்க்கையையே இயக்கத்துக்காகவும் பொது வாழ்க்கைக்காகவும் அர்ப்பணித்துவிட்டார். சுவர் விளம்பரம் எழுதுவது, ஓவியம் தீட்டுவது, கவிதை, பாடல்கள் எழுதுவது எல்லாவற்றிலும் ஆர்வம் கொண்டவர். விசிகவின் ஆரம்ப நாட்களில் எல்லாவற்றிலும் திருமாவளவனின் கைவண்ணத்தைப் பார்க்க முடியும். நான்கு திரைப்படங் களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று கருணாநிதி அறிவிப்பதற்குத் திருமாவளவனும் ராமதாஸுமே காரணம். மாட்டுக்கறிக்காகக் குரல் கொடுத்தாலும் சாப்பாட்டில் திருமா வளவன் சைவர். சென்னை யில் இருந்தால் அக்கா வீட்டிலிருந்து சாப்பாடு வரும். கட்சித் தோழர்கள் கோழி, மீன் என வெட்ட, ‘ரசம் சோறு அமிர்தம்’ என்பார் திருமாவளவன். தலித் தலைவராக அறியப்பட்டாலும், தலித் அல்லாத சமூகத்தினரையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் போன்ற மதச் சிறுபான்மையினரையும் எப்படியாவது ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்பதில் பெரும் முனைப்புடையவர் திருமாவளவன். மதுரை மாநகராட்சித் தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையா தேவரின் மகனை விசிகவின் மேயர் வேட்பாளராக நிறுத்தினார். அதேபோல, வடமாவட்டங்களில் தலித் மக்கள் அதிகமுள்ள பகுதியில் வன்னியரைக் கொண்டும், வன்னியர்கள் அதிகமுள்ள பகுதியில் தலித்துகளைக் கொண்டும் கட்சிக்கொடியை ஏற்றி, ஒரு சமநிலையைக் கொண்டுவர முயன்றார். ஆண்டுதோறும் அம்பேத்கர், பெரியார், காமராஜர், காயிதே மில்லத் பெயர்களில் விசிக வழங்கப்படும் விருதுகள் இந்த முனைப்பை வெளிப்படுத்துபவை. 2011-ல் மருத்துவர் ராமதாஸுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்பட்டது ஓர் உதாரணம். தொகுப்பு: கே.கே.மகேஷ்

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts