உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. ஏறக்குறைய 96 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சீனா, பரப்பளவில் ரஷ்யா மற்றும் கனடாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடாகும். இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகளில், இது ஐந்தாவது பெரிய நாடாகத் திகழ்கிறது. உலகிலேயே அரிதான கனிமங்களில் 60% முதல் 90% வரையிலான கனிமங்கள் சீனாவில் கிடைக்கின்றன.
சீனாவின் முக்கிய சவால்கள்:
சீனா தற்போது பல சவால்களை எதிர்கொள்கிறது:
- மக்கள்தொகை நெருக்கடி
- பொருளாதார மந்தநிலை
- சுற்றுச்சூழல் பிரச்னைகள்
- வேலைவாய்ப்பு மற்றும் சமூக சமத்துவமின்மை
- அமெரிக்காவால் உருவாகியுள்ள சர்வதேச வர்த்தகப் பதற்றங்கள்
- அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டி மனப்பான்மை
மனித வளத்தின் பங்களிப்பு:
வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனா, நீண்டகாலமாக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தது. தன் மனித வளத்தைப் பாதுகாப்புக் கேடயமாகவும், கூரிய வாளாகவும் கருதி, தேசிய சக்தியாக மாற்றி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானம்:
சீனாவின் வட எல்லையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவர், கிழக்கில் ஷான்ஹைகுவான் முதல் மேற்கில் ஜியாயுகுவான் வரை 21,196 கி.மீ. நீளம் கொண்டது. சராசரியாக 7.88 மீட்டர் உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்டமான கட்டுமானத்தை, சீனா தன் மனித வளத்தை மட்டுமே கொண்டு கட்டி எழுப்பி உலகை வியக்க வைத்தது.
மஞ்சள் நதி துயரம் மாறியது:
ஒரு காலத்தில், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல லட்சம் மக்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்த மஞ்சள் நதி, 'சீனாவின் துயரம்' என்று அழைக்கப்பட்டது. ஆனால், சீனா தன் மனித சக்தியைப் பயன்படுத்தி, மஞ்சள் நதியில் மாபெரும் பாசனத் திட்டங்களை உருவாக்கி, இந்தச் சவாலை எதிர்கொண்டது.
தற்போதைய பெருந்துயரம்: மக்கள்தொகை சரிவு
இப்போது சீனாவின் துயரம் மஞ்சள் நதி அல்ல; மாறாக, சரியும் மக்கள்தொகைதான். இதற்குப் பின்வரும் காரணிகள் உள்ளன:
- பல்லாண்டுகளாகக் கடைப்பிடித்த 'ஒரே குழந்தை கொள்கையின்' விளைவுகள்.
- திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு குறித்த அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
- குழந்தைகளை வளர்ப்பதற்கான அதிக செலவுகள்.
- குழந்தை பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டாதது.
- பொருளாதார நெருக்கடி, வேலைப்பளு, மற்றும் விலைவாசி உயர்வு.
பிறப்பு விகிதமும் மக்கள்தொகை நிலையும்:
- 1949-ல் மாவோ சே துங் தலைமையில் கம்யூனிசப் புரட்சிக்குப் பிறகு, கடந்த 2025-ஆம் ஆண்டில் மிகக் குறைந்த பிறப்பு விகிதமான 5.63 சதவீதம் பதிவாகியுள்ளது. இது சீன அரசுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 1957-இல் 60 கோடியாக இருந்த மக்கள்தொகை பலம் என்று மாவோ சே துங் கருதினார். ஆனால், 1970-களின் பிற்பகுதியில் ஏற்பட்ட பஞ்சங்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, மக்கள்தொகை வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமோ எனத் தலைவர்கள் அஞ்சினர்.
- கடந்த 2025-இல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 79.2 லட்சம். இது முந்தைய 2024-ஆம் ஆண்டைவிட 16.2 லட்சம் (17%) குறைவு. 2023 வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் சரிந்து வந்தது.
- 2023-இல் உலக மக்கள்தொகையில் இந்தியாவிடம் பின்தங்கிய சீனா, தற்போது தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக மக்கள்தொகை சரிவைச் சந்தித்து வருகிறது.
- 2025-ஆம் ஆண்டைய புள்ளிவிவரப்படி, சீனாவின் மக்கள்தொகை 140.4 கோடியாகக் குறைந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டைவிட வேகமான வீழ்ச்சி எனச் சீனாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தின் மீதான தாக்கம்:
- 2025-இல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவதால், வரும் ஆண்டுகளில் இது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குறைந்து வரும் மக்கள்தொகையுடன், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சீனாவுக்குப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. தொழிலாளர்கள் குறைந்து, அவர்களைச் சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆபத்தானது எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
- தற்போது, சீனாவில் 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 32.3 கோடியாக உள்ளது, இது மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதம். 2035-ஆம் ஆண்டுக்குள் இது 40 கோடியை எட்டும் என்றும், அப்போது மொத்த மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் முதியவர்களாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
- வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகை குறைவது, பொருளாதார வளர்ச்சியைச் சிக்கலாக்கும். ஒரு சிறிய பகுதியினர் ஓய்வூதியம், சுகாதாரத்துக்காகச் செலவிட்டால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் நெருக்கடியைச் சந்திக்கும், பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என உலகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், பணியாளர்கள் குறைவு, உற்பத்தி குறைவு, ஓய்வூதியச் செலவு அதிகரிப்பு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.
அரசின் நடவடிக்கைகள்:
குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது:
- குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு நேரடி ஊக்கத்தொகை வழங்குதல்.
- வரிச் சலுகைகள் அளித்தல்.
- திருமண சேவைகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கு வரிவிலக்கு அளித்து ஆதரவு தருதல்.
தொழில்நுட்பமும் வயதாகி வரும் நாடும்:
சீனாவின் ஸ்டெம் கல்வி (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) தேசிய முன்னுரிமையாக உள்ளது. உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்த சீனா, தற்போது உயர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கிறது. இதனால், நுகர்வோர் சார்ந்த பொருளாதாரத்தில் உயர் தொழில்நுட்ப தானியங்கி கருவிகள், உபரியாக உள்ள மனிதத் தொழிலாளர்களை ஏற்க மறுக்கின்றன. எனவே, உலகப் பொருளாதார நிபுணர்கள், 'சீனா வளம் பெறுவதற்கு முன்பே வயதாகி வருகிறது' என்று நகைக்கின்றனர்.
தலைவர் ஷி ஜின்பிங்கின் வலியுறுத்தல்:
சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங், "மக்கள்தொகை மேம்பாட்டு உத்தியை மேம்படுத்துதல் மற்றும் குடும்பங்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைத் தணித்தல்" ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
ஐ.நா. அறிக்கையும் இந்தியாவின் நிலைப்பாடும்:
- 2024 ஜூலையில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின்படி, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக 2023-ஆம் ஆண்டு இந்தியா முன்னேறியது.
- இந்தியாவின் மக்கள்தொகை 2054-இல் 169 கோடி என்ற உச்சத்தை அடைந்து, பிறகு குறையத் தொடங்கி 2100-இல் 150 கோடியாக இருக்கும்.
- தற்போது 141 கோடியாக உள்ள சீனாவின் மக்கள்தொகை, 2054-இல் 121 கோடியாகக் குறைந்து, நூற்றாண்டின் இறுதியில் 63.3 கோடியாக இருக்கும் என்ற ஐ.நா.வின் அறிக்கை சீனாவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மக்கள்தொகை சரிவின் விளைவுகள்:
ஒரு நாடு எவ்வளவு செழிப்பாகவும், தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்தாலும், மக்கள்தொகை குறைந்து கொண்டே போனால், பின்வரும் விளைவுகளைச் சந்திக்கும்:
- வயதானவர்கள் அதிகமாகவும், இளைஞர்கள் குறைவாகவும் இருப்பார்கள்.
- குழந்தைகள் குறைவதால், பள்ளிகள், கல்லூரிகளின் தேவை குறையும்.
- எல்லா உற்பத்தியும் தானியங்கி கருவிகளையே நம்பியிருக்கும்.
- நாட்டின் வரி வருவாய் குறைந்து விடும்.
- இளைஞர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறினால் நிலைமை மேலும் மோசமாகும்.
- பல வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்.
- இளைஞர்கள் இல்லையென்றால் புதிய சிந்தனை, கடின உழைப்பு இருக்காது.
- இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்தால், அது நாட்டின் வருங்காலப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் சவாலாக இருக்கும்.
சீனாவைப் போலவே, ஐரோப்பிய நாடுகளும் மக்கள்தொகை சரிவு பிரச்னையைச் சந்தித்து வருகின்றன. மருத்துவக் காரணங்களைத் தாண்டி, சுதந்திர மனப்பான்மை, பொருளாதாரச் சுமை போன்ற பல பிரச்னைகள் எதிர்காலத்தில் இந்தியா உட்பட உலக நாடுகளில் ஏற்படலாம். எனவே, சீனாவின் இந்தப் பெருந்துயரம் மற்ற நாடுகளுக்கு ஒரு பாடத்தை அளித்துள்ளது. மக்கள்தொகை வீழ்ச்சிச் சவாலை பெய்ஜிங் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.


0 Comments