Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

குற்றங்களின் பரிணாம வளர்ச்சியும் குற்றப் புலனாய்வில் செயற்கை நுண்ணறிவின் பங்கும்


குற்றங்களின் தோற்றம் மற்றும் ஆரம்பகால சமூகக் கட்டுப்பாடுகள்

மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த ஆதிகாலத்தில் இருந்தே தாக்குதல் மற்றும் பொருள்களைப் பறித்தல் போன்ற செயல்கள் நடந்துள்ளன. தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் காத்துக் கொள்வதற்காக ஆதி மனிதர்கள் அத்தகைய தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். எனினும், அந்தக் காலத்தில் அவை சட்டமீறல்களாகவோ அல்லது குற்றச் செயல்களாகவோ கருதப்படவில்லை.

நாடோடிகளாக வாழ்ந்தவர்கள் காலப்போக்கில் குழுக்களாகவும், பின்னர் சமுதாயமாகவும் ஒருங்கிணைந்து வாழத் தொடங்கினர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டபோது, சேமிப்பு மற்றும் சொத்துரிமை போன்றவை உருவாயின. இதன் விளைவாக, திருட்டு, நிலத்தகராறு, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் வன்முறை, சமுதாய கட்டமைப்பு மீறல்கள் போன்ற செயல்கள் சமுதாயத்தில் நிகழத் தொடங்கின.

இந்தத் தீங்கு விளைவிக்கும் செயல்களை 'குற்றம்' என்ற கண்ணோட்டத்தில் அணுகும் சட்ட ரீதியான நடைமுறை அந்தக் காலத்தில் இருக்கவில்லை. மாறாக, தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப உடல் உறுப்புகளைக் கழித்தல், சமுதாயத்தில் இருந்து வெளியேற்றுதல் உள்ளிட்ட சமூகக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன.

மன்னராட்சியில் சட்டங்களும் தண்டனைகளும்

மனித சமுதாயத்தின் வளர்ச்சியுடன் குற்ற நிகழ்வுகளின் தன்மை மற்றும் அதற்கான காரணங்கள், நிகழ்த்தப்படும் முறைகள், எதிர்கொள்ளும் முறைகள் ஆகியவற்றில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் ஏற்பட்டன. மன்னர்களின் ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தபோது, குடிமக்களின் நலனில் மன்னர்கள் கவனம் செலுத்தினர். சமுதாயத்தில் நிலவிவந்த குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் குறித்த விதிகள் வகுக்கப்பட்டன.

பண்டைய இந்தியாவில், மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்களில் திருட்டு, தாக்குதல், மோசடி, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பழம்பெரும் நாகரிகமான பாபிலோனில், கி.மு. 18-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஹம்முராபி சட்டத்திலும் பல்வேறு குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் பற்றிய விதிகள் இடம்பெற்றுள்ளன.

தொழில்புரட்சியும் குற்றப் புலனாய்வின் வளர்ச்சியும்

மனித சமுதாயத்தின் வளர்ச்சியுடன் பல்வேறு வகையான குற்ற நிகழ்வுகளும் அதிகரித்தன. குறிப்பாக, 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய தொழில்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட நகரமயமாக்கல், குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையைச் சமுதாயத்தில் அதிகரிக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து, குற்றங்கள் மீது துப்பு துலக்கி உண்மை கண்டறியும் குற்றப் புலனாய்வு முறையானது சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

உலகிலேயே முதன்முதலில் தொழில்முறை குற்றப் புலனாய்வு அமைப்பானது 1749-ஆம் ஆண்டில் பிரிட்டனின் லண்டன் நகரில் தொடங்கப்பட்டது. 'போ ஸ்ட்ரீட் ரன்னர்ஸ்' என்றழைக்கப்பட்ட இந்த அமைப்பை, லண்டன் நகரில் உள்ள போ ஸ்ட்ரீட் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஹென்றி ஃபீல்டிங் ஏற்படுத்தினார். லண்டன் நகரில் திருட்டு, கொலை, சாலை வழிப்பறி போன்றவை அதிகரித்ததைத் தொடர்ந்து, குற்றங்கள் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாகச் சென்று, துப்பு துலக்கி குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியை போஸ்ட்ரீட்ரன்னர்ஸ் மேற்கொண்டனர். மேலும், குற்றவாளிகள் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய பதிவேடுகளையும் அவர்கள் பராமரித்தனர். 1829-ஆம் ஆண்டில் லண்டன் மெட்ரோபொலிடன் காவல் அமைப்பு உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, போஸ்ட்ரீட்ரன்னர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதில் இணைக்கப்பட்டனர்.

அறிவியல் அடிப்படையிலான புலனாய்வு முறைகள்

குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தல், சேகரித்த ஆதாரங்களை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்தல், ஆய்வின் முடிவுகளை நீதிமன்றத்தில் சாட்சியமாக சமர்ப்பித்தல் போன்றவற்றுக்கு அறிவியலைப் பயன்படுத்தும் முறை 19-ஆம் நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக, கைவிரல் ரேகை ஆய்வு, டி.என்.ஏ. பரிசோதனை, ரத்தம், முடி போன்ற உயிரியல் ஆதாரங்களின் ஆய்வு, கையெழுத்து ஆய்வு, உடற்கூறு ஆய்வு போன்றவற்றை குற்றப் புலனாய்வில் பயன்படுத்தும் முறைகள் நடைமுறைக்கு வந்தன.

நவீன குற்றங்களும் செயற்கை நுண்ணறிவின் பங்கும்

தற்போதைய சூழலில், கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு போன்றவை பொதுமக்களின் பயன்பாட்டில் அதிகளவில் இருந்து வருகின்றன. இதனால், சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள், அடையாளத் திருட்டு, மப்-பேசி தொழில்நுட்பக் குற்றங்கள் போன்றவை சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அதிகரித்துவரும் நவீன குற்றங்களில் விரைந்து துப்பு துலக்குவதற்கும், குற்றங்கள் நடைபெறும் இடங்களை முன்கூட்டியே கவனித்து குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
  • குற்றத் தடுப்பு: கடந்த காலங்களில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான தரவுகளை (இடம், நேரம், குற்றம் நடைபெற்ற முறை) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பகுப்பாய்வு செய்து, குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகள் மற்றும் நேரங்களை முன்கூட்டியே கணிக்கிறது. அது தொடர்பான முன் எச்சரிக்கையை காவல் துறைக்கு உரிய நேரத்தில் வழங்கி, குற்றங்களைத் தடுக்க உதவுகிறது.
  • குற்றவாளி அடையாளம் காணல்: தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் தொழில்முறை குற்றவாளிகளைப் பொது இடங்களில் அடையாளம் கண்டு, அவர்களால் நிகழ்த்தப்படும் குற்றங்களைத் தடுப்பதற்கு முக அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.
  • இணையவழிக் குற்றத் தடுப்பு: இணையவழி மோசடி, போலி மின்னஞ்சல் மோசடி, வங்கி மோசடி தொடர்பான சந்தேகமான பரிவர்த்தனைகளைச் செயற்கை நுண்ணறிவு உடனடியாகக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களை உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்வதன் மூலம், இணையவழிக் குற்றங்களால் ஏற்படக்கூடிய பெரும் இழப்பைத் தடுக்கிறது.
  • வன்முறைச் சம்பவத் தடுப்பு: சமூக ஊடகங்களில் உள்ள பதிவுகளைச் செயற்கை நுண்ணறிவு ஆய்வு செய்து, மிரட்டல், வெறுப்புப் பேச்சு, கலவர அறிகுறி போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க துணைபுரிகிறது.
  • போக்குவரத்துக் குற்றத் தடுப்பு: விபத்து அதிகளவில் நடைபெறும் இடங்கள், அதிக வேகம் மற்றும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, விபத்துகளால் ஏற்படக்கூடிய குற்றங்களைத் தடுக்கும் விதத்தில் போக்குவரத்து காவல் துறைக்கு உரிய தகவல்களைச் செயற்கை நுண்ணறிவு வழங்குகிறது.
  • புலனாய்வுக்கு உதவுதல்:
    • குற்றம் நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்கள் போன்ற தரவுகளை ஆய்வு செய்து, குற்றம் நடைபெற்ற விதத்தை செயற்கை நுண்ணறிவு தெளிவுபடுத்துகிறது.
    • குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பல மணி நேர சிசிடிவி காட்சிகளைச் சில நிமிடங்களில் ஆய்வு செய்து, சம்பவ இடத்தில் சந்தேகமான முறையில் தென்படும் நபர்கள், வாகனங்கள் மற்றும் பொருள்கள் குறித்த தகவல்களைப் புலனாய்வு அதிகாரிகளுக்கு வழங்குகிறது.
    • குற்றப் புலனாய்வின் போது சந்தேகநபர்கள், தொலைபேசி பதிவுகள், நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றுக்கு இடையேயான தொடர்புகளை விரைவாகவும், துல்லியமாகவும் கண்டறியச் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.
செயற்கை நுண்ணறிவின் சவால்களும் மனித நுண்ணறிவின் தேவையும்

குற்றப் புலன் விசாரணையை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளச் செயற்கை நுண்ணறிவு உதவியாக இருந்தாலும், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைக்கு மாற்றாக இது அமையாது. தவறான தரவுகளைச் செயற்கை நுண்ணறிவு வழங்கி, புலன் விசாரணையைத் தவறாக வழிநடத்திச் சென்ற சம்பவங்களும் உண்டு.
  • ராபர்ட் வில்லியம்ஸ் வழக்கு (2020): அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரில் ஒரு கடிகாரக் கடையில் நடந்த திருட்டு வழக்கில், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த செயற்கை நுண்ணறிவை உள்ளடக்கிய முக அடையாளத்தைக் கண்டறியும் மென்பொருள், ராபர்ட் வில்லியம்ஸ் என்பவரைக் குற்றவாளியாகக் காட்டியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், உண்மையான குற்றவாளி வேறு நபர் என்பது பின்னர் தெரியவந்தது. தவறான குற்றத்தைச் சுமத்தி, கைது செய்ததற்காக ராபர்ட் வில்லியம்ஸுக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்கப்பட்டது.
  • போர்ஷியா வுட்ரஃப் வழக்கு (2023): அமெரிக்காவின் டெட்ராய்ட் காவல் துறையினர், வன்முறையைப் பயன்படுத்தி கார் ஒன்றைக் கடத்தியதாகச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் முக அடையாள மென்பொருள் குற்றவாளி என அடையாளம் காட்டிய எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணான போர்ஷியா வுட்ரஃப் என்பவரைக் கைது செய்தனர். சில மணி நேரத்திலேயே அவர் உண்மையான குற்றவாளி அல்ல என்பதை உணர்ந்து காவல் துறையினர் அவரை விடுதலை செய்தனர்.
குற்றப் புலன் விசாரணையில் துப்பு துலக்கப் பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறான குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சம்பவங்கள் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் நடந்துள்ளன. எனவே, செயற்கை நுண்ணறிவின் முடிவுகளை மனித நுண்ணறிவு சரி பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement