உணவும் ஆரோக்கியமும்: அலட்சியத்தின் விளைவுகள்
முன்னோர்கள், "உணவே மருந்து; இல்லாவிட்டால் மருந்தே உணவாகிவிடும்" என்று கூறினர். பசிப்பிணி இல்லாத நாட்டை விரும்பிய அவர்கள், உணவால் வேறு நோய்கள் வந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர்.
நாள்பட்ட ஆரோக்கியக் குறைபாடுகளுக்குக் காரணமான உணவு
தற்போதைய காலகட்டத்தில், நாம் உண்ணும் உணவே நமக்கு விஷமாகி வருகிறது. வீட்டில் சமைக்கும் உணவைச் சாப்பிடுவோர் ஓரளவு தப்பிக்கின்றனர். ஆனால், வணிகரீதியாக உணவகங்களில் விற்கப்படும் உணவுகள் உடலோடு மட்டுமல்லாமல், உயிரோடும் விளையாடுகின்றன.
வெளிநாட்டு உணவு மோகம்
நம் நாட்டின் தட்பவெப்பநிலைக்கும், நாம் வாழும் பகுதிக்கும் ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். ஆனால், நாவுக்குச் சுவையூட்டுவதாகவும், கண்ணுக்குக் கவர்ச்சியாகவும் தெரியும் வெளிநாட்டு உணவுகளைப் போலவே இங்குத் தயாரிக்கப்படும் உணவுகளைச் சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
அசைவ உணவின் ஆதிக்கம்
பலரும் சைவ உணவுகளை மறந்து, அசைவ உணவுக்கு அடிமையாகிவிட்டனர் என்றே கூறலாம். அசைவ உணவுகள் ஆரோக்கியம் அளிப்பதாகக் கூறப்பட்டாலும், அவற்றைப் பக்குவத்தோடு தயார் செய்து உண்டால் மட்டுமே பாதிப்பு இருக்காது.
உணவக உணவின் அபாயங்கள்
இன்றைய சூழலில், பல உணவகங்களில் விற்பனையை அதிகரிக்க, உணவுகளில் அளவுக்கு மீறிய ரசாயனம், தேவையற்ற சுவையூட்டும் பொருள்கள் கலப்பு, வாய் மற்றும் வயிற்றைப் புண்ணாக்கும் அதிக காரம், உப்பு, புளிப்பு போன்றவற்றைச் சேர்க்கின்றனர். இது உண்ணும்போது சுவையாக இருந்தாலும், உடனடியாகவோ அல்லது அடுத்த நாளோ ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தி மருத்துவமனைக்குச் செல்ல வைக்கிறது.
பிரியாணி கடைகளின் பெருக்கம்
வீதிக்கு வீதி தேநீர் கடைகள் இருப்பதுபோல, இப்போது தெருவுக்குத் தெரு பிரியாணி கடைகள் முளைத்துள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிரியாணிக் கடைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முட்டை, சிக்கன், மட்டன், மீன் போன்ற பிரியாணி வகைகளுடன், பிற உயிரினங்கள் சார்ந்த பிரியாணி வகைகளும் ரூ.100 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன.
சமயச்சடங்குப் பலகாரம் முதல் தினசரி உணவு வரை
சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமியப் பண்டிகைகளிலும், அவர்களின் இல்லத் திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளிலும் பிரியாணி இடம்பெற்றது. ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல், சங்கரன்கோவில் போன்ற பிரியாணிக்குப் பெயர் பெற்ற ஊர்களுக்குச் சென்றால் ஆசைக்காக உண்டு மகிழ்வோரும் உண்டு.
ஆனால், காலப்போக்கில், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள், பிறந்த நாள், திருமண நாள், காதணி விழா, நெடுநாள்களுக்குப் பிறகு சந்திப்பு என எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் அங்கு தவறாமல் இடம்பெறுவது பிரியாணியாகவே இருக்கிறது. தரமான உணவகங்களில் சாப்பிடுவோர் தப்பித்துக்கொள்கின்றனர்.
தரமற்ற உணவுப் பழக்கங்கள்
சில பிரியாணிக் கடைகளில், நாள்பட்ட இறைச்சியைப் பயன்படுத்துவது, குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் பாதுகாப்பின்றி வைத்திருப்பது, உயிரோடு வாங்கி வந்து இறைச்சியாகப் பயன்படுத்தாமல், இறந்தவற்றை குறைந்த விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவது போன்ற தவறான நடைமுறைகள் அரங்கேறுகின்றன. இது ஒருபுறம் இருக்க, நகரப் பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் குறைவான விலையில் 'கறி விருந்து' என்ற பெயரில் பல உணவகங்கள் செயல்படுகின்றன.
பொறுப்பற்ற கண்காணிப்பும் அலட்சியமும்
இறைச்சியை வாங்கிச் சென்று, சுத்தப்படுத்தி சமைத்துச் சாப்பிட சோம்பல்பட்டு, இவ்வாறான உணவகங்களை நாடிச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட அளவிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் ஆய்வுக்குச் செல்லும்போது குறைபாடுகளைக் கண்டறிந்து அபராதம் விதிக்கின்றனரே தவிர, தொடர்ந்து அந்தக் கடைகளைக் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அதிகாரிகளின் உத்தரவை ஓரிரு நாள்கள் மட்டும் செயல்படுத்தும் உணவகத்தினர், அதன் பிறகு தங்களுடைய வருவாயைப் பெருக்குவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். உணவகங்கள் மட்டுமல்லாமல், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் விடுதிகளிலும் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், அலட்சியம் காட்டுவதிலேயே பலரும் உள்ளனர்.
ஆயுட்காலம் குறைதலும் நோய்களும்
கலப்படமற்ற உணவுகளை உண்டோர் 85, 90 வயதுவரை வாழ்ந்தனர். அதற்கும் மேலாக 100 வயதைக் கடந்து வாழ்வோரும் உண்டு. ஆனால், தற்போதைய அவசர உலகில் ஆரோக்கியமற்ற துரித உணவுகளால் 45 வயதுக்குள்ளாகவே உடல்நலன் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகம். உண்ணும் உணவு செரிப்பதற்கு ஏற்ற உழைப்பு குறைந்துபோனது, உடல் ஆரோக்கியம் கெடுவதற்கும் உயிரிழப்புக்கும் காரணமாகிறது.
விழிப்புணர்வின் தேவை
அசைவ உணவு உண்டதால் மாணவர்களுக்குப் பாதிப்பு, பொதுமக்களுக்குப் பாதிப்பு என்று நாள்தோறும் வெளியாகும் செய்திகள், உணவின் மீதும், உணவகங்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது என்பதே உண்மை. வாழும் காலத்தில் மருத்துவமனையை நாடிச் செல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வழியைத் தேடினால் எந்தத் தொல்லையும் இல்லை. அதற்கு, சுவைக்கு அடிமையாவதைத் தவிர்த்து, ருசிக்காகத் தேடிச் செல்லாமல், பசிக்கு மட்டும் உண்டு வந்தால் என்றும் நலமுடன் இருக்கலாம்.


0 Comments