பூமியின் எதிர்காலம் நம் கைகளில்
பேராசிரியர் கே. ராஜு
உயிர் என்பது நமது கிரகத்தின் தனிச்சொத்து. உலக நாடுகளில் உயிரின் தன்னிகரில்லா பன்முகத் தன்மை இந்தியாவுக்கே உரியது. பல்வேறுவிதமான, வித்தியாசமான, அழகியல் ததும்பும் எண்ணற்ற ஜீவராசிகள், நம் நாட்டின் விரிந்து பரந்த நிலப்பரப்பு, ஆறுகள் மற்றும் கடல்களை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. இந்த உயிரியல் பன்முகத்தன்மை பல்வேறுவிதமான மக்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களுடன் ஒரு அழகிய திரைச்சீலையாக பின்னிப் பிணைந்திருக்கிறது.
இந்த தனித்தன்மை வாய்ந்த உயிரியல்-பண்பாட்டு திரைச்சீலை பல நூற்றாண்டுகளாக நெகிழ்திறனுடன் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, சுற்றுச்சூழல் சக்திகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் அதன் இருப்பு கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. இறுதியாக, உயிரியல், பண்பாடு, பழக்கவழக்கங்களாலான திரைச்சீலையை இந்த சக்திகள் அழித்துவிடக் கூடும். அதாவது நம்மையே அழித்துவிடக் கூடும்.
உயிரியல் வடிவங்களின் அழிவை உலகெங்கும் உள்ள உயிரியலாளர்கள் கவனமாகக் கவனித்து வந்திருக்கின்றனர். நமது புவியியல் வரலாற்றில் முன்பு இருந்ததைப் போல தற்போது உயிரினங்கள் அழிந்துவரும் வேகம் ஆயிரம் மடங்காகியிருக்கிறது. சமீபத்திய பத்தாண்டுகளில் பெரிய பாலூட்டிகளில் 40 சதத்திற்கும் மேலானவையும் பூச்சியினங்களில் 75 சதத்திற்கு மேலானவையும் அழிந்துவிட்டன. உலகெங்கிலும் உயிரினங்களின் இயற்கையான இருப்பிடங்கள் சுருங்கிவிட்டன. இந்த நட்டக்கணக்குகளில் உலகில் முதல் இடத்தைப் பிடிப்பது நம் நாடுதான்.
வரலாற்றில் `ஆந்த்ரபோசீன்' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கும் ஒரு புதிய யுகத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். மனிதர்கள் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதை அறிவிக்கிறது இந்த யுகம். நமது காடுகள் சீரழிந்து குறைந்து வருவதை, நமது ஆறுகள் மறைந்து வருவதை, நம்மைச் சுற்றியுள்ள காற்று சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிவருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் வாளாவிருக்கிறோம். கங்கை மட்டுமே மாசுபட்டிருப்பதுபோல கருதிக் கொண்டு கங்கையைச் சுத்தப்படுத்துவது பற்றி அடிக்கடி பேசுகிறோம். பூமியின் சுற்றுசூழல் முழுவதுமே பாழ்பட்டு வருவதை நாம் காணாததுபோல் இருக்கிறோம். அனைத்து உயிரினங்களுக்குமே இன்று அவசர சிகிச்சை தேவைப்படுகிறது.
பூமியில் உயிரைப் பாதுகாக்க அமெரிக்காவின் பிரபல உயிரியலாளர் ஈ.ஓ.வில்சன் "பாதி பூமி (Half-earth)" என்ற மிகப் பெரியதொரு திட்டத்தை முன்வைக்கிறார். வேகமாக மறைந்து கொண்டிருக்கும் நமது இயற்கைப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க பூமியின் நிலப்பரப்பில் பாதியையாவது பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டம். இதை பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதிக்காதவாறு நிறைவேற்ற வேண்டும். காடுகள் பற்றிய இந்தியக் கொள்கை நாட்டின் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என்கிறது. புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் போன்ற மற்ற இயற்கை அமைப்புகளையும் சேர்த்தால் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி 40 சதத்தை எட்டும். மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் இந்த 40 சத வளத்தைப் பாதுகாத்தாலே அது சாதனைதான்.
உயிரினங்களைக் கணக்கெடுத்து, வரைபடமாக்கி, கண்காணிக்க வேண்டுமெனில் அடிப்படையிலேயே வித்தியாசமான அணுகுமுறைகளுடன் கூடிய பிரம்மாண்டமானதொரு புதிய முயற்சி தேவைப்படுகிறது. இந்தப் புதிய முயற்சி மக்களுடைய பண்பாடுகள், இனங்கள், மொழிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினக் கூறுகளைப் பற்றி மட்டுமின்றி, உயிரினப் பன்மையின் பயன், நிலப் பயன்பாடு மற்றும் பருவநிலை மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறை நம்மிடம் உள்ளவை எவை, அவற்றில் மிகவும் ஆபத்துக்குள்ளானவை எவை என்ற பார்வையை நமக்குக் கொடுக்கும். காணாமல் போய்க்கொண்டிருக்கும் நமது இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் சமூகத்தின் வளர்ந்துவரும் தேவைகளையும் ஒன்றிணைப்பது எப்படி என்ற கேள்விக்கு நாம் விடை கண்டாக வேண்டும்.
உயிரியல் தொழில்நுட்பத் துறை, அறிவியல் தொழில்நுட்பத் துறை போன்ற இந்திய அறிவியல் கட்டமைப்பில் உள்ள நிறுவனங்கள் இந்தத் திசைவழியில் சிந்தனையைச் செலுத்தி அறிவியலையும் சமூகத்தையும் பரந்த கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கியுள்ளன. ஊர்கூடித் தேரிழுப்பது என்பார்கள். உலகமே ஒன்றாக எழுந்து நமது தாய்வீடான பூமியைப் பாதுகாக்கச் செயல்பட வேண்டிய தருணம் இது.
Thursday, 5 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment