Wednesday, 4 July 2018

’திறமை இருந்தால் எவரும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்!'- சோதனைகளைத் தாண்டி சாதித்த இலக்கியா!

ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த, பெற்றோர்கள் இருவரையும் இழந்த இலக்கியா தன் ஐஏஎஸ் கனவை கடும் முயற்சிக்கொண்டு நிறைவேற்றியுள்ளார்! பட்டியலின வாரிசுகள் எப்போது ஆளும் நிலைவருகிறதோ அப்போதே நம் நாடு உண்மையான குடியரசு என்ற அம்பேத்காரின் கனவு தமிழகத்தில் தொடர்ந்து நிஜமாகிவருகிறது. “சமூகத்தில் ஆதிதிராவிடர் இனப் பெண்களின் பின்தங்கிய நிலை மாற வேண்டும்...” இலக்கியாவின் வெற்றிக்கான தாரக மந்திரமும் இதுவே. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இலக்கியா சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். தம்பி, தங்கையோடு நிர்க்கதியாக நின்றவரை அவரது சித்தி அரவணைத்து வளர்த்துள்ளார். “என்னுடைய அப்பா சேகர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார், அம்மா விக்டோரியா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். எங்களின் வாழ்க்கை அந்த அழகிய கிராமத்தில் எந்தப் பிரச்னையும் இன்றி சென்று கொண்டிருந்தது”. ஆனால் திடீர் சாலைவிபத்து அவரது குடும்பத்தை சுனாமியாய் சுருட்டிப் போட்டது. “அந்த விபத்து என்னை நிலை குலையவைத்தது. ஆம் எனக்கு 10 வயது இருக்கும் போது என்னுடைய அப்பா, அம்மா சாலை விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தனர்...” என்று குரல் தழுதழுக்க தன்னுடைய சோகத்தை பகிர்ந்து கொண்டார் வெற்றியின் அடையாள மகள் இலக்கியா. அப்பா ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வந்து ஓராண்டு தான் எங்களோடு இருந்தார், விபத்தில் அப்பா, அம்மாவை பறிகொடுத்த நின்ற போது எனக்கே என்ன விவரம் என்று புரியவில்லை,” என்றார். இலக்கியா போலவே அவருடைய தம்பி, தங்கையும் கண்கசக்கி நின்றுள்ளனர். அந்தக் காட்சிகள் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. “இனி என்ன செய்யப்போகிறோம் என்ற அச்சம் ஒருபுறம், அன்பு ஊட்டி வளர்க்க தாய், தந்தை இல்லையே என்ற ஏக்கம் மறுபுறம் என தவித்து நின்றேன்”. அப்போது விக்டோரியாவின் அம்மாவின் இரண்டாவது தங்கை வேதநாயகி பெற்றோரை இழந்த 3 குழந்தைகளையும் தன்னுடைய அரவணைப்பில் வளர்க்கத் தொடங்கியுள்ளார். குடும்பச் சூழல் ஒரு பள்ளியில் நிலையாக படிக்க வாய்ப்பளிக்கவில்லை. மூன்றாம் வகுப்பு வரை ராணிப்போட்டையிலும், 4 மற்றும் 6ம் வகுப்பை சென்னையிலும் பயின்றுள்ளார் இலக்கியா. பின்னர் 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை வேலூரிலும் படித்துள்ளார். தொடர்ந்து 11 மற்றும் 12ம் வகுப்பை சென்னையிலுள்ள அரசுப் பள்ளியில் படித்துள்ளார் இலக்கியா. தமிழகத்தில் பெரும்பாலான முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு இருக்கும் தடைக்கல்லை உடைத்தெறிய தைரியமான முடிவெடுத்தார் இலக்கியா. “ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த பெண் என்பதால் ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று நினைத்ததால் கல்லூரி இளங்கலையில் பி.ஏ ஆங்கிலத்தை பட்டப்படிப்பாக பயின்றேன். இதனைத் தொடர்ந்து முதுநிலை பட்டப்படிப்பில் சோஷியல் வொர்க் படித்தேன்.” படித்து முடிக்கும் முன்பே தனது வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என முடிவு செய்தார் இலக்கியா. “படிப்பை முடித்த கையோடு ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்பிலும் சேர்ந்தேன். இதன் மூலம் 2015ம் ஆண்டு முதன்முதலில் ஐஏஎஸ் தேர்வு எழுதினேன் ஆனால் அந்த முறை தோல்வி தான் எனக்கு பரிசாக கிடைத்தது. அப்போது தான் நான் உணர்ந்தேன், “சரியான முயற்சியும் கடின உழைப்பும் இல்லாத எந்த விஷயமும் தோல்வியைத் தான் தழுவும்,” என்பதை உணர்ந்து முழுஈடுபாட்டுடன் படிக்கத் தொடங்கினேன். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்ததற்கு என்னுடைய முன்மாதிரி என்றால் என் சித்தி வேதநாயகியைத் தான் சொல்ல வேண்டும், என்கிறார் இலக்கியா. வேதநாயகி ‘தென்றல்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி மக்களுக்கு குறிப்பாக ஆதிதிராவிட பிரிவு மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறார். அவர் செய்யும் சமூகப் பணிகளைப் பார்த்தே தானும் தன் சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதாகக் கூறுகிறார் இலக்கியா. எனினும் “அங்கீகாரமற்ற ஒரு சேவையாக அது இல்லாமல் அதிகாரத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதனாலேயே நான் குடிமைப்பணிகளிலேயே முதன்மையான ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்று தனது லட்சியக் கதையை சொல்கிறார் இலக்கியா. சுமாரான மாணவியான இலக்கிய படிப்பை திட்டமிட்டு படித்ததே தனது வெற்றிக்குக் காரணம் என்று கூறினார். புத்தகங்களை தேர்வு செய்து அதிலிருந்து குறிப்பெடுத்து படித்து வந்ததாகவும் பகிர்ந்தார். ”ஐஏஎஸ் தேர்வு எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய மற்றொரு விஷயம் பொறுமை ஒரு முறை தோற்றால் அதனால் மனம் சோர்ந்து விடக்கூடாது. எனக்கு தெரிந்து என்னுடைய நண்பர்கள் பலர் ஐந்து, ஆறு முறை கூட தோல்வியைத் தழுவி பின்னர் தேர்ச்சி பெற்றுள்ளனர்,” என்கிறார். இதே மனஉறுதியோடு 2016ம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக ஐஏஎஸ் தேர்வை எழுதினேன். அதில் 298வது ரேங்க் பெற்று தேர்ச்சியடைந்துள்ளேன். என்னுடைய வெற்றி என் சமூகத்திற்கு கிடைத்த வெற்றி, அதனாலேயே எனக்கு வரும் பாராட்டுகளை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன். ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு இப்படி ஒரு படிப்பு இருப்பதாகவே தெரியவில்லை, என் மூலம் பலர் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம், என்று தெளிவாக பேசினார். ஐஏஎஸ் மட்டுமே தனது இல்லக்கல்ல, மக்களுடைய முன்னேற்றம், குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் இலக்கியா. “பெண்கள் எப்போதுமே சுதந்திரமாக இருக்க வேண்டும், நான் எடுக்கும் முடிவுகளில் எனக்கு பலர் ஆலோசனை கூறினாலும் இறுதி முடிவை நானே எடுப்பேன். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பெண்கள் சாதிக்க வேண்டும், எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக்கொண்டேன்.” “ஒரு சமுதாயத்தை அளவீடு செய்ய வேண்டும் என்றால் பெண்கள் எந்த அளவிற்கு முன்னற்றம் அடைந்துள்ளனர் என்பதே அதன் அளவுகோல்” என்று அம்பேத்கர் உதிர்த்த வார்த்தைகளே தனது வாழ்வின் மேன்மைக்கு காரணம் என்கிறார் இலக்கியா. ஆகஸ்ட் மாதம் முசோரியில் தொடங்கும் ஐஏஎஸ் பயிற்சியை முடித்து புது உத்வேகத்துடன் பெண்கள் முன்னேற்றத்திற்கான பணியைத் தொடங்க உள்ள இலக்கியா, ஆதிதிராவிடர் பிரிவு போன்ற பின்தங்கிய வகுப்பு மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் தன்னகத்தே பல திறமைகளை ஒளித்துக்கொண்டு முடங்கியிருக்கும் பெண்களுக்கான ஊக்க மருந்து என்றே சொல்லவேண்டும். புத்திசாலி அல்லது அதி புத்திசாலி மாணவர்கள் மட்டுமே ஐஏஎஸ் ஆக முடியும் என்பதெல்லாம் வெற்று பிம்பங்கள். உங்களால் படிக்க முடிந்ததை முழு மனதோடு படித்து, கடின உழைப்பை போட வேண்டும். நான் சாப்பிடும் நேரம், இளைப்பாறும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன். ஐஏஎஸ் படிப்பிற்கு தயாராகுபவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் விஷயம் என்னவென்றால், ”எல்லா புத்தகத்தையும் வாங்கிப் படியுங்கள். ஒரு பாடத்தை மட்டும் எடுத்து அதிலேயே அதிக கவனம் செலுத்துவது நேர விரயம்,” என்ற அட்வைஸை மட்டும் கூறி விடைப்பெற்றார் இலக்கியா. நன்றி : கட்டுரையாளர் நாகு

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts