பொன்விழா பொலிவுடன் தமிழ்நாடு
அவ்வை அருள், இயக்குனர், தமிழக அரசின் மொழிபெயர்ப்பு துறை
இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றும், தமிழில் சென்னை ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்பட்டது.
சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957-ல் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், உண்ணாவிரதம் தொடங்கிய 76-வது நாளில் அவர் மரணம் அடைந்தார்.
இதன் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. பல்வேறு கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின. சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானம் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு முன்னின்று போராடினார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜரிடம் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதன் பிறகு தமிழில் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது. இது பற்றிய அறிவிப்பை சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அறிவித்தார். எனினும் ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என்றே அழைக்கப்பட வேண்டும். அதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் மாநிலங்களவையில் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் பூபேஷ்குப்தா தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை ஆதரித்துப் பேசினார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், ‘500 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்தது இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று தான் இருந்தது. வரலாற்று ரீதியாக இல்லாதபோது, எதற்காக புதிய பெயரை உருவாக்க நினைக்கிறீர்கள்’ என்று கேட்டார்.
அதற்கு அண்ணா பதில் அளிக்கையில், ‘பரிபாடல், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலத்து பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழ் வாழும் பகுதியினை தமிழ்நாடு, தண்டமிழ் வெளி தமிழ்நாடு, இமிழ் கடல் வேலி தமிழகம் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது’ என்றார்.
மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் என்ன பலனை அடைந்துவிடப் போகிறீர்கள் என்று கேட்டவர்களுக்கு, ‘மக்களவையை லோக் சபா என்றும், மாநிலங்களவையை ராஜ்ஜிய சபா என்றும் குடியரசு தலைவரை ராஷ்டிரபதி என்றும் பெயர் மாற்றம் செய்து அடைகின்ற பலனையே நாங்களும் பெறுவோம்’ என்று பதிலடி கொடுத்தார்.
1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அண்ணா முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றதும், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை அடியோடு மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று அண்ணா கொண்டு வந்தார்.
பேரவைக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பேசினர். விவாதத்துக்கு பதில் அளித்து அண்ணா பேசினார்.
அவர் பேசும்போது, ‘இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் வாழ்வில் எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய இந்த தீர்மானம் காலம் தாழ்த்தி வந்தாலும், இங்குள்ள அனைவரின் பேராதரவுடன் வருகிறது. சங்கரலிங்கனாருக்கு நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவதாகும்’ என்று குறிப்பிட்டார்.
பிறகு, மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். பின் அண்ணா எழுந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்று சிறப்பு மிக்க இந்த நன்நாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம் என்று கூறி, தமிழ்நாடு என்று மூன்று முறை குரல் எழுப்பினார். எல்லா உறுப்பினர்களும், அவரைத் தொடர்ந்து வாழ்க என்று மூன்று முறை குரல் எழுப்பினர். சபை முழுவதும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணா உடல் நலமின்றி அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சென்னை திரும்பினார்.
பினனர் சென்னையில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து 14-1-1969 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
தாய் தான் குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்வாள் என்பது வரலாறு. அவ்வரலாற்றை மாற்றி மகன் தன் தாய்க்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமை பேரறிஞர் அண்ணாவை சேரும்.
வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக வரலாற்றில் இடம்பெற்ற பொன் நாளாகும்.
இந்த பொன்விழாவைப் பொலிவாக கொண்டாடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக மாவட்ட, மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரறிஞர் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளையொட்டி கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
மேலும் கலை பண்பாட்டுத்துறை வாயிலாக மாவட்ட, மாநில அளவில் நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் தங்க பதக்கத்தில் ஒரு பக்கம் தமிழ்நாடு அரசு முத்திரையும், மறுபக்கம் பேரறிஞர் அண்ணாவின் உருவப்படமும் பொறிக்கப்படலாம்.
நாளை (ஜூலை 18-ந்தேதி) மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறிய நாள்.
Tuesday, 17 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment