Monday 16 July 2018

வளரும் தானியங்கி துறையும், வளர்க்க வேண்டிய திறமைகளும்...

15 ஆண்டுகளுக்கு முன்புவரை ஐபோன்களைப் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. இன்று ஹாரி பார்ட்டர் நாவல்களைத் தேடி நூலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. விரல் நுனியில் பிரபலமான நூல்களை படிக்க முடியும். வாகனங்களைத் தேடி சாலைகளுக்குச் செல்லாமல், வீட்டிற்கு வாகனங்களை வரவழைத்து பயணம் செய்ய முடியும். எல்லாவற்றுக்கும் காரணம் தொழில்நுட்ப வளர்ச்சிதான்.

நமது வாழ்க்கை நம்மை அறியாமலேயே தொழில்நுட்பங்களில் மூழ்கி வருகிறது என்றால் மிகையில்லை. செல்போன், கணினி, எல்.இ.டி. டிவி., ஹோம் தியேட்டர், வாஷிங்மெஷின், ஏ.சி. என எத்தனையோ தொழில்நுட்ப சாதனங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துவிட்டன.

இந்த தொழில்நுட்பங்களின் அடுத்தகட்ட வளர்ச்சி, தானியங்கி முறையாகும். தானாக இயங்கும் கார்கள், கதவுகள், கருவிகள் என அனைத்தும் தன்னியக்க சாதனங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. “ஆட்டோமேசன்” எனப்படும் இந்த தானியங்கித் துறை இன்னும் பத்தாண்டுகளில் இமாலய வளர்ச்சி காண இருக்கிறது.

பறக்கும் கார்கள், பறக்கும் பைக், தானியங்கி கார்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. பொருட்களின் இணையத்தால் வீட்டில் உள்ள சாதனங்கள் எல்லாம் தொலை இயக்கி மூலமும், தன்னியக்க முறையிலும் செயல்பட உள்ளன. இந்தத் துறையில் மட்டும் இன்னும் பத்தாண்டுகளில் 50 லட்சம் முதல் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருவிகள் அனைத்தும் தானியங்கி முறையில் இயங்கினாலும், அதன் தயாரிப்புகள், பராமரிப்புகள், பழுதுநீக்கம், விற்பனை, விளம்பரப்படுத்துதல், வினியோகம் என ஏராளமான பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மனிதர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

வளர்ந்துவரும் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற சில முக்கிய திறன்கள் அவசியமாகும்...

புத்திக்கூர்மைத்திறன், புதுமையாக சிந்தித்தல், குழுவாக செயல்படுதல், விமர்சித்தல், விமர்சனங்களை எதிர்கொள்ளுதல் , பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுதல் போன்ற திறமைகள் அனைத்துப் பணிகளுக்கும் ஏற்றதுதான்.

இவை தவிர ஸ்டெம் (STEM) மற்றும் ஸ்மாக் (SMAC) எனும் இருவகை திறமைகள் எதிர்கால வேலை உலகத்திற்கு ஏற்றதாக நிபுணர்கள் கணித்துக் கூறி உள்ளனர். ஸ்டெம் செல்கள் எப்படி உடலுக்கான அடிப்படை செல்களோ அப்படியே வேலைவாய்ப்பு உலகத்திற்கு அடிப்படையான சில திறமைகளை ‘ஸ்டெம்’ குறிக்கிறது. சயின்ஸ் (Science), டெக்னாலஜி (Technology), என்ஜினீயரிங் (Engineering) மற்றும் மேத்ஸ் (Maths) இவற்றின் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளின் சுருக்கம்தான் STEM திறமைகள் என அழைக்கப்படுகிறது.

இன்று படிப்பறிவு குறைந்தவர்கள் கூட ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டார்கள். படிக்காதவர்கள்கூட செல்போன்களை இயக்க பழகிக் கொண்டார்கள். வேலைவாய்ப்பு பெற, கட்டணங்கள் செலுத்த, பணம் அனுப்ப என பல்வேறு வசதிகளுக்கு தொழில்நுட்ப அறிவு அவசியமாகிவிட்டது. எனவே எதிர்காலத்தில் இந்த திறமைகள் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.

இதற்காக அறிவியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு, பொறியியல் நுட்பம் மற்றும் கணித அறிவுத் திறன்களை வளர்க்க வேண்டியது அவசியமாகும். இந்த அடிப்படை திறமைகளையே ‘ஸ்டெம்’ திறமைகள் என வேலைவாய்ப்புத் துறை வல்லுனர்கள் கணித்து கூறி உள்ளனர்.

ஸ்டெம் திறமைகள்போலவே ‘ஸ்மாக்’ திறமையும் எதிர்காலத்திற்கு அவசியமாகும். சமூகம் (Social), மொபைல் (Mobile), அனலைட்டிக்ஸ் (Analytics), கிளவுட் (Cloud) ஆகியவற்றின் ஆங்கில சொற்களின் முதல் எழுத்துகளின் சேர்க்கைதான் SMAC எனப்படுகிறது.

சமூகத்திற்கு என்ன தேவைப்படுகிறது, அதை அனைவரும் பயன்படுத்தும் மொபைல்போன் வழியே கொண்டு சேர்ப்பது எப்படி, அதற்கான ஆராய்ச்சிகள், தீர்வுகள், இந்த வசதிகளையெல்லாம் எங்கிருந்தபடியும் பயன்படுத்த கிளவுட் தொழில்நுட்பத்தில் சேமிப்பது, பயன்படுத்துவது போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதே ‘ஸ்மாக்’ திறமைகள் என வரையறுக்கிறார்கள் நிபுணர்கள்.

நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த பதவியை அலங்கரிக்க வேண்டுமானால் இந்த அறிவுத்திறன்களை மெருகேற்றிக் கொள்வது அவசியமாகும்.




கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts