Tuesday, 17 July 2018

மனித நேயத்தின் மாண்பினைக் காப்போம்

மனித நேயத்தின் மாண்பினைக் காப்போம் எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா ‘அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்கிறார் அவ்வையார். கிடைத்தற்கு அரிய இம்மானிடப் பிறவியை வாழத் தெரியாமல் கண்ணாடிப் பாத்திரமாய் போட்டு உடைக்க வேண்டுமா? மனிதன் என்பவன் மனித நேயமிக்கவனாக இருந்தான். இன்று அந்த மனித நேயம் எங்கே இருக்கிறது? அரிதாகத் தென்படும் அந்த உணர்வு எட்டாக் கனியாகிவிட்டது. ‘பேயாய் உழலும் சிறு மனமே’ என்கிறார் பாரதியார். சின்னஞ் சிறு இதயம், அதில்தான் எத்தனை வஞ்சகம், போட்டி, பொறாமை, கெட்ட எண்ணங்கள்...! மொத்தத்தில் பேய்கள் குடியிருக்கும் இல்லமாகி விட்டது மனித இதயம். ஆசைப் பேய், ஆணவப் பேய், திமிர், கோபம், பொறாமை என்று பல பேய்கள் குடியிருக்கிறது. மேலும், மேலும் அவைகளுக்கே இடமளிக்கிறோம். எத்தனை விபத்துகள் நடந்தும், அதை கண்டு கொள்ளாமல் போனவர்கள்தான் அதிகம். சரியான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சித்திருந்தால், அந்த உயிர்கள் பிழைத்திருக்கும். ஆனால் விசாரணை, போலீஸ் என்று சங்கடங்கள், யாரோ பார்க்கட்டும், நமக்கு என்ன என்ற உணர்வு. நமக்கும் இதுபோல் ஒருநாள் வரலாம் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. சொத்துக்காக தொப்புள்கொடி பந்தத்துடனேயே சண்டை, முகத்தில் விழிக்க மாட்டேன் என்ற அகங்காரம், அண்ணன், தங்கை என்று அன்பும், பாசமுமாய் வளர்ந்த உறவுகள் முட்டிக் கொண்டு நிற்கும் மனநிலை. பக்கத்து வீட்டுடன் பகை, ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் அன்பாய், அனுசரித்து உட்கார்ந்து பேச முடிவதில்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. முக்கியமாக பெற்றவர்களைப் பாரமாக நினைக்கும் மனப்பான்மை இப்போது அதிகரித்திருக்கிறது. அப்பாவின் பணத்தை தாராளமாகப் மகன் செலவு செய்கிறான். ஆனால் பையன் சம்பளத்தை உரிமையுடன் தகப்பன் எடுக்க முடிவதில்லை. 4 குழந்தைகள் இருந்தால் பெற்றோர்களை பங்கீடு செய்கிறார்கள். முறை வைத்து பெற்றோரை பராமரிக்கும் பரிதாபங்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் 4 பேரை வளர்க்க தாய், தந்தை கணக்குப் பார்க்கவில்லை. பாரமாக நினைக்கவில்லை. படிக்க வைக்க, வைத்தியம் பார்க்கச் சங்கடப்படவில்லை. இதை விட கருணையே இல்லாமல் தாயை நடுத்தெருவில் விட்டுப்போவது, அழைத்து வந்து ரெயில் நிலையம், பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்று விடுவது என்று இரக்கமற்ற செயல்கள்தான் அதிகரித்திருக்கின்றன. நம்மை இந்த நிலைக்கு உயர்த்தியவர்கள் என்ற நன்றி உணர்வு இல்லாதவர்களாக மனித சமுதாயம் மாறிக் கொண்டிருக்கிறது. காசுக்காக செயல்படும் மருத்துவமனைகள், கல்வியை வியாபாரமாக்கும் நிறுவனங்கள், பெருகிப் போன ஊழல்கள், போதை, குடியால் சீரழியும் குடும்பங்கள் என்று எல்லாவற்றுக்கும் அடியில் பார்த்தால் மெல்லியதாய் அறுந்து கொண்டிருக்கும் மனித நேய இழையே காரணமாக இருக்கும். குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் கொண்டவர்கள் குடியில் தன்னையும் அழித்துக் குடும்பத்தையும் அழிக்க மாட்டார்கள். ஊழல் ஒழிந்தால் தகுதி உள்ளவர்களுக்கு தகுந்தது கிடைக்கும். கல்வியை ஒரு சேவை மனப்பான்மையுடன் அளித்தால் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும். வசதி படைத்தவர்கள் மட்டுமே சிறந்த மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்ற நிலையை கார்பரேட் மருத்துவமனைகள் மாற்ற வேண்டும். பயங்கரவாதம் என்ற பெயரில் மனித உயிர்களைக் கொல்வது, ஒன்றுமறியாத குழந்தைகள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது என்று ஒரு அரக்கத்தனமான சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இவ்வளவும் செய்து விட்டு வாழ்நாள் முழுதும் மன உறுத்தல் இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா? ஒவ்வொரு நிமிடமும் மனசாட்சி நம்மை குத்திக் கொண்டே இருக்குமே. சட்டம் தண்டனை கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் சிறையில் உறுத்தலுடன் வாழத்தான் வேண்டுமா? எந்த நேரமும் சம்பாதிக்கும் எந்திரமாக இருக்க முடியாது. வயதாகி, உடல் தளர்ந்து சுற்றி யாரும் இல்லாத நிலையில் மனம் அன்புக்கும், பிரியத்துக்கும் ஏங்கும். சுற்றங்கள் சூழ அமைதியாய் விடை பெறத் துடிக்கும். கடந்த கால தன் செயல்களை நினைக்கும் போது ஒரு வேதனையும், கேவலமான உணர்வும் வராத அளவுக்கு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை அழகானது. ரசித்து வாழ வேண்டிய விஷயம். மரணத்தின் பிடியில் இருக்கும்போது நம் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது, நமக்கே கவுரவம், பெருமை தரக் கூடியதாக இருக்க வேண்டும். மரணம் கம்பீரமாய் அமைய வேண்டும். இன்று நாம் பிறருக்குச் செய்வதுதான் நாளை நமக்குத் திரும்பக் கிடைக்கும். தாய்க்கு முதியோர் இல்லம் என்றால் நமக்கு நடுத் தெரு தான் தங்குமிடமாகும். இதுதான் வாழ்க்கை நியதி. இதைப் புரிந்து கொண்டால் மனிதன் சரியான பாதையில் நடைபோடுவான். செலவில்லாத நிரந்தர சந்தோஷம், பிறரை நேசிப்பது மகிழ்ச்சியான வாழ்வுக்கு வித்திடும். செல்லும் வழி எங்கும் மனித நேயம் என்ற விதையை மட்டுமே தூவிச் செல்லலாம். அது அழகான மரங்களாக வளர்ந்து நம் சந்ததிகளுக்கு நிழல் தரும். ஒரு ஜென் கதை மனதை காலிக் கோப்பையாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது. அவ்வப்போது அதை அன்பால் மட்டுமே நிரப்பலாம். அதை உடனே பிறருக்கு அளித்து விட்டு மீண்டும் காலியாக வைத்துக் கொள்ளலாம். மனிதத்தின் புனிதம் அறிவோம். அன்பு மட்டுமே கொடுக்கக் கொடுக்க வளரும். நம்மை மன நிறைவுடன் வாழ வைக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts