‘முடியும்’ என்னும் மந்திரச்சொல்!
முயற்சி செய்யத் தயங்காதே
துணியும்போது
புயலும்
உன் அடிபணியும்.
‘எல்லா சக்தியும் உன்னுள் அடங்கியுள்ளது’ என்பார் சுவாமி விவேகானந்தர்.
என் நண்பர் அடிக்கடி கூறும் தன்னம்பிக்கை வாக்கியம், ‘இந்த உலகத்தில் இறந்தவரை உயிர்ப்பிப்பதைத் தவிர அனைத்தும் சாத்தியமே’. ஆம், எவ்வளவு நம்பிக்கையூட்டும் வாக்கியம்!
நாசாவில் அப்போலோ 13 என்ற விண்வெளி விண்கலம் ஏவும் முயற்சி பின்னடைவைச் சந்தித்தபோது அமெரிக்க விஞ்ஞானிகள் 7 வருடங்கள் போராடி வெற்றிபெற்றனர். அப்போது அவர்கள் படுக்கை அறை முதல் கழிவறை வரை ஒட்டிவைத்திருந்த ஊக்க வாக்கியம், 'Failure is not an option' (தோல்வி நமது தேர்வு அல்ல).
எதையும் முடிக்கும் துணிவு பெறுவதற்கு முதல் தேவை, உடல் வலு. அதனால்தான் பாரதி கூட கடவுளிடம், ‘விசையுறு பந்தினைப்போல் வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்’ என்றார்.
நம் உடல் நம் சொற்படி கேட்டால்தான் மனம், மூளை இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அதிகாலையில் பறக்கத் தொடங்கும் பறவைக்கே அதிக இரை கிடைக்கும். சோம்பலை விடுத்து சுறுசுறுப்புடன் பணிபுரிந்தால்தான் உடலும், மனமும் வலுவடையும்.
‘களவும் கற்று மற’ என்றொரு வழக்கு உண்டு. அதன் பொருள், அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே.
கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு முதல் தேவை, பணிவு. கற்றுக்கொடுப்பவருக்கு மரியாதை தர வேண்டும். அது நம் உயர்வுக்கு உரமிடும்.
ஒருமுறை வளைகுடா நாடான மஸ்கட்டுக்கு அப்போதைய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா சென்றார். அப்போது அந்நாட்டின் அரசர், சங்கர்தயாள் சர்மாவின் விமான இருக்கைக்கே சென்று வரவேற்றார்.
வெளிநாட்டு விருந்தினர்கள் வருகையின்போது, விமானத்தில் இருந்து கீழே இறங்கியதுமே மரியாதை செய்வது பொதுவான வழக்கம். எனவே மன்னரின் செயல் அனைவருக்கும் வியப்பைத் தந்தது. மன்னரோ இன்னும் ஒரு படி மேலே போய், விருந்தினருக்கான வாகன ஓட்டுநரை அனுப்பிவிட்டு நமது ஜனாதிபதிக்கு தானே வாகனம் ஓட்டினார். வாகனத்தை நிறுத்தியதும் அனைத்துப் பத்திரிகை நிருபர்களும் மன்னரைச் சூழ்ந்துகொண்டனர், கேள்விக்கணைகளைப் பாய்ச்சினர்.
‘வழக்கத்துக்கு மாறாக ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள்?’ என்று அவர்கள் கேட்டபோது மன்னர் புன்னகையுடன் கூறிய பதில், ‘‘ஒரு மாணவனாகவே நான் அவருக்கு மரியாதை செலுத்தினேன். ஆம், இந்தியாவில் புனே கல்லூரியில் எனக்குப் பாடம் போதித்த குரு அவர்!’’
இப்படி எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பணிவே நம்மை மேலும் உயர்த்தும். பணிவுடன் தலை தாழ்த்துபவரை உலகம் வணங்கும். பணிவு இருக்கும் இடத்தில் தன்னம்பிக்கையும் இருக்கும். பகட்டு மனிதர்களை வெற்று ஆணவமே முட்டுக்கொடுத்திருக்கும்.
பணிவும் தன்னம்பிக்கையும் எதிர் எதிரானவை அல்ல. சாதனை மனிதர்களிடம் இந்த இரண்டையும் ஒருசேரப் பார்க்கலாம்.
அடக்கத்தோடு நம் பாதையில் துணிவுடன் பயணித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாம் முயற்சி செய்யும்போது பல தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம். வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் விஷயங்கள்கூட, நம் நம்பிக்கையைக் குலைப்பதற்காகவே நடப்பது போலத் தோன்றலாம்.
வாழ்க்கை என்றாலே சந்தோஷம், துக்கம், வெறுப்பு, ஏற்றம், தாழ்வு எல்லாம் இருக்கும். அனைத்தையும் சரிசமமாகப் பார்க்க வேண்டும்.
நாம் பிறரிடம் குறை கண்டுகொண்டே இருந்தால், நம் மீது பிறரின் குற்றச்சாட்டுகள் குவியும்.
பனிப் பிரதேசத்தில் வாழும் முள்ளம்பன்றிகள், உடல் சூட்டைத் தக்கவைப்பதற்காக ஒன்றுடன் ஒன்று நெருங்கி இருக்குமாம். அப்போது ஒன்றின் முள் மற்றொன்றின் மேல் குத்தும். அது தொந்தரவு எனக் கருதி எந்த முள்ளம்பன்றியும் தனியாக வாழ முயன்றால் குளிரால் இறக்கத்தான் வேண்டும்.
அதேபோல சமூக வாழ்வில் நாம் சில சமரசங்களுக்கு உட்படத்தான் வேண்டும். சில சங்கடங்களை தாண்டி வரத்தான் வேண்டும். நமது கவுரவம், உரிமையை விட்டுக்கொடுக்காமல், சில சமரசங்களை ஏற்றால் வாழ்க்கை சீராகச் செல்லும். நாம் நமது வெற்றி இலக்கில் கவனம் செலுத்த முடியும்.
ஒரு செயலை செய்யத் துவங்கும்முன் அதற்கான திட்டமிடல் அவசியம். ஆனால் திட்டமிட்டபடியே நூறு சதவீதம் நடக்கும் என்றும் கருத முடியாது. காரணம், புறக் காரணிகள் எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இல்லை.
‘மைண்ட் மேப்பிங்’ எனப்படும் மன வரைபட முறையை பயிற்சி செய்தால், நம் முயற்சியில் என்னென்ன இடையூறுகள், எதிர்பாராத விஷயங்கள் ஏற்படக்கூடும் என்று ஓரளவு கணிக்கலாம்.
வாழ்க்கை ஒரு சதுரங்க ஆட்டம் போன்றது. நமது சதுரங்கக் காய் நகர்வுகள், எதிராளியின் நகர்வுகளைப் பொறுத்து மாறும். வாழ்க்கையிலும் அப்படி மாற்றங்களுக்குத் தயாராக இருந்தால்தான் முன்னேற்றம் சீராக இருக்கும்.
விட்டுக்கொடுத்து, தட்டிக்கேட்டு, பணிந்து, துணிந்து, இணைந்து, தனித்து என்று பயணப்பட்டுக்கொண்டே இருந்தால்தான் வெற்றிக்கோட்டையை எட்ட முடியும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. வேலைப்பாடுமிக்க பூத்தையலில் அழகான கைவண்ணத்தைக் காண்கிறோம். ஆனால் அதன் மறுபுறமோ வண்ண நூல்கள் மட்டுமே தெரியும்.
அதேபோல ஒருவரின் எந்தப் பக்கத்தை நாம் பார்க்கிறோம், அவரின் உதவியைப் பெற்று, நாமும் அவருக்கு எவ்வாறு உறுதுணையாயிருந்து வாழ்வில் உயர்கிறோம் என்பதே முக்கியம்.
எலுமிச்சைச் சாறு பிழிந்த நீர் புளிப்பாக இருந்தால் அதிலிருந்து நாம் புளிப்பைப் பிரித்தெடுக்க முடியாது. மேலும் நீரை ஊற்றியே சமன் செய்யவேண்டும். அதுபோல்தான், நாம் ஒரு தவறு செய்ய நேர்ந்தால் அதற்கு ஈடான நற்செயலால் அதை சரிப்படுத்த வேண்டும்.
முயற்சிக்கும்போது தவறுகள் ஏற்படுவது இயற்கை. அதை உணர்ந்து, திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
நதி போலத்தான் நம் வாழ்வும்.
நதியானது மலையில் தோன்றி, பல்வேறு தடைகளைத் தாண்டி கடலில் கலக்கிறது. அதுபோல முள், கல் என்று மோதி ஓடிவரும் நம் வாழ்விலும் துன்பம், துயரங்களைக் கடந்தாக வேண்டும்.
இரு கரைகளுக்கு இடையே பயணிக்கும் நதி போல குடும்பம், சமுதாயம் இரண்டுக்கும் இடையில் நம் லட்சியப் பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். நம் பயணத்தில் கரைகளையும் செழிப்படையச் செய்ய வேண்டுமே தவிர, அவற்றைத் தகர்க்க முயற்சிக்கக்கூடாது.
நதியின் பயணம் நீர் உள்ள வரை. நம் பயணம் நம் உயிர் உள்ள வரை. நதியின் கொடை பசுமை என்றால், நம் கொடை நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும் சேர்க்கும் இனிமை.
நதி கடலில் சங்கமமாவதற்குள் அதன் பயணத்தில் அர்த்தம் பிறந்துவிடுகிறது. அதேபோல நம் வாழ்வும் ‘பொருள்’ மிக்கதாய் அமைய வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றே தொடங்குவோம்!
Saturday, 7 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிக...
-
பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இல...
-
பாட்டுக்கொரு புலவன் By த.ஸ்டாலின் குணசேகரன் ‘பாரத தேசத்து சங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப்...
-
ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி...! ராஜாஜி எச்.வி.ஹண்டே, முன்னாள் தமிழக சுகாதார அமைச்சர் இ ன்று (டிசம்பர் 10-ந்தேதி) ராஜாஜி பிறந்தநாள். 1...
No comments:
Post a Comment