Saturday, 7 July 2018

அப்துல் கலாமின் ஆசை நிறைவேறவில்லை... ‘மதுரைத் திட்டம்’ கு.கல்யாணசுந்தரம் பேட்டி

அப்துல் கலாமின் ஆசை நிறைவேறவில்லை... ‘மதுரைத் திட்டம்’ கு.கல்யாணசுந்தரம் பேட்டி செல்வ புவியரசன் இ ருபதாண்டுகளுக்கு முன்பு, தமிழின் முன்னோடி மின்நூலகமான ‘மதுரைத் திட்ட’த்தைத் தொடங்கியவர் கு.கல்யாணசுந்தரம். ஸ்விட்சர்லாந்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் கல்யாணசுந்தரம், கோவையில் நடைபெற்றுவரும் தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்திருக்கிறார். தமிழின் தற்போதைய மின்நூல் முயற்சிகள் தொடர்பாக அவரோடு உரையாடியதிலிருந்து... மதுரைத் திட்டம் எப்படி உருவானது? 1993வாக்கில், நான் உருவாக்கிய ‘மயிலை’ என்ற இலவச எழுத்துருவைப் பரிசோதிப்பதற்காகத் திருக்குறளைத் தட்டச்சுசெய்து நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தேன். அதைத் தொடர்ந்து தேவாரத்தைத் தட்டச்சுசெய்து அனுப்பினேன். அவற்றைத் ‘தமிழ் மின்நூலகம்’ என்ற தளத்தை உருவாக்கி பதிவேற்றினேன். இதெல்லாம் மதுரைத் திட்டத்துக்கு முன்பான சோதனை முயற்சிகள். மதுரைத் திட்டத்தின் மின்நூலாக்கத்தில் ஆர்வம்கொண்ட நண்பர்கள் புத்தகங்களைத் தட்டச்சுசெய்வதிலும் பிழை சரிபார்ப்பதிலும் உதவினார்கள். எந்த நிதியுதவியும் இல்லாமல், முழுவதும் தன்னார்வலர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கும் மின்நூலகம் இது. மதுரைத் திட்டத்தில் மரபிலக்கியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? ஸ்விட்சர்லாந்திலிருந்து சென்னை வரும்போது பாரி நிலையம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களில் புத்தகம் வாங்கிச் செல்வேன். அதை ஸ்கேன்செய்து நண்பர்களுக்கு அனுப்பிவைப்பேன். அவர்கள் அதைத் தட்டச்சுசெய்து தருவார்கள். அப்படி சென்னையில் புத்தகங்களைச் சேகரித்தபோது பதிப்பாளர்கள் சொன்ன விஷயம் என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. சங்க இலக்கியங்களை வெளியிட்டால் புத்தகங்கள் விற்பதில்லை, நட்டமடைய நேரும் என்பதால் அவற்றைப் பதிப்பிப்பதே இல்லை என்று பதிப்பாளர்கள் சொன்னார்கள். எனவே, அவற்றைக் கண்டிப்பாக மின்நூலாக்கி இணையத்தில் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒருமுறை இணையத்தில் பதிவேற்றினால் போதும், யார் வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். பதிப்பிக்கும் செலவும் இல்லை. புத்தகம் வாங்கும் செலவும் இல்லை. நாவல், சிறுகதை போன்ற இலக்கியப் புத்தகங்கள் இன்றும் பதிப்பிக்கப்பட்டுவருகிறது. எனவே, அவற்றைக் கொஞ்சம் மெதுவாகவே வெளியிடலாம் என்று நினைக்கிறேன். கடந்த இருபதாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழ் மின்நூலகங்கள் உருவாகியுள்ளன. அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? புத்தகங்களை ஸ்கேன்செய்து அவற்றை மின்நூலாக்கிவிடுவது இன்று எளிதாக இருக்கிறது. கிடைக்க வாய்ப்பில்லாத ஒரு புத்தகத்தைப் புரட்டிப் படிப்பதுபோன்ற ஒரு உணர்வை அது அளிக்கலாம். ஆனால், அவற்றில் ஒரு குறிப்பை மீண்டும் தேட வேண்டும் என்றால் சிரமமாக இருக்கும். அதைத் தவிர்க்கத்தான் மதுரைத் திட்டத்தில் புத்தகத்தை முழுமையாக தட்டச்சுசெய்து எச்டிஎம்எல் வடிவத்தில் இணைய பக்கமாகவும் ஒருங்குகுறி (யுனிகோடு) எழுத்துருவில் பிடிஎப் கோப்பாகவும் அளிக்கிறோம். இலவச மின்நூல் என்பது மட்டும் எங்கள் நோக்கமில்லை. தேடுவதற்கு எளிதாகவும் அது இருக்க வேண்டும். எச்டிஎம்எல் வடிவத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுக்கிறபோது அதை ஈபப், அமேசான், கிண்டில் என்ற எந்த வடிவத்துக்கும் எளிதில் மாற்றிக்கொள்ளலாம் என்பது முக்கியமான வாய்ப்பு. மின்நூலகங்கள் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிடிஎப் வடிவத்தில் உள்ள ஆங்கிலப் புத்தகங்களை ‘வேர்டு’ வடிவத்துக்கு மாற்றுவது எளிதாக இருக்கிறது. தமிழில் அது ஏன் சாத்தியமாகவில்லை? தற்போது, கோவையில் நடைபெற்றுவரும் தமிழ் இணைய மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் இதுவும் ஒன்று. தற்போது, ஸ்கேன்செய்யப்பட்ட பிடிஎப் பக்கம் தெளிவாக இருந்தால், அதைத் தமிழுக்கு மாற்ற முடிகிறது. அதற்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த முயற்சி முழுமையாக வெற்றிபெறவில்லை. 95% வார்த்தைகள் மாறினாலும்கூட, எந்தெந்த எழுத்துகள் இல்லை என்று சரிபார்க்கும் நேரத்தில் அந்தப் பக்கத்தையே தட்டச்சுசெய்துவிடலாம். கணினியில் ஆங்கிலத்தைப் போல தமிழையும் பயன்படுத்த வேண்டும் என்றால் இதுபோன்ற தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்தில் பிடிஎப் வடிவத்தில் உள்ள புத்தகத்தை ஒலிப்புத்தகமாகவும்கூட எளிதாக மாற்ற முடியும். தமிழில் அது இன்னும் சாத்தியமாகவில்லை. தமிழில் உச்சரிக்கப்படும் வார்த்தைகளை அப்படியே எழுத்து வடிவாக மாற்றக்கூடிய வசதி இப்போது இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இன்னும் அது மேம்படுத்தப்பட வேண்டும். அத்தகைய முயற்சிகளைத்தான் உலகத் தமிழ் இணைய மாநாடு முன்னெடுக்கிறது. தேசிய மின்நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கிறதே? ‘மில்லியன் புக்ஸ் ப்ராஜெக்ட்’ என்ற உலகளாவிய மின்நூலாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடந்தது. இத்திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டபோது, தமிழில் உள்ள அத்தனை புத்தகங்களையும் மின்நூல்களாக மாற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று அப்துல் கலாம் ஆசைப்பட்டார். ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வெறும் நாலாயிரம் புத்தகங்கள்தான் ஸ்கேன்செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே மின்நூலகங்களில் இருந்தவற்றை மீண்டும் பயன்படுத்திக்கொண்டதைக் கழித்துவிட்டுப் பார்த்தால், இத்திட்டத்தில் மின்நூல்களாக மாற்றப்பட்ட தமிழ்ப் புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகத்தான் இருக்கும். இதே திட்டத்தின்கீழ், சீன மொழியில் இரண்டு லட்சம் மின்நூல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தில் போதிய வசதிகள் இருந்தன, தொழில்நுட்பம் இருந்தது, ஆனால், சரியான ஒத்துழைப்பு இல்லை. இணைய தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்திருக்கிறீர்கள். இந்த மாநாட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? ‘தமிழ்டாட்நெட்’ என்ற மின்னஞ்சல் குழுமத்தில் நண்பர்களுக்கு இடையே நடந்துவந்த தமிழ் கணினி பற்றிய உரையாடல்கள்தான் உலக இணைய தமிழ் மாநாட்டுக்கான ஆரம்பம். தற்போது நடப்பது பதினேழாவது மாநாடு. இந்த மாநாட்டின் ஆய்வரங்கத்தில் கணினித் தமிழின் தொழில்நுட்பத் தேவைகள், தமிழ்வழிக் கற்றலுக்கான இணையவழி வாய்ப்புகள், இணையத்தில் தமிழ் தரவுகளை வளர்த்தெடுப்பது ஆகியவை பற்றி விவாதிக்கப்படுகிறது. தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிப் பட்டறைகள் மக்கள் அரங்கத்தில் நடத்தப்பட்டுவருகின்றன. இவை தவிர, கண்காட்சி அரங்கத்தில் கணினி தொடர்பான புத்தகங்கள், மல்டிமீடியா ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கணினிக்குத் தமிழே தெரியாது. இன்றைக்கு கணினியின் அத்தனை சாத்தியங்களும் தமிழிலும் கிடைக்கின்றன. இணையத்தின் வாயிலாக, ஏகப்பட்ட இளம் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். இணைய தமிழ் மாநாடுகளின் வழியாகத் தொடர்ந்து நடக்கும் ஆய்வுகளும் விவாதங்களும் கணினித் தமிழை இன்னும் மேம்படுத்தும். - செல்வ புவியரசன்,

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts