விவசாயிகளிடமிருந்து விலகலாமா?
By பி.எஸ். மாசிலாமணி |
இந்திய வேளாண்மையில், பசுமைப்புரட்சி, நீலப் புரட்சி, வெண்புரட்சி என்று 1960-ஆம் ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும்போது உற்பத்தி பெருகி விவசாயிகளின் வருமானமும் உயரும் என்றார்கள். ஆனால், கிராமம் சார்ந்த வேளாண் தொழில், நகர்ப்புறம் சார்ந்து நிற்கவேண்டிய நிலைக்கு மாறியது.
இதன் விளைவு, மகசூல் உயர்விற்கேற்ப உற்பத்திக்கான செலவும் கூடுதலானது. கூடுதல் செலவுக்கு வெளியில் கடன்பெற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால் விவசாயிகளின் நிகர வருமானம் படுபாதாளத்திற்குச் சென்று விட்டது. லாபகரமான விலை இல்லாதது, வேளாண் கடன் சுமை பெருகி வருவது போன்ற காரணங்களால் ஏராளமான விவசாயிகள் உயிரையே விடத் துணிந்தனர். பேருக்கு கடன் தள்ளுபடி, ஒப்புக்கு விலை உயர்வு. அதனால், விவசாயிகளின் சுமையும் மேலும் மேலும் கூடுதலாகி கொண்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் பெரு முதலாளிகளுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் தள்ளுபடி மற்றும் வாராக்கடன் உள்ளது. இந்நிலையில் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலையிலும் விவசாயிகளின் கடனை மட்டும் தள்ளுபடி செய்யத் தயங்குகிறது அரசு. தள்ளுபடி செய்தால் வங்கி முறை நிலை குலையும்' என்று கூறுகிறார் நீதி ஆயோக் தலைவர்.
இச்சூழலில் உற்பத்தி மும்மடங்கு: விவசாயிகளின் வருமானம் இருமடங்கு' என்ற முழக்கத்தை ஆட்சிக்கு வந்தபோது பா.ஜ.க. அரசு கூறி, நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. வேளாண் இடர்ப்பாடுகளும் கூடுதலாகி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு வேளாண் இடுபொருட்களை விற்பனை செய்து வரும் தனியார் கடைகாரர்களுக்கு (விதை, உரம், மருந்துகள் விற்பனையாளர்) DAI (Diploma in Agri Inputs)) என்ற படிப்பு மற்றும் பயிற்சி கொடுத்து வருகின்றது. இது மத்திய அரசின் திட்டமாகும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களே இனி விற்பனை நிலையங்களை நடத்த முடியும் என்ற கண்துடைப்பு வேறு.
அதாவது மனிதர்களுக்கான மருந்து கடைகளை எப்படி D.Pharm, B.Pharm படித்தவர்களின் பெயரில் நடத்த முடியுமோ, அப்படித்தான் உரக்கடையும் இனி நடத்த முடியும். பசுமைப்புரட்சி வந்த காலத்தில் வேளாண்துறை அலுவர்கள் நேரில் வயலுக்குச் சென்று பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கினார்கள். இதற்காகவே இரண்டு அல்லது மூன்று வருவாய் கிராமத்திற்கு ஒரு உதவி வேளாண் அலுவலர் இருந்தார்.
அவருக்கு மேலே ஒன்றியத்திற்கு ஒரு வேளாண் அலுவலர் மற்றும் ஒரு துணை வேளாண் அலுவலர். இவர்களுக்கும் மேலே ஒரு உதவி இயக்குநர், மாவட்டத்திற்கு இரண்டு துணை இயக்குநர்கள், ஒரு இணை இயக்குநர் என இத்தனை அலுவலர்களும் வயல்வெளி சென்று பார்வையிடுவது, தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்குவது, இடுபொருட்களை பயன்படுத்த அறிவுறுத்துவது போன்ற பணிகளைச் செய்தனர்.
இந்த நிலை கடந்த 20 ஆண்டுகளாக சிறிது சிறிதாக குறைந்துவிட்டது. தற்போது ஆறு முதல் எட்டு ஊராட்சிகளுக்கு ஒரு உதவி வேளாண் அலுவலர். மற்ற அலுவலர்களும் குறைக்கப்பட்டனர்.
குறைந்த எண்ணிக்கையில் உள்ள இந்த கள அலுவலர்களுக்கும் மானிய பொருட்களை விற்பனை செய்வது, அதற்கான பதிவுகளை எழுதுவது, பராமரிப்பது என வேறு பணிகள் வழங்கப்படுகின்றன.
இதனால் இந்த பணியாளர்களுக்கு விவசாயிகளுடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மேலும் இவர்கள் தாங்கள் பயின்ற தொழில் நுட்பங்களை மறப்பதோடு புதிய விவரங்களையும் அறிய முடியாமல் போய் விடுகின்றது. மேலும், வேளாண்துறை நடத்தி வரும் மையங்களிலும் இடுபொருட்கள், மருந்துகள் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
விவசாயிகள் வேறு வழியில்லாமல் தனியார் கடைகளுக்கு சென்று வாங்குகிறார்கள். தற்போது முழுமையாகவே கடைக்காரர்களின் ஆலோசனைப்படிதான் பயிர் வளர்கிறது. பயிர்களின் நோய்களை, பூச்சித் தாக்குதலை விவசாயிகள் சரியாகக் கூற முடியாததால் கடைகாரரும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு ஒன்றுக்கு மூன்று வகை மருந்துகளை விற்பனை செய்து விடுவார்கள். விவசாயிகளோ, வியாபாரிகளோ பயிரின் பாதிப்பிற்கேற்ற மருந்துகளை அறிய முடியாமல்தான் கடந்த பல ஆண்டுகளாக பயிர் வளர்ந்து வருகின்றது.
இந்த நிலைக்குக் காரணம் படித்தவர்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்பதாகும். இதன் விளைவாக, தொழில் நுட்ப அறிவுரை, மேம்பாடு, விவசாயிகளுக்கு கூடுதல் மகசூலுக்கு உதவிடும் தொடர்பிலிருந்து வேளாண் துறை விலகிச் செல்கிறது. எழுத்தர் பணி மட்டுமே இவர்களுக்கு உள்ளதால் புதிய பணி வாய்ப்பும் இல்லாமல் போகிறது.
வயல்வெளியில் ஆய்வு செய்து பயிர்களின் பாதிப்புகளை கண்டறிந்து பயிர்களை பாதுகாத்திட வாய்ப்பில்லாமல் போகின்றது. இதனால் கூடுதல் செலவு, மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மனிதர்களுக்கான மருந்துகளை (கூடுதல் விலை உள்ளவை) சில மருத்துவர்கள் எழுதி கொடுப்பதால் கமிஷன் அதிகமாகக் கிடைக்கும் தரமற்ற மருந்துகளை சில விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் தரும் நிலையும் உள்ளது.
இதுதான் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் திட்டமா? இதுதான் தமிழ்நாடு அரசின் 2023 தொலைநோக்கு திட்டமா? விவசாயிகளின்பால் அக்கறையற்ற, பொறுப்பற்ற செயலல்லவா இது? இப்படி எல்லாம் செய்தால் விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி விடுவார்கள். அதன்பின் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டமே இது!
எனவே கூடுதல் செலவைக் கொடுக்கும் செயற்கை சாகுபடி முறையை குறைத்து, இயற்கை சாகுபடி முறைக்கு மாறுவோம். இதனால் உற்பத்தி, மகசூல் குறையும் என்பது உண்மையே. ஆனால், தேவைக்கேற்ப உணவுகளும் தானியங்களும் கிடைக்காதபோதாவது அரசு நெருக்கடிக்குள்ளாகி தெளிவு பெறட்டும்!
Wednesday, 11 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment