Monday 16 July 2018

வேலை வாய்ப்பு உலகின் மையம் வணிகவியல்...

வேலைவாய்ப்பு உலகின் இரு சக்கரங்கள் என்றால் அது வணிகமும், தொழில்நுட்பமும்தான். சொல்லப்போனால் தொழில்நுட்பமும் வணிகத்தை மையமாக கொண்டே சுழலும் எனலாம். வணிகம் என்பது எல்லாத் துறையும் தழுவிய ஒன்றாகும். சிறுதொழில் தொடங்கி, பெரு நிறுவனங்கள், வங்கிகள் என எல்லாத்துறையும் வணிகம் சார்ந்ததுதான். விண்வெளியில் கூட குடியிருப்புகளை உருவாக்கும் போட்டிகள் வணிக ரீதியில் தொடங்கிவிட்டது கண்கூடு. எனவே வணிகம், பொருளாதாரம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. இங்கு சில வணிகவியல் சார்ந்த படிப்புகளையும், வேலைவாய்ப்புகள் மிகுந்த துறைகளையும் அறிவோம்... பிளஸ்-2 படிப்பில் சராசரி மதிப்பெண் பெற்றவர்கள், வணிகவியல் படிப்புகளை தேர்வு செய்து படித்து, தொழில்துறை உலகில் உச்சம் தொடலாம். பிளஸ்-2-விற்கு பின்பு பி.காம் அல்லது சி.ஏ. படிக்க தீர்மானிக்கலாம். பி.காம் படித்த பின்பு பல்வேறு தொழில்நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். உயர்பதவிகளுக்கு செல்ல விரும்பினால் பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புகள் படிப்பது வாய்ப்புகளை பிரகாசமாக்கும். பட்ட மேற்படிப்புகளில் எம்.காம்., பிசினஸ் எக்னாமிக்ஸ், பினான்ஸ் கண்ட்ரோல், எம்.ஏ.எக்னாமிக்ஸ், எம்.ஏ. ஆபரேசனல் அண்ட் ரிசர்ச் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் படிப்புகளை படிக்கலாம். வணிகவியல் பாடங்களை படிப்பவர்கள் கணக்கு அதிகாரியாக (அக்கவுண்டன்ட்), கணக்கு நிர்வாகியாக (அக்கவுண்டன்ட் எக்சிகியூட்டிவ்), கணக்கு தணிக்கையாளராக (சாட்டர்டு அக்கவுண்டன்ட்), கம்பெனி செயலாளராக பதவி பெறலாம். மேலும் காஸ்ட் அக்கவுண்டன்ட், நிதி ஆய்வாளர் (பினான்ஸ் அனலிஸ்ட்), நிதி திட்டமிடுபவராக (பினான்ஸ் பிளானர்), நிதி மேலாளராக (பினான்ஸ் மேனேஜர்), பினான்ஸ் கண்ட்ரோல், பினான்ஸ் கன்சல்டன்ட், இன்வெஸ்ட்மென்ட் அனலிஸ்ட், ஸ்டாக் புரோக்கர், போர்போலியோ மேனேஜர், டாக்ஸ் ஆடிட்டர், டாக்ஸ் கன்சல்டன்ட், ஆடிட்டர், புள்ளியிலாளர், எக்னாமிஸ்ட் போன்ற ஏராளமான பணிகளுக்கு செல்ல முடியும். மேலாளர் பணியிலேயே பல்வேறு பிரிவுகளில் வாய்ப்பு கிடைக்கும். நிதி மேலாளர், கருவூல மேலாளர், கண்ட்ரோலர், கிரெடிட் மேலாளர் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஜூனியர் அக்கவுண்டன்ட், அக்கவுண்ட் அசிஸ்டன்ட், புக் கீப்பர் போன்ற கீழ்நிலை பணிகளும் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், பண்ணைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், வெளிநாட்டு நிறுவனங்கள், தகவல் மையங்கள், மென்பொருள் துறை என பல்வேறு துறைகளிலும் பணிகள் உள்ளன. தொழில்தொடங்கும் வாய்ப்புகளும் உள்ளன. ஒரு பணியில் இருந்து கொண்டே நிதி சார்ந்த கிளைப் பணிகளை கவனிக்க முடியும். பலருக்கு நிதி ஆலோசகராகவும், நிதித் திட்டங்கள் வகுத்துக் கொடுப்பவராகவும் இருந்து கூடுதல் வருவாய் ஈட்டலாம். கீழ்நிலை அலுவலர் பணிக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற முடியும். பின்னர் அனுபவத்திற்கேற்ப ஊதியம் கேட்டுப் பெறலாம். அதிகாரியாகிவிட்டால் தகுதி, அனுபவத்திற்கேற்ப சில லட்சங்கள் வரை சம்பளம் பெறலாம். பொருளாதாரம் மற்றும் வணிகவியல் படிப்புகளை ஏராளமான கல்வி நிறுவனங்கள் கற்றுத்தருகின்றன. சிறந்த கல்வி நிறுவனத்தில் படித்து வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts