இந்தியச் சமூகத்தில் பெண் குழந்தைகளின் நிலை என்பது முரண்பாடுகள் நிறைந்ததாக உள்ளது. விண்வெளி ஆய்வுவரை பெண்கள் முன்னேறியிருந்தாலும், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்களும் அநீதிகளும் ஏராளம்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்:
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சுமார் 30%க்கும் அதிகமானவை சிறுமிகளுக்கு எதிராகவே நடக்கின்றன. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், 90%க்கும் அதிகமான பாலியல் அத்துமீறல்கள் உறவினர்கள், அண்டை வீட்டார்கள் போன்ற அறிமுகமானவர்களாலேயே நிகழ்கின்றன. வீட்டுக்குள்ளும் பொது இடங்களிலும் இழைக்கப்படும் இந்த அநீதிகள் அவர்களை உளவியல் ரீதியாகப் பாதிக்கின்றன. போக்ஸோ போன்ற சட்டங்கள் வலுவாக இருந்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் சமூகத்தில் ஒருவித பயமின்மையை உருவாக்குகிறது.
இணையவழி அச்சுறுத்தல்கள்:
இன்றைய குழந்தைகள் இணையத்தோடு பிணைந்துள்ளதால், ஆபாச மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் பெண் குழந்தைகளின் மனநலனைச் சிதைக்கின்றன. தனிப்பட்ட புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் அவர்களைத் தனிமைப்படுத்துகிறது.
கல்வியில் இடைநிற்றலுக்கான காரணங்கள்:
நகர்ப்புறங்களில் கல்வி நிலை மேம்பட்டிருந்தாலும், கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. யுனிசெஃப் அறிக்கையின்படி, மேல்நிலைப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் கணிசமாக உயர்கிறது.
இதற்கான முக்கியக் காரணங்கள்:
- பள்ளிகளில் வசதிக் குறைவு: மாதவிடாய் காலங்களில் பள்ளிகளில் முறையான கழிப்பறை வசதி இல்லாமை.
- பாதுகாப்பு அச்சம்: நீண்ட தொலைவு பள்ளிகளுக்குச் செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு அச்சம்.
- வீட்டு வேலைப் பளு: பல நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களில், இளைய சகோதரர்களைக் கவனிக்கும் பொறுப்பு பெண் குழந்தைகளின் மேல் சுமத்தப்படுவதால், அவர்களின் பள்ளி நேரம் பாதிக்கப்படுகிறது.
- பாரம்பரிய மனப்பான்மை: கிராமப்புறங்களில் ஒரு சிறுமி பருவமடைந்தவுடன் பாதுகாப்பைக் காரணம் காட்டி கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நிலை தொடர்கிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் சமத்துவமின்மை:
ஆண் குழந்தைக்கு ஒரு நீதி, பெண் குழந்தைக்கு ஒரு நீதி என்ற பாரபட்சம் உணவிலும் தொடர்கிறது. இதனால், இந்தியப் பெண் குழந்தைகளில் பெரும்பாலானோர் ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி, 57%க்கும் அதிகமான வளரிளம் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னேற்றத்திற்கான பரிந்துரைகள்:
பெண் குழந்தைகளின் பாதுகாப்பான, சமத்துவமான உலகை உருவாக்க பின்வரும் நடவடிக்கைகள் அவசியம்:
- தற்காப்புப் பயிற்சி: பள்ளிகளிலேயே தற்காப்புப் பயிற்சிகளைக் கட்டாயமாக்க வேண்டும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும்.
- சுகாதார வசதிகள்: ஒவ்வொரு பள்ளியிலும் பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறை வசதிகளும், நாப்கின் வழங்கும் மற்றும் எரிக்கும் இயந்திரங்களும் போர்க்கால அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டும். இது மாதவிடாய் கால இடைநிற்றலைக் குறைக்கும்.
- ஆண் பிள்ளைகளுக்குக் கற்பித்தல்: ஆண் குழந்தைகளை வளர்க்கும்போதே பெண்களை மதிக்கவும், அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.
- சட்ட விழிப்புணர்வு: பெண்களுக்குத் தங்களுக்குரிய சட்ட உரிமைகள், அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, குற்றங்கள் நடைபெறும் போது தயக்கமின்றிப் புகாரளிக்கும் துணிச்சலை வளர்க்க வேண்டும்.
- கல்வி மேம்பாடு: பெண் குழந்தைகளுக்கு வெறும் ஆரம்பக் கல்வியோடு நிறுத்தாமல், அவர்களுக்குத் தொழில்முறை, தொழில்நுட்பக் கல்வியை உறுதி செய்ய வேண்டும். நீண்ட தொலைவு கிராமங்களில் இருந்து வரும் மாணவிகளுக்குப் பிரத்யேகப் பள்ளிப் பேருந்துகள் அல்லது மிதிவண்டி வழங்கும் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்.
- மனநல ஆலோசகர்: சமூக வலைதள பாதிப்புகள், பாலியல் அச்சுறுத்தல்களைக் கையாள ஒவ்வொரு பள்ளியிலும் பெண் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும்.
- நிதி மேலாண்மை: பெண் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே சேமிப்பு, நிதி மேலாண்மை குறித்த அறிவை ஊட்ட வேண்டும்.
முடிவுரை:
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது சலுகை அல்ல, அது அவர்களின் அடிப்படை உரிமை. அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒவ்வொரு தடையையும் தகர்ப்பது ஒரு நாகரிகச் சமூகத்தின் கடமை. "ஒரு பெண்ணுக்குக் கல்வி புகட்டினால் அது ஒரு தலைமுறைக்கான கல்வி" என்ற முதுமொழிக்கேற்ப, வெறும் முழக்கங்களோடு நின்று விடாமல், செயல்வடிவில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகை உறுதி செய்வோம்.
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை" கொண்ட புதுமைப் பெண்களை உருவாக்க, பெண் குழந்தைகளுக்கு வானத்தைப் பரிசளிக்க வேண்டாம், அவர்களின் சிறகுகளை ஒடிக்காமல் இருந்தாலே போதும். இன்றைய சிறுமிகளை நாளைய இந்தியாவின் ஆளுமைகளாக உணர்ந்து, அவர்களுக்குப் பாதுகாப்பான, சமத்துவமான உலகைப் படைப்போம்.


0 Comments