Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

தோன்றின் புகழொடு தோன்றுக!


பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம் (தெ.ஞா.) குறித்த நினைவலைகள் இவை. மிகச் சிறந்த கல்வியாளர், பேச்சாளர், எழுத்தாளர், சைவம் மற்றும் வைணவ இலக்கியங்களில் ஆழங்கால்பட்டவர், கல்லூரிப் பேராசிரியர் மற்றும் முதல்வர், ஆய்வு மனப்பான்மையும் நிர்வாகத் திறனும் கொண்டவர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் தெ.ஞா. அனைத்திற்கும் மேலாக, இவர் ஒரு நல்ல மனிதர்; பிறருக்கு உதவ வேண்டும் என்ற பாங்கு கொண்டவர்; இளைஞர்களை ஊக்குவிப்பவர்; சின்ன விஷயங்களையும் வாயாரப் பாராட்டக்கூடியவர்.

பொங்கல் கொண்டாட்ட நினைவுகள் (2026)
இந்த ஆண்டு (2026) பொங்கலுக்கு முன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பொங்கல் கொண்டாடுவது என்று தீர்மானித்தோம். நிறுவனத்தின் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும், தெ.ஞா. அண்ணா தவறாமல் இருப்பார். இம்முறையும் அப்படியே! வாய் கொள்ளாச் சிரிப்பும் மனம் கொள்ளா மகிழ்ச்சியுமாக அவர் கலந்துகொண்டார். தனக்குக் கிடைத்த ஜரிகைக் கரை அங்கவஸ்திரத்தைத் தொட்டுப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தார். சின்னக் குழந்தையின் ஆர்வத்தோடும் களிப்போடும் அன்று அவர் நடமாடியது மறக்க முடியாதது.

அன்று சூரிய பூஜை செய்து வழிபட்டோம். நிறுவனப் பதிவாளரும் நானும் முன்னிற்க, பெண் பணியாளர்கள் இணைந்து, இல்லங்களில் செய்வது போலவே, வழிபாட்டின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் நிதானமாகச் செய்தோம். தெ.ஞா. அண்ணாவுக்கு ஏகத்துக்கும் மகிழ்ச்சி. தம்முடைய வழக்கமான பாணியில், தலையை லேசாக ஆட்டி ரசித்தார். ‘அட, டாக்டரம்மாவுக்கு சம்பிரதாயமெல்லாம் தெரியுதே’ என்று சிரித்தார்.

உணவு வேளை உரையாடல்
கொண்டாட்டங்கள் நிறைவடைந்து உணவு வேளையின்போது, அண்ணா, நண்பர் பட்டம் வெங்கடேஷ், நான் என்று வரிசையில் அமர்ந்தோம். அண்ணாவின் விரிந்த ஞானத்தைச் செவிமடுத்துச் சுவைப்பார் வெங்கடேஷ். அன்று, கம்பரைப் பற்றியும், தேரழுந்தூர் பற்றியும் ஐயங்களைக் கேட்ட பின், ‘தற்போது என்ன நூல் எழுதுகிறீர்கள் அல்லது திட்டமிட்டிருக்கிறீர்கள்?’ என்று வினவினார். அதற்கு அண்ணாவின் விடை: ‘நான் எழுத நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டேன். நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்; இப்போது காலன் வந்தால்கூட வரவேற்பேன்.’

ஆன்மிகத் துணிவின் உச்சம்
வாழ்க்கையை நிறைவாக வாழ்வது குறித்த கருத்திலும், துணிச்சல் என்பதற்கான விளக்கத்திலும் தெ.ஞா. அண்ணாவின் விளக்கம் தனித்துவமானது. 1982-இல், ஆச்சார்ய வினோபா பாவே, தம்முடைய வாழ்க்கைப் பொறுப்புகள் நிறைவடைந்துவிட்டதை உணர்ந்து, மரணத்தை வரவேற்கும் நோக்கில், உணவும் நீரும் துறந்து, இறைமையோடு கலந்த பிரயோபவேசம் என்னும் நோன்பைத் தொடங்கினார். இந்தச் சம்பவம் குறித்துச் சிலாகித்துப் பேசுவது தெ.ஞா. அண்ணாவுக்கு வழக்கம். சுயநினைவோடு தாமே வலிந்து காலனை வரவேற்பதுதான் ஆன்மிகத் துணிவின் உச்சம் என்பார். அந்த உச்சத்தைத் தாமும் தொட்டுவிட ஓடிவிட்டாரோ?

பாதுகாப்புக் குறித்த அக்கறை
  • வேலூரில் பேருந்துப் பயணம்: பல ஆண்டுகளுக்கு முன்னர், வெளியூரில் (வேலூர் நினைவு) நிகழ்ச்சி முடித்துவிட்டு, அண்ணா, உமையாள் முத்து, நான் மூவரும் பேருந்தில் திரும்பினோம். அதிகாலை 2.30 மணிக்குச் சென்னையை அடைந்தோம். இருட்டு, கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த பகுதியில், உறவினர் ஒருவரின் இல்ல முகவரி மட்டுமே இருந்த உமையாள் அக்காவின் வீட்டைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அண்ணா தவித்தார். இரண்டு பெண்கள் உடன் வருகிறார்கள் என்பதாலும், அவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதாலும், அன்றைக்கு அவர் அலைக்கழிந்ததும், அவருடைய சிறிய பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு, துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, நீண்ட கம்பு ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆபத்து வந்தால் சண்டையிட ஆயத்தமாகி நின்றதும், ஒன்றரை மணி நேரத் தவிப்பிற்குப் பின் வீடு கண்டறியப்பட்டதும் மனதில் பசுமரத்தாணி போல் உள்ளது.
  • அவளூர்ப்பேட்டையில் அக்கறை: இன்னொரு முறை, சகோதரி சுமதி, நான், அண்ணா ஆகியோர் அவளூர்ப்பேட்டையில் நிகழ்ச்சி முடித்துத் திரும்பியபோது, உடன் வருகிற பெண்கள் கொஞ்சம்கூட கஷ்டப்படக்கூடாது என்பதில் அவர் காட்டிய அக்கறை சொல்லில் அடங்காது.
  • இரவுப் பயணத் திட்டமிடல்: குடியாத்தத்தில் நிகழ்ச்சி முடிந்து, இரவு 10 மணி சுமாருக்கு வேலூர் திரும்பிவிட்டோம். மறுநாள் காலையில் மருத்துவமனைப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நான் பிடிவாதம் பிடித்ததால், அந்த இரவுப் பயணத்தைத் திட்டமிட வேண்டியிருந்தது. வேலூரில் இறங்கியதும் வேகமாக நடந்த அண்ணா, அருகில் இருந்த திரையரங்கில் இரவுக் காட்சிக்குச் சீட்டுகள் வாங்கினார். ‘சினிமா முடிந்து நாம் பேருந்து எடுத்தால், சென்னைக்குப் போகும்போது சற்று விடிந்திருக்கும். அகாலத்தில் போகாமல் இருக்கத்தான் இந்தப் பிளான்’ என்று விளக்கினார். அப்படி நாங்கள் பார்த்த திரைப்படம் – பூவிழி வாசலிலே.
குடும்பப் பாசம்
மருமகள்களை மகள்களாக மதிக்கும் பண்பு அண்ணாவிடம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், அண்ணாவின் பெரிய மருமகள் திடீரென்று நோய்வாய்ப்பட்டபோது, மருத்துவமனையில் பரிசோதனைகள் நடந்துகொண்டிருந்த வேளையில், என் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நல்லா ஆய்டுவா இல்லமா?’ என்று கண்ணீரோடு அவர் பட்ட ஆதங்கம், கன்றுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தாய் தவிக்கும் வாத்ஸல்யம் போன்றது. அண்ணியைப் பற்றிய அன்பான பெருமிதம் அவரிடத்தில் எப்போதும் உண்டு. நடை, உடை, பாவனைகளில் இருவரிடத்திலும் எப்போதும் ஆடம்பரமோ ஆர்ப்பாட்டமோ கிடையாது.

மொழியாற்றல்
தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலப் புலமையும், வடமொழிப் புலமையும் நிரம்பப் பெற்றிருந்தார். பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, மலையாள மொழியைக் கற்றார். பேச்சு மொழியாக மட்டுமல்லாமல், அதன் எழுத்துக்கள் தொடங்கி இலக்கியப் பரிச்சயம் வரைக்கும் பயின்றார். ‘பெடக் கோழி கொத்துனவரு’ என்னும் மலையாளச் சிறுகதை ஒன்றைச் சிரிக்கச் சிரிக்க விவரிப்பார். லீ ஹண்ட் என்பாரின் ‘அபு பென் ஆடம்’ என்னும் கவிதை, அபுவிண்ட கதா என்னும் பெயரில் மலையாளத்தில் கையாளப்பட்டிருக்கும் விதத்தைக் கூறுவார்.

பணிகளும் உறவுகளும்
நீதியரசர் மு.மு.இஸ்மாயிலின் அன்புக்குப் பாத்திரமானவர்; அ.ச.ஞானசம்பந்தத்திடம் மென்மையாக வாதம் செய்தவர்; வேளுக்குடி வரதாசார்ய சுவாமிகளிடம், வைணவ கிரந்தங்களுக்கு முறையாகப் பாடம் கேட்டவர். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர், புதுவைப் பல்கலைக்கழகத்தின் கம்பன் இருக்கைப் பேராசிரியர், பச்சையப்பன் அறக்கட்டளைக் கல்லூரிகளில் பொறுப்பு முதல்வர் போன்ற பணிகளைச் செவ்வனே நிறைவேற்றியவர். சென்னைக் கம்பன் கழகத்தின் துணைச் செயலராகப் பல்லாண்டுகள் பங்காற்றியவர்.

கும்பகோணத்தில் கல்வி பயின்ற காலத்தில், படகுப் போட்டிகளில் பங்கு பெறவேண்டும் என்பதற்காகப் படகோட்டக் கற்றது குறித்து உற்சாகம் பொங்க வர்ணிப்பார்.

சகோதர வாஞ்சையும் பாராட்டும்
தனிப்பட்ட முறையில், என்னிடம் சகோதர வாஞ்சை கொண்டிருந்தார். என் தாயாரோடு நிரம்ப உரையாடுவார். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நான் பொறுப்பேற்ற புதிதில், சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றேன். மேடையில் எனக்காகப் போடப்பட்டிருந்த பெரிய நாற்காலியில் நான் அமர்ந்த சில கணங்களுக்குப் பிறகே அவர் மேடையேறினார். ‘துணைவேந்தர் ஆனதற்கு மெத்த மகிழ்ச்சி’ என்று கூறியபோது, பெரிய நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்த அந்த அன்பு புரிந்தது.

துணைவேந்தர் பொறுப்பை நிறைவு செய்த பின்னர், சென்னைக் கம்பன் கழக விழாவில் தெ.ஞா. அரங்கத் தலைவராக இருந்தார். அடுத்து உரையாற்ற வேண்டிய என்னை அறிமுகப்படுத்தியபோது, ‘துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தது பெரிதல்ல; அப்பழுக்கில்லாத துணைவேந்தர் என்னும் பெயரோடு பணிக்காலத்தை நிறைவு செய்ததுதான் சிறப்பு’ என்று அவர் வாழ்த்தியபோது, தேவர்கள் என்மீது மலர் மாரி பொழிந்தாற்போல் உணர்ந்தேன்.

கம்பரைப் போற்றிய முறைமை
சான்றோர்களைக் கம்பன், முருகன், பாரதி என்றெல்லாம் ஒருமையில் அழைப்பது சகஜம். ஆனால் தெ.ஞா. வேறுபடுவார். ‘மரியாதையோடு கூறுவதுதான் அழகு. ‘அவனை அவர் பாடியது’ என்பதுதானே சங்கத் தமிழ் முறைமை; அரசனைப் புலவர் பாடியது; எனவே, கம்பன் என்று விளிப்பதைவிட ‘கம்பர்’ என்று நாம் விளிப்பதே நன்றாக இருக்கும்’ என்பார். தெ.ஞா. கற்றுக் கொடுத்த பழக்கம், இப்போதும் கம்பர் என்றும் புலவர்களைச் சுட்டும்போது ‘அவர், இவர்’ என்றும் மட்டுமே உரைக்கத் தோன்றுகிறது.

கம்பர் காவியத்தை எழுத்தண்ணிப் பயின்றிருந்த தெ.ஞா., இராம வனவாசத்தின் 14 ஆண்டுகள் குறித்தும், குகன், சுக்ரீவன், வீடணன் ஆகியோரைக் கம்பர் ‘தம்பியர்’ என்று கூறாமல் ‘தமையன்மார்கள்’ என்று போற்றுவது குறித்தும் மேற்கொண்ட ஆய்வுகளும் துல்லியக் கணிப்புகளும், கம்பர் பெயர் நிலவும் வரையில், உசாத்துணைகளாக உலவும்.

வழக்குரைஞர் த.இராமலிங்கம், நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியம், அன்புத் தோழி ஹேமா, சகோதரி உமையாள் முத்து, வழக்குரைஞர் சுமதி, திருச்சி இரா.மாது மற்றும் நானும், இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவரும் அவருடைய அரவணைப்பையும் நிறையவே அனுபவித்திருக்கிறோம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement