Thursday 26 March 2020

புல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா! - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா

கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று.

மூன்றாவது இடத்தில் அமெரிக்கா

உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் என்று அமெரிக்கா கருதிக்கொண்டிருக்கிற வேளையில், போகிற போக்கைப்பார்த்தால் கொரோனா வைரஸ் பரவுகிற வேகத்திலும் அமெரிக்கா முதல் இடம் என்ற நிலையை அடைந்தாலும் ஆச்சரியம் இல்லை.

இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவையும், அது ருத்ர தாண்டவமாடி வருகிற இத்தாலியையும் தொடர்ந்து அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

புள்ளி விவரம் இதுதான்

கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய புள்ளி விவரங்களை உலகத்துக்கு அளித்து வருகிற அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் புள்ளி விவரப்படி - அமெரிக்காவில் 59 ஆயிரத்து 909 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது. 700-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

இதில் நியூயார்க் மாகாணத்தின் பங்கு என்ன தெரியுமா?

இங்கு 25 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்காவில் பாதித்தவர்களின் சரிபாதி எண்ணிக்கை இந்த நியூயார்க்கில்தான். 271 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

புல்லட் ரெயில் வேகம்

அதனால்தான் புல்லட் ரெயில் வேகத்தில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது என்று சொல்லி எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார், அந்த மாகாணத்தின் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோதான்.

அதென்ன புல்லட் ரெயில் வேகம்?

ஜப்பான் நாட்டில்தான் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் புல்லட் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த வேகம் போதாது, மணிக்கு 350 கி.மீ. வேகத்திலாவது இயக்க வேண்டும் என்று அங்கு முயற்சி நடந்து வருகிறது.

ஆனால் இந்த கொரோனா வைரஸ், அதைக்காட்டிலும் வேகமாக நியூயார்க்கில் பரவிக்கொண்டிருக்கிறது.

இரட்டிப்பு

3 நாளுக்கு ஒரு முறை கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை நியூயார்க்கில் இரு மடங்காக அதிகரித்து வருகிறது என்ற தகவலை நமக்கு தருவதும் அந்த மாகாணத்தின் கவர்னரான ஆண்ட்ரூ கியூமோதான்.

அவரது கவலை தோய்ந்த வார்த்தைகள் இவை:

“கொரோனா வைரஸ் பற்றிய கணிப்புகளை சரியாக சொல்லக்கூடிய அதிநவீன நபர்களை நாம் வைத்திருக்கிறோம். சீனா, தென்கொரியா, இத்தாலி மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து வரும் கணிப்புகளின் அடிப்படையில் இவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

3 நாளுக்கு ஒருமுறை இந்த கொரோனா வைரஸ் தொற்று இங்கு இரட்டிப்பாகி வருகிறது என்பதுதான் அவர்களது சமீபத்திய கணிப்பாக இருக்கிறது. இப்படி இந்த வைரஸ் தொற்றி வருவது ஆச்சரியமான ஒன்றாகத்தான் இருக்கிறது”.

இதை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கவலை நியூயார்க்குக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, அங்கு தங்கள் பிள்ளைகளை படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் அனுப்பிவிட்டு இப்போது முள்படுக்கையில் படுத்திருப்பது போன்ற நிலையில் உள்ள இந்தியர்களுக்கும், பிற உலக நாட்டினருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

நியூயார்க்கில் கொரோனா நோயாளிகளை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? படுக்கை வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி உண்டா என்றெல்லாம் எல்லோருக்கும் கவலை எழுந்திருக்கிறது.

நியூயார்க் மேன்ஹாட்டனில் ஜேக்கப் கே.ஜாவிட்ஸ் கன்வென்சன் சென்டர் என்ற அரங்கம் இருக்கிறது. இந்த அரங்கத்தை கொரோனா நோயாளிகளுக்காக 1,000 படுக்கைகள் கொண்ட அவசர ஆஸ்பத்திரியாக மாற்றுகிற வேலையில் அமெரிக்காவின் மத்திய நெருக்கடி கால நிர்வாக முகமை இறங்கி இருக்கிறது.

இது ஒருபுறம் நடந்து வந்தாலும், கொரோனா வைரஸ் பரவும் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது குறைவதாக இல்லை. நாளுக்கு நாள் அதிவேகம் எடுத்து பரவிக்கொண்டிருக்கிறது.

அதனால்தான் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ, “முதலில் இங்கே 1 லட்சத்து 10 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் என முதலில் நாங்கள் கணித்திருந்தோம். இப்போதோ அந்த தேவையானது 1 லட்சத்து 40 ஆயிரம் ஆக அதிகரிக்கும் என தெரிய வந்திருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று கூறி முழி பிதுங்கி நிற்கிறார்.

தற்போதைய நிலவரப்படி நியூயார்க்கில் 53 ஆயிரம் படுக்கைகள்தான் இருக்கின்றன. 3 ஆயிரம் படுக்கைகள் அவசர சிகிச்சை நோயாளிகளுக்காக இருக்கின்றன.

நியூயார்க் மாகாணத்தில் மொத்தம் 25 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது என்று சொன்னால், நியூயார்க் நகரத்தில் மட்டுமே இந்த எண்ணிக்கை சரிபாதியைக் கடந்து 14 ஆயிரத்து 904 ஆக இருக்கிறது.

டிரம்புக்கு மேயர் சொல்வதென்ன?

பாவம் நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ.

“நேர்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். இவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் இங்கே பரவும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லைதான். இப்படி போகக்கூடாது என்றுதான் விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்று கவலையோடு சொல்கிறார்.

அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பார்த்து சொல்வதென்ன?

“ஜனாதிபதி அவர்களே, நியூயார்க் நகருக்கு இந்தக் கதி என்றால் அமெரிக்காவின் பிற நகரங்களுக்கும் இதுதான் நடக்கப்போகிறது என்று நம்புகிறேன்” என்கிறார்.

நியூயார்க் நிலைமை பிற நகரங்களுக்கும் ஏற்பட்டால் அமெரிக்காவின் கதியை நினைத்தால் அது கதிகலங்குவதாகத்தான் இருக்கிறது.

அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை

அதே நேரத்தில் அமெரிக்க நிர்வாகமும் சும்மா இருந்து விடவில்லை.

இந்த கொரோனா வைரஸ் என்ற ராட்சத எதிரியிடம் இருந்து நாட்டு மக்களை காக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சென்ட் சபையில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

150 லட்சம் கோடி ரூபாய்

அமெரிக்க பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் உதவுவதற்காக 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.150 லட்சம் கோடி) செலவிடுவது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி எரிக் யுலேண்ட் அறிவித்திருக்கிறார்.

அமெரிக்க வரலாற்றில் இப்படி பல தரப்பினருக்கும் உதவித்தொகை வழங்குவதற்காக, இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்தது இல்லை.

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இந்த தொகையில் இருந்து நேரடி நிவாரணம் கிடைக்கப்போகிறது. வேலையில்லாதவர்களுக்கான நிவாரணத்தை விரிவுபடுத்தப்போகிறார்கள்.

சம்பளம் போட உதவி

கொரோனா வைரஸ் காரணமாக வேலைக்கு போக முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிப்போய் விட்ட பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் சிறுதொழில் நிறுவனங்கள் கையை விரித்து விடக்கூடாது என்பதை டிரம்ப் நிர்வாகம் கவனத்தில் கொண்டுள்ளது.

அந்த வகையில் பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக சிறுதொழில் நிறுவனங்களுக்கு 367 பில்லியன் டாலர் (சுமார் ரூ.27 லட்சத்து 52 ஆயிரத்து 500 கோடி) தரப்போகிறது.

பெரிய தொழில் நிறுவனங்களை மட்டும் விட்டு விடுவார்களா என்ன? அவற்றுக்கு மானியத்துடன் 500 பில்லியன் டாலர் கடன் உதவி (சுமார் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் கோடி) வழங்கப்பட இருக்கிறது.

இயல்பு நிலை வருமா?

இத்தனைக்கு மத்தியிலும் மக்கள் நினைத்துக்கொண்டிருப்பதை விட வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.

ஈஸ்டர் பண்டிகைக்கு (ஏப்ரல் 12-ந்தேதி) முன்னதாகவே அமெரிக்கா பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

அது நடக்குமா?

இந்த நேரத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும்.

அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், டிரம்ப் நிர்வாகத்துக்கு ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இந்தியாவில் 21 நாட்கள் முழுமையான ஊரடங்கை அறிவித்து பின்பற்றத்தொடங்கி இருக்கிறார்கள். பிற உலக நாடுகளும் இதே போன்று ஊடரங்கு நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றன. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு இதே போன்ற நடவடிக்கையை, அதாவது அமெரிக்காவிலும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் கோரிக்கை.

ஆனால் டிரம்பின் கருத்து வேறாக இருக்கிறது. “அமெரிக்காவை முழுமையாக முடக்கி, ஊரடங்கு நடவடிக்கை எடுக்க முடியாது, பொருளாதாரத்தில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கிற ஒரு நாட்டில் அதைச் செய்ய முடியாது. அது மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும். கொரோனா வைரசுக்காக ஒரு முடக்கத்தை அறிவித்தால் அது கொரோனா வைரசை விட மோசமாகப்போய்விடும்” என்பது டிரம்பின் பார்வை.

அப்படியென்றால், புல்லட் ரெயில் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிற கொரோனா வைரசை கட்டுப்படுத்த என்னதான் செய்யப்போகிறார், டிரம்ப்?

ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

No comments:

Popular Posts