Sunday 22 March 2020

சுகம் தரும் சூரிய மருத்துவம்...!

கே.கோவிந்தசாமி,

இயன்முறை மருத்துவர், ஆலங்குடி.

இலவசமாய் கிடைக்கும் எந்த பொருளுக்கும் உலகில் மதிப்பு இருப்பதில்லை. சும்மா கிடைத்திருந்தால் சுதந்திரமும் கூட சுமாராகவே மதிக்கப்படும். இலவசமாக சூரிய ஒளி கிடைப்பதால் அதனைப் பயன்படுத்த தயங்குகிறோம். வெளியில் போய் வெயிலில் விளையாடி விட்டு வா என்று நம்முன்னோர்கள் குழந்தைகளை அனுப்பினார்கள். வெயிலில் போகாதே கருத்துவிடுவாய் என்று கருத்தாய் வளர்க்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். நவீன இளைஞர்கள் மெயிலுக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை விட வெயிலுக்கு கொடுத்து பழகவேண்டும். சூரியஒளியினால் பல நன்மைகளை நம் உடம்பு பெற்று வருகிறது.

இரண்டாம் உலகப் போரின்போது வீரர்கள் தங்கள் காயங்களையும், முறிந்த எலும்புகளையும் வெயிலில் தினம் காட்டியதால் நல்லமுறையில் விரைவில் குணமடைந்ததாக மருத்துவ குறிப்பு கூறுகிறது. ஆதிகாலத்து மனிதன் சூரிய மருத்துவத்தை இலவசமாகவே பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்தான். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் பூமத்திய ரேகையைத் தாண்டி வாழ்வதால் குறைந்த அளவே சூரியஒளி அவர்களுக்கு கிடைக்கிறது. நாம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருப்பதால் நமக்கு அதிகளவில் சூரியஒளி கிடைக்கிறது. ஒரு ஆண்டில் 2716 மணிநேரமும் நம்மூரில் வெயில் அடிக்கிறது. இந்த வெயிலைப் பயன்படுத்தி வைட்டமின் ‘டி’யைப்பெற முயற்சிக்கவேண்டும். மருந்துகளில் மிகச்சிறந்த மருந்து வைட்டமின் ‘டி’ தான். பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டருக்கும் அப்பாலுள்ள சூரியஒளி பூமியில் படும்போது பல நன்மைகளை வழங்குகிறது. சூரியனில் கண்ணுக்குத் தெரியாத எக்ஸ்ரே கதிர்கள், அல்ட்ரா வயலெட் ‘சி’ கதிர்கள் மற்றும் இன்ப்ராரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிர்களும் அடங்கியுள்ளன.

முறையாக நாம் சூரியக்குளியல் செய்தால் அதிக அளவில் ‘வைட்டமின் டி’ நமது உடம்புக்கு கிடைக்கும். சுவிட்சர்லாந்தை சேர்ந்த அர்னால்டு ரிட்லி என்ற இயற்கை மருத்துவர் மலைப்பகுதிக்குச் சென்று சூரியஒளியைக்குறித்து ஆராய்ச்சி செய்து, சூரிய ஒளியானது உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புசக்தியை தருகிறது என்பதை கண்டறிந்தார். எனவே இவரை சன்-டாக்டர் என்றும் அழைத்தனர். 1870-ம் ஆண்டில் சூரியக்குளியல்முறை மக்களிடையே நடைமுறைப்படுத்தபட்டதாக தகவல்கள் உள்ளது. முறையாக சூரியக் குளியல் செய்பவர்கள் மொட்டைமாடி அல்லது வெயில்படும் மைதானத்தில் குறைவான ஆடையுடன் அல்லது வாழை இலையினை உடல்முழுவதும் மூடிக்கட்டிக்கொண்டு ஒரு 10 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை வெயிலில் படுத்திருந்து பிறகு எழுந்தால் வேண்டாத நச்சுப்பொருட்கள் வியர்வையுடன் வெளியேறி உடல் ஆரோக்கியமடையும். காலை 10 மணிக்கு முன்பாகவும், மாலை 4 மணிக்கு பின்பும் சூரியமருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது.

யோகாசனப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் என்ற சூரிய ஒளியுடன் கூடிய உடல் இயக்கப் பயிற்சியை கற்றும் பயன்பெறலாம். உடல் எரிச்சல், மயக்கம், தலைவலி உள்ளவர்கள் சூரிய ஒளியில் நிற்பதை தவிர்க்கலாம். வெயில் உடம்பில் படாமல் அலுவலகத்திற்கு குளிரூட்டப்பட்ட கார்களிலும், அலுவலகங்களிலும் பணிசெய்பவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது வெயிலில் உலாவுவது சிறந்தது.

இன்று உலகிற்கே சவாலாக இருந்துவரும் கொரோனா வைரஸ் சூரியவெப்பத்திற்கு பயப்படுகிறது. 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த வைரஸ் செத்துவிடுகிறது. எந்த ஒரு வைரசாக இருந்தாலும் குளிர்காலத்தில் அதிகமாக பரவுவதாகவும், இந்தியாவில் வெயில் வளம் அதிகமாக இருப்பதால் வைரசால் அவ்வளவாக பரவமுடியாது என்றும் நம்பப்படுகிறது. வெயில் பண்டையகாலம் தொட்டு சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்பட்டு வருகிறது. நமது நாட்டில்தான் வெயிலில் துணி மற்றும் தானியங்களை நன்கு காயவைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இயற்கையாகவே மனித உடலானது நோய் எதிர்ப்புசக்தி பெற்றுள்ளது.

ஆனால் நமது உணவுப்பழக்கங்களும், நவீன மருந்துகளும் இதை குறைத்துவிட்டன. கொரோனா, சார்ஸ் போன்ற நோய்கள் எல்லாம் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களையே தாக்குவதாக ஆய்வுகள் கூறுகிறது. நோய் எதிர்ப்புசக்தி குழந்தைகள், பெரியவர்கள், புற்றுநோயாளிகளுக்கு குறைவாகத்தான் இருக்கும். வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, இஞ்சி, கொய்யா, நெல்லிக்கனி, மஞ்சள் தூள், கீரைவகைகள் போன்றவை நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.

இஞ்சி பழங்கால மருத்துவமுறையில் தனியிடம் பிடிக்கிறது. இஞ்சி டீ, லெமென் டீ, சுக்கு-மல்லி காப்பி போன்றவை பொதுவாகவே உடம்பிற்கு நல்லது. இஞ்சி உடம்பின் வெப்பசக்தியை அதிகரித்து தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. இதை சித்தர்கள் “காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால்” நோய்களை துரத்தலாம் என்கிறார்கள். வேம்பு, மஞ்சள்தண்ணீர், சூரியஒளி போன்றவை சிறந்த கிருமிநாசினியாகும். திருவிழா காலங்களில் மஞ்சள் நீராடுவது கூட்டம் கூடுவதால் நோய் தொற்றாமல் இருப்பதற்கேயாகும். இதயத்தின் நான்கு அறைகளையும் பாதுகாத்தது அப்போதைய அஞ்சறைப் பெட்டிகளே. சூரியஒளி ஏழு நிறங்களின் கலவையாகும். ஏழுநிறங்களிலும் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகள் உள்ளன. சூரியஒளியால் பக்குவப்படும் கனிகளே நல்லசுவையை தரும். சூரியஒளிபடும் உடம்பே நல்ல சுகத்தை பெறும்.

No comments:

Popular Posts