Sunday 22 March 2020

உலகை ஒன்றிணைத்த கிருமி...!

வே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை.

உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்துவிட்டு, உலக வெப்பமயமாதல் போன்ற எல்லாவற்றையும் எளிதாகவே எடுத்துக்கொண்டது. அதே வேளையில், பூகோளத்தின் எல்லா எல்லைக் கோடுகளுக்கும் உள்ளே புகுந்த, வன்மம், வெறுப்புணர்வு, பகைமை, இனம், மொழி, மதம் என்று ஆயுதங்களை தொழில்நுட்ப ரீதியாக ஏவிக்கொண்டது. டெல்லி வன்முறை தொடங்கி, எல்லா இடங்களிலும் மனித விரல்கள் குற்றம் கூற மட்டுமே உயர்ந்து கொண்டிருந்தன. தினமும் படிக்கும் பார்க்கும் செய்திகளின் ஆக மொத்த அதிக சதவீதத்தை இவை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தன. ஆனால், மனித குலம் ஒன்றை உணராமலேயே தன் தலைக்குள் ஏற்றி வைத்த எந்த வன்மத்தையும் எடை குறையாமலே வைத்துக் கொண்டு வந்தது. ஆனால் நான் உன்னிலும் பெரியவன் என்பதை இயற்கை எத்தனையோ முறை நிகழ்த்திக் காட்டியுள்ளது. அதீதமான வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி, குளிர், வெப்பம் என்று ஏதோ ஒரு ஆயுதத்தால் அது தனது தற்காப்புக் கலையை காட்டிக் கொண்டே வந்தது.

ஆனால், ஒற்றைச் சொல் இன்று உலக மக்களை அச்சுறுத்தும் ஆயுதம் ஆகிவிட்டது. பேரரசுகள், வல்லரசுகள் என்று தாங்களே செய்த கிரீடம் சுமந்த நாடுகள், அணு உலைகள், விஞ்ஞானம், கப்பற்படை, விமானப்படை, அதிநவீன ஆயுதங்கள் உலகின் மிகப் பாதுகாப்பான நடைமுறைகளை நொடிப்பொழுதில் அளிக்கும் ஆயுதங்கள்... என்று ஒரு நாட்டை மற்றுமொரு நாடு ஆளுமை செய்து கொண்டு வந்தன. ஆனால் ஆயுதங்கள் எல்லாம் அர்த்தமற்று, விஞ்ஞானம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சூழலில் ஒட்டுமொத்த உலகமும் இன்று அறிவு உலகத்தை அண்டுகிறது. மனித குலத்திற்கு மட்டுமல்லாமல், இந்த மண்ணுக்கும் கேடுவிளைவிக்கும் மனிதனை எதிர்த்து இயற்கை அன்னை எழுந்து விட்டாள். மூன்றாம் உலகப்போரை அவளே தொடங்கிவிட்டதை போலத்தெரிய வருகிறது...

உலகின் அதி நவீனமான அத்தனை ஆயுதங்கள், படைபலம் எல்லாவற்றுக்கும் எந்த வேலையும் வைக்காமல், நுண்ணோக்கி மூலமாக மட்டுமே காணக்கூடிய மெல்லிய, மிக நுண்ணிய ஒரு ஒற்றைக்கிருமி இன்று உலகத்தை அச்சத்தின் பிடிக்குள் சிறை வைத்து விட்டது.

‘கொரானோ’ என்று பெயர்கொண்ட கிருமிதான் இன்று பேரரசன். புராண காலங்களில் நாம் படித்தது போல அசுரனின் ஆயுதம். இதை மனிதகுலம் நோக்கி இயற்கை எய்ததன் காரணம் தேவையற்றது.

மதம், மொழி, இனம், சினம், வெறுப்பு, பகை எல்லாவற்றையும் மறந்துவிட்டு அதைப் பற்றி மட்டுமே பேசவைத்த பெருமையை அந்தக்கிருமி கண்ணுக்குப் புலப்படாத காலனின் ஆயுதமாக்கி மனிதகுலத்தின் தலையெழுத்தை அதன் மொழியில் எழுதிச் செல்கிறது. மாண்டவர் ஆயிரம், மீண்டவர் கொஞ்சம் என்றாலும் உலக மக்கள் தொகை பெருக்கத்தை கை கொண்டு ஏதோ ஒரு பாடம் நடத்தி விட்டுத்தான் போகும் என்ற நிலையில் அதன் ஆபத்தான பயணம் தொடர்கிறது..

சற்று யோசியுங்கள்... கடந்த ஒரு வார காலமாக காணாமல் போனவை வெற்றுக் கூச்சல்கள், வெறுப்பை உமிழும் கருத்துப் பரவல்கள், உன்னை ஒழித்து நான் வாழ்வேன்... என்னை ஒழிக்க உன்னால் முடியுமா? என்று திரிந்து கொண்டிருந்த அனைவரையும் தனது தர்பாருக்குள் அடக்கிவிட்டது இயற்கை. யாரும், யாருக்கும் பெரியவனில்லை... நான்... நான்தான்... இந்த மானிடத்தின் இறுதியான தலைவன் என்பதை இயற்கை மீண்டும் ஒரு முறை ரத்தம் தொகுத்து எழுதி வருகிறது...

எங்கே உன் கப்பல்? எங்கே உன் விமானம்? எங்கே உன் அணு ஆயுதம்? என்று அந்தக்கிருமி கேட்கும் கேள்விக்கு முன்னால், மனிதகுலம் மண்டியிட்டு அழுகிறது. நாடுகளும், கோடுகளும் சுருங்கிப்போய், தன்னைத்தானே சிறை வைத்துக் கொள்ளும் நிலைமைக்கு உலகத் தலைவர்களே ஊரை விட்டு கிளம்ப பயந்து போய் உட்கார்ந்து விட்டார்கள். ஆராய்ச்சிகள் ஒருபுறம், அச்சம் மறுபுறம் என்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் உலக அரசுகள் கண்மூடி தூங்கவும் பயந்து, அதை விரட்டும் வழி தேடி விழிப்புணர்வை மறுபுறம் கொண்டுவந்து இந்த இயற்கை உருவாக்கிய உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்று கொண்டுதான் இருக்கிறது. எனினும், இயற்கையோ நானே வல்லரசுகளையும் வதை செய்யும் பேரரசன் என்று பெருமிதம் கொள்கிறது.

இறைவன் தன் இருப்பை எந்த விதத்தில் காட்டினாலும் சில வேளைகளில் இப்படித்தான் இயற்கையை ஆயுதமாக்கி கற்பிப்பான்போலும். எல்லா விரல்களையும் உற்றுப் பார்த்தீர்களா? ஆவேசமாய், ஆணவமாய், எச்சரிக்கையாய், மிரட்டலால், உயர்ந்து கொண்டிருந்த அத்தனை விரல்களும் மடங்கி சுருங்கி ‘வணக்கம்’ என்று கைகூப்பும் கரம் ஒன்றே என்றைக்கும் நிரந்தரமானது, நிலையானது என்று நிரூபிக்கபட்டுவிட்டது. என்னையும், உன்னையும், நம்மையும், அவர்களையும் பகை மூட்டிய நாவுகளுக்கு, கைதொட்டுப் பேசுவதே மரணத்தின் தொடுதல் என்று மாற்றி தொடாதே என்று உத்தரவிட்டுள்ளது அன்பை மட்டும் இந்த உலகம் ஆராதிக்க வேண்டும் என்ற அரிச்சுவடியை மீண்டும் மணல் மேல் எழுதும் எழுத்து போல் இயற்கை எழுதி வருகிறது. ஒரு தனி மனிதனின் சாதிய, இன, மொழி, மதம் சார்ந்த நிலைப்பாடுகளை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்டு, மனிதர்களே! உங்கள் அறிவை என்னிடம்.. எனக்காக மட்டுமே செலவிட்டு என்னோடு இணைந்து வாழுங்கள் என்று இயற்கை அழைக்கிறது.

எத்தனையோ கேள்விகள் மூலம் பாடம் கற்றுக்கொண்ட மனித குலம் தனது அறிவாற்றலால் இந்த சூழலையும் வெல்லும். ஆனால், அதற்கு முன்பாக அதற்கு கொடுக்கப்போகும் விலை எத்தனை உயிர்கள்? என்பதே முக்கியமான கேள்வி. எல்லா விரல்களும் இணைய வேண்டிய நேரம் இது. நாம் பணத்தின் பின்னால், புகழின் பின்னால், சாதிகளின் பின்னால், மதத்தின் பின்னால் ஓடிய அத்தனை ஓட்டத்தையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு ‘வாழ்க்கை’ என்பது ‘வாழ்தல்’ என்று உணர்வதற்கான உன்னதமான நேரமிது. எப்போதும் ஈரம் குறையாத இதயங்களுக்கு சொந்தமான நம் தமிழ் மண்ணில் இருந்தே தொடங்குவோம். எல்லா பகைமை, வெறுப்பு, கொடி, நிறம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும். நாம் மனிதகுலத்தின் மறுமலர்ச்சிக்கான மீட்டெடுப்பை அறிவுசார் ஆலயங்களில் இருந்து ஆராய்ச்சிகளே அர்ச்சனை என்று இயற்கையோடு இயைந்து வாழ்வோம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இறைவா! எது வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். மனிதம் என்பதே கடைசிவரை வாழ வேண்டிய தத்துவம் என்று கைகூப்பித்தொழுது களமிறங்குவோம். நாளையும் நமக்கானது என்று நம்புவோம்.. இதோ எல்லா ஆலயங்களிலும் உள்ள கடவுளை வணங்கவும் கட்டுப்பாடுகள். கூடிய விரைவில் வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு அதிகமாகும், இந்த வேளையில் நாம் நமது வாழ்வின் எல்லா கோட்பாடுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நொடியில் நிற்கிறோம். அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் நாம் கைகொடுத்தாக வேண்டும்.

இயற்கை மீண்டும் எழுதுகிறது.. ‘கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்’ என்று..

No comments:

Popular Posts