Saturday, 4 January 2020

இந்த நாளும் இனிய நாளே...!

இந்த நாளும் இனிய நாளே...! பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், தனியார் கல்லூரி, திருநெல்வேலி.

ஒவ்வொரு நாள் விடியலும் சிலபேருக்கு விருப்பாயிருக்கிறது, சிலபேருக்கு ஏன் இந்தநாள் விடிகிறது? என்று வெறுப்பாயிருக்கிறது. இந்தநாள் இனியநாள் என்பதும், இந்தநாள் நொந்தநாள் என்பதும் மனதின் கற்பிதங்களே அன்றி வேறில்லை. காலண்டர்களின் கழிவா நாள்? என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது, நாள் என்பது நம் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டிருக்கும் வாள் என்று சொல்லி அதிர வைக்கிறார் வள்ளுவர்.

நம்முடைய ஒவ்வொரு நாளையும் யார் தொடங்கி வைக்கிறார்கள்? அதிகாலைக் குளிரிலும் நாம் எழும்முன் நம் வீட்டுக்கதவில் நாளிதழைச் செருகிவிட்டு நகர்கிற செய்தித்தாள் போடுபவரா?, இரண்டாம் மாடிவரை பால்பாக்கெட்டைத் தூக்கி எறிந்துவிட்டு அப்பால் நகர்கிற பால்காரரா?, தெருவை அடைத்து மார்கழிக் கோலமிட்டுப் பூசணிப் பூவை அதன் நடுவில் செருகி வைத்திருக்கும் எதிர்வீட்டு பெண்ணா?, தாமிர பாய்லரை அழகாக விளக்கிக் கழுவி விபூதி குங்குமமெல்லாம் வைத்து உள்ளம் உருகுதையா பாட்டோடு முதல் டிக்காஷனில் காபி போட்டு நம் முன்நீட்டுகிற தேநீர் கடைக்காரரா?. யார் தொடங்கி வைத்தாலென்ன ஒவ்வொரு விடியலும் புதிதாய்தானிருக்கிறது. அன்று என்ன நடக்குமென புதிராய்தானிருக்கிறது. எந்த விடியலிலாவது நாம் எதையாவது ரசித்திருக்கிறோமா? யாரும் கண்டுகொள்ளாவிட்டால் கூட நம் வீட்டுவாசலில் தினமும் பூத்திடும் நித்ய கல்யாணிப்பூவை என்றாவது நாம் பார்த்ததுண்டா? எரிந்து எரிந்து கண்ணாடியைக் கரியாக்குகிற சிமினி விளக்கை விபூதிபோட்டுப் பளிச்சென்று ஆக்குகிற ஆச்சியம்மாக்களையும், மோர்விற்ற கணக்கை ஒரு துளி மோர் விட்டு நம்வீட்டுச் சுவரில் எழுதிச்செல்கிற மோர்க்கார அம்மாக்களையும், பசலிப் பழங்களை நசுக்கி நகச்சாயம் போட்ட குழந்தைகளையும், இன்றைய காலைப்பொழுதுகளில் நம்மால் காணமுடியுமா? அவர்களை எல்லாம் கடந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.

கார்த்திகை நாளன்று பச்சரிசி மாவு முக்கி ஆச்சி வைத்த கைத்தடம் இன்றும் உண்டு எங்கள் மனதில். ஈரப்பதம் மிக்க இரவுகளில் ரீங்காரமிடும் சில்வண்டுகள் இளம்காலைப் பொழுதுகளில் எங்கே போகுமோ? தெரியாது. உப்புவிற்பவர்கள், கீரைவிற்பவர்கள், காய்கறி விற்பவர்கள் என்று எப்போதும் குரல்களால் நிரம்பிய தெருக்கள், இப்போது ஒருகுடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்ததாம் என்று சொல்லக் குழந்தைக் குரல்களற்று வெறிச்சோடிக் கிடக்கிறது. மழையை ரெயினாக்கி, அரிசியை ரைசாக்கிக் கொண்டிருக்கின்றன இன்றைய கல்விக்கூடங்கள். சமைத்து முடித்தபின் காகத்தை அழைத்து கவளச்சோறுவைத்த காலம் போய், ஓவனில் வைத்துவிட்டு வெளியே செல்லும் நிலையல்லவா இன்று ஒவ்வொரு விடியலிலும். யாரைப் பற்றிக் கவலைப்பட யாருக்கு நேரமிருக்கிறது இன்றைக்கு. பிரிட்ஜில் தொடங்கிய ஐஸ் வாழ்க்கை, வெளிநாட்டு மகனின் வருகைக்காக இறந்தபின்னும் பிரிசரில் பனிக்கட்டி உறைவோடு காத்துக்கொண்டிருக்கிறதே. இழப்புகளோடும் இறப்புகளோடும் ஒவ்வொரு நாளையும் வேகமாய் கடந்து கொண்டே இருக்கிறோமே. வேலைக்காகவும் சூழ்நிலைகளுக்காகவும், வாழ்ந்த ஓரிடம் விட்டு வசிக்கும் வேறிடம் நோக்கித் துக்கத்தை மென்று முழுங்கி ஒவ்வொரு விடியலிலும் இடம்பெயர்ந்து கொண்டேதானிருக்கிறோம்.

கழுதையின் முகத்தில் கண்விழித்தாலும் அன்று கிடைப்பதுதான் கிடைக்கும் என்று, அவரவர் கைகளை நம்பி, அவரவர் பிழைப்பைப் பார்த்து, அவரவர் வழியில் அவரவர் போய்க் கொண்டுதானிருக்கிறார்கள். ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் மழைக்காலத் தட்டான் பறத்தல்கள் இருந்தாலும் வலிபெயர்த்தல்தானே நிதர்சன வாழ்க்கை. நகரமுடியா வலிகளோடும், தவிர்க்க முடியா பழிகளோடும் நம் நாட்கள் நாட்காட்டிகளின் செவ்வகத் தாள்களுக்குப் பின்னே நகர்ந்து கொண்டுதானிருக்கின்றன. பசியோடு வரும் ஏதோவொரு பொழுதில் நாள் நம்மையும் தின்று சிரிக்கத்தான் போகிறது. குழப்பம் வரும்போது மவுனமான அலசலும், மனம் கொதிக்கும்போது பொறுமையும், இன்றைய இளம்காலைப் பொழுதுகளில் அவசியம். இல்லையென்றால், அந்த நாளின் இரவை மருத்துவமனையில் கழிக்கவேண்டியிருக்கும். நாளை நம் நிலை மாறும் எனும் நம்பிக்கையில்தான் ஒவ்வொருநாள் இரவும் உறங்கப்போகிறோம். நம்மைத் தவிர வேறுயாரும் நமக்கு உதவமுடியாது. காலில் முள்குத்தி வலித்ததைவிடக் காதில் சொல்குத்தி வலித்த வலியின் அடர்த்தி அதிகம். உனக்கான உலகு இது! ஓடிக்கொண்டேயிருக்கும் பூமி போல் நீயும் ஓடிக்கொண்டே இரு! எதையாவது தேடிக்கொண்டே இரு! என்று வாழ்ந்தால்தான் எதையும் நம்மால் எதிர்கொள்ளமுடியும். உதடுகள் சொல்வதைவிட உள்ளம் சொல்வது தெளிவானது என்பதைப் புரியும் பக்குவம் வந்துவிட்டால் எந்தத் துக்கமும் நமக்கில்லை. கசந்தகாலமும் வசந்தகாலம் ஆகும் என்கிற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளையும் நாம் தொடங்குகிறோம்.

எழும்போது வரும் முதல் எண்ணம் நம்பிக்கைதான். உண்ணிகளைக் கொத்தித் தின்கிற சிறு பறவைகளால் மாடுகளை எதுவும் செய்யமுடிவதில்லை. அதுபோல் நாம் அனுமதிக்காத வரை எந்தக் எந்தவேளையிலும் துன்ப உண்ணிகள் நம்மீது ஒட்டாது. தூரத்தில் வரும் யாரையாவது பூச்சாண்டியாக்கிச் சாப்பிடாத குழந்தையைச் சாப்பிடவைக்கும் தாய்மாதிரி, வாழ்வின் நாட்கள் யாரையாவது வருத்திக் கொண்டேதானிருக்கிறது. அதற்கெல்லாம் கவலைப்பட்டால் எதுவும் நம்மால் செய்யமுடியாது.

உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்யும் பாசாங்கற்ற மனிதர்கள் இன்னும் நம்மோடு வாழத்தான் செய்கிறார்கள். யார்தட்டி எந்தக் கதவு திறக்கும் என்று தெரியாது. எனக்கான நம்பிக்கைச் சொற்கள் உங்களிடம்கூட இருக்கலாம், அதனால் யாருடைய நம்பிக்கைச் சொற்களையும் நசுக்கும் காலைப் பொழுதுகள் நமக்குவேண்டாம். சில்வண்டுகளின் ரீங்காரம், வளையல் பூச்சிகள் வளையவரும் முற்றம், மண்புழுக்கள் நெளியும் நம்வீட்டுப் புறவாசல்கள், சீறிப்பாயும் ஆட்டோக்களின் சப்தம், பள்ளிக்குக் கிளம்பும் குழந்தைகளின் காலைப் பரபரப்பு, சைக்கிள் மணியோடு மதியப்பொழுதுகளில் வந்துபோகும் போஸ்ட்மேன்கள், பஞ்சுப்பாதங்கள் மிதித்து தாத்தா மார்பில் ஏறி விளையாடும் சிறுகுழந்தைகள் என்று ஒவ்வொரு நாளும் நீங்கள் திரும்பிய இடமெல்லாம் சின்னசின்ன இன்பங்கள். மேலே போனபின்தான் சொர்க்கம் பார்க்கமுடியுமா என்ன? இருக்கும் இடத்தையே சொர்க்கமாக்கமுடியும் நம் மனம் நினைத்தால். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று உற்சாகமாய் சொல்லத்தோன்றுகிறது ஒவ்வொரு காலைப்பொழுதிலும்! ஒவ்வொருவருக்குள்ளும் அரைநூற்றாண்டாய் விடைதேடக்கூட முடியா ஆயிரம் வினாக்கள் உண்டு. எந்த வினாவுக்கும் முற்றும் முடிவுமான விடை என்று எதுவும் கிடையாது. கையில் தந்தவுடன் கோடிட்ட இடத்தை நிரப்புவதற்கு வாழ்க்கை ஒன்றும் பொதுத்தேர்வு வினாத்தாளன்று. அது ஒவ்வொரு நொடியும் உணர்ந்து வாழவேண்டிய ஓர் இன்ப அனுபவம். என்னோடு சேர்ந்து என் நிழலும் பயணிப்பது மாதிரி என் விருப்புவெறுப்புகளும் சேர்ந்தே என்னை நானாக்குகிறது. விடியலை என் நாளாக்குகிறது. எல்லா வளமும் எல்லோருக்கும் வாய்க்கிறதா என்ன? வாய்த்ததை வைத்து வாசத்தோடு வாழ்வதாய் நினைப்பதிலிருக்கிறது வாழ்வின் இன்பம்.

No comments:

Popular Posts