Saturday 4 January 2020

விழியற்றோருக்கு வழிகாட்டிய பிரெய்லி

விழியற்றோருக்கு வழிகாட்டிய பிரெய்லி | நா.சு.சிதம்பரம், இயற்பியல் ஆசிரியர் (அறிவியல் விழிப்புணர்வு பணிக்குத் தேசிய விருதுபெற்றவர்). இன்று (4-ந்தேதி) விஞ்ஞானி பிரெய்லி பிறந்தநாள்.

முந்தைய கால கட்டத்தில் கண் பார்வையை இழந்தவர்கள் எப்படித் தங்கள் பார்வையை இழந்து எதையும் பார்க்க இயலாமல் போனார்களோ, அதே போல் அவர்கள் படிப்பதற்கான, படித்து முன்னேறுவதற்கான வாய்ப்பையும் இழந்தார்கள் என்பதுதான் அனைவரின் கருத்தாக அமைந்திருந்தது. ஆனால் அவர்கள் அனைவரின் வாழ்விலும் ஒளி விளக்கேற்ற கண் பார்வை இழந்த ஒருவரே காரணமாக விளங்கினார் என்பது வியப்பிற்குரியது. அவர்தான் லூயிஸ் பிரெய்லி என்பவர். இவர் கண்டு பிடித்த முறை கண்பார்வை அற்றவர்களால் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக அவர்கள் படித்துப் பட்டம் பெற்று பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்களெல்லாம் பிரெய்லியை நினைத்துப் பார்க்கிறார்களோ என்னமோ அவருடைய பிறந்த நாளாகிய இன்று நாம் அவருடைய வரலாற்றைச் சற்றே புரட்டிப் பார்ப்போம்.

லூயிஸ் பிரெய்லி என்பவர் 1809-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி பிரான்சில் உள்ள கூப்வ்ரே என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தையார் சைமன் ரெனே என்பவர். குதிரைகளுக்கான சேணங்களையும், தோலால் ஆன பிற பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருடைய தாயாரின் பெயர் மோனிக். இவருடைய தந்தை, தோலில் துளையிடுவதற்கும், செதுக்குவதற்குமான கருவிகள் பிரெய்லிக்கு விளையாட்டுப் பொருட்களாகவும் ஆகியது. அவற்றை வைத்துக்கொண்டு பிரெய்லி விளையாடிக் கொண்டிருந்த போது அவற்றில் கூரான ஒன்று எதிர்பாராதவிதமாக இவருடைய கண்ணைக் குத்திவிட இவர் தன் ஒரு கண்ணை இழந்தார். அப்போது இவருடைய வயது மூன்று. பாதிக்கப்பட்ட கண்ணைக் குணமாக்க முயற்சிகள் நடந்தன. அன்றைய சூழலில் மருத்துவ வசதிகள் அதிகமாக இல்லாத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி இவருடைய மற்றொரு கண்ணும் பாதிக்கப்பட்டது. அதனால் இவருடைய ஐந்தாவது வயதில் முழுப் பார்வையையும் இழந்தார்.

பார்வையை இழந்தபோதிலும், இவருடைய பெற்றோர்களின் அன்பான அரவணைப்பினால், சிறு வயதுக் கல்வியை பிறந்த ஊரிலேயே பெற்றார். பத்து வயதிற்குப் பிறகு கண் பார்வை இழந்தவர்களுக்காக முதன் முறையாகப் பாரிசில் தொடங்கப்பட்ட ராயல் நிறுவனத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். அந்தப் பள்ளி நிறுவனர் வேலென்டின் ஹாய் என்பவர் அவருக்குத் தெரிந்த வகையில் கண் பார்வை இழந்தவர்கள் படிப்பதற்காக ஒரு முறையை உருவாக்கியிருந்தார். அதன்படி லத்தீன் எழுத்துக்களைக் கடினமான தாளில் புடைப்புருக்களாக அமைத்து அவற்றைத் தொடுவதன் மூலம் எழுத்துக்களைப் புரிந்துகொண்டு படிக்குமாறு அமைத்திருந்தார். ஆனால் இம்முறையானது சில சமயங்களில் தெளிவற்றும், நாள்பட, நாள்பட தாள் கிழிந்தும், எழுத்துக்கள் மறைந்தும் போனதால் சரியான முறையாக அமையவில்லை.

பிரெய்லி இந்தப் புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படித்துத் தெளிவாகப் புரிந்துகொண்டார். புரிந்துகொண்டதோடு அல்லாமல் அவற்றை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். சில காலங்களுக்குப் பிறகு அவரே ஆசிரியராக மாறிப் போனார். வரலாறு, வடிவ கணிதம், இயற்கணிதம் முதலியவற்றை மற்றவர்களுக்குப் போதிக்க ஆரம்பித்தார். அது போலவே இசையிலும் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. காதால் கேட்பதை வைத்தே இசையையும் பயில ஆரம்பித்தார். அதற்காகத் தனியே இசைக் கருவியையும் பயன்படுத்தி வந்தார். கிறிஸ்தவ ஆலயங்களில் இசைக்கும் பழக்கத்தை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

அப்பொழுதுதான், கண்பார்வை இழந்தவர்கள் பிறரின் பரிதாபமின்றி, அவர்களிடம் அதிக உதவியை எதிர்பாராமல் வாழ முற்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு புதிய முறையை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி கண்டார். அதுவே, தற்போது ‘பிரெய்லி முறை’ என்று அழைக்கப்படுகிறது. 1821-ல் சார்லஸ் பார்பியர் என்ற படைத்தலைவர் உருவாக்கியிருந்த தொடர்பு முறையை அடிப்படையாகக் கொண்டு இம்முறையை இவர் உருவாக்கினார்.

புள்ளிகள், கோடுகளைக் கொண்டே எழுத்துக்களை வகைப்படுத்தினார். மிகக் கடுமையாக உழைத்து, முயற்சிகளை மேற்கொண்டு இம்முறையை உருவாக்கினார். அப்பொழுது இவருடைய வயது 15. 1829-ல் சில மாற்றங்களைச் செய்து இம்முறையை அச்சிட்டு வெளியிட்டார். அதன் பின்னர் சில கோடுகளைக் குறைத்து இன்னும் எளிமைப்படுத்தி இரண்டாவது திருத்திய எழுத்து முறையை 1837-ல் வெளியிட்டார். இதே முறைகளையே இசை வெளியீடுகளுக்கும் பயன்படுத்தினார். புதிதாகக் கற்றுக்கொள்பவர்களுக்கான எண் கணிதம், வரைபடங்கள், வடிவியல் உருவங்கள், இசைக்கான குறியீடுகள் முதலியவை பிரெய்லி முறைகளில் உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும் கூவ்ப்ரே ஊரில் உள்ள பிரெய்லி அருங்கண்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண் பார்வையற்றவர்கள் தங்கள் சிந்தனைகளில் தோன்றுவதை எழுதுவதற்குப் ‘பதின்மப் புள்ளி’ என்ற முறையை உருவாக்கினார். பியரி பிரான்காய்ஸ் விக்டர் போகால்ட் என்பவர் இது போன்ற எழுத்துக்களை உருவாக்கத் தட்டச்சு போன்ற கருவி ஒன்றை உருவாக்கித் தந்தார். 1856-ல் நடைபெற்ற உலகக் கண்காட்சியில் இது வெளியிடப்பட்டது. இவருடைய பிரெய்லி முறைகள் உலகப்புகழ் பெற்றாலும் இவர் காலத்தில், இவர் பயின்ற நிறுவனத்தில் அம்முறைகளை பின்பற்றப்பட வில்லை. இவருடைய மறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் இவர் பயின்ற நிறுவனம் பிரெய்லி முறைகளைப் பின்பற்றத் தொடங்கியது. பிரெஞ்சு நாடு முழுவதும் இம்முறை பின்பற்றப் பட்டாலும், உலகம் முழுவதும் 1873-க்குப் பிறகு மிக மெதுவாகத்தான் பரவியது.

பிரெய்லி தன்னுடைய சிறிய வயதில் நோயாளியாகவே வாழ்ந்து வந்தார். சுவாசக் கோளாறுகள் இவருடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருந்து வந்தது. என்புருக்கி நோயால் வாடுவதாகவே நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்தது. இவருடைய 43-வது வயதில் (1852) நோய்ப்பாதிப்பு அதிகமாகி ராயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தான் பிறந்த அதே ஜனவரி மாதம் 6-ந்தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார். உலகம் முழுவதும் பல நாடுகள் இவருடைய உருவம் பொறித்த அஞ்சல் தலைகளை வெளியிட்டுப் பெருமை பெற்றன. இவருடைய கண்காட்சியகம் ஒன்று தொடங்கப்பட்டது. இவருடைய உருவச் சிலைகள் அமைக்கப்பட்டன. பெல்ஜியம், இத்தாலி, இந்தியா, அமெரிக்க ஆகிய நாடுகள் இவருடைய உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுப் பெருமைப்படுத்தின. இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. விழியிழந்த தன் போன்றோருக்கு என்றும் வழிகாட்டிய அன்னாரை எப்பொழுதும் நினைவுகூருவோம்!

No comments:

Popular Posts