Friday 3 January 2020

குற்றமே ஒரு சட்டமானால்...?

குற்றமே ஒரு சட்டமானால்...? By முனைவர் ஜெ. ஹாஜாகனி  |   மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாடெங்கும் பெரும் கொந்தளிப்புக்கு வித்திட்டுள்ளது.  ஓர் அரசுக்கு, சட்டம் இயற்ற உரிமை இல்லையா? தன்னாட்டுக் குடிமக்களுக்கான வரையறையை ஓர் அரசு வகுக்க முடியாதா? தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கும்போது, ஏன் எதிர்ப்பலைகள் பிரளயமாய்க் கிளம்புகின்றன என்ற வினாக்கள் இயல்பானவை.

இந்தச் சட்டம் இதுகாறும் இந்தியத் துணைக் கண்டம் பேணிவந்த விழுமியங்களுக்கும், அறம் மிகுந்த அரசியல் சாசனத்தின் அடிப்படைகளுக்கும் எதிராக இருக்கிறது என்ற எதார்த்த உண்மையைத்தான் எதிர்ப்பு போராட்டங்கள் எதிரொலிக்கின்றன.

2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்குள் வந்துவிட்ட ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் ஆகிய ஆறு மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது "குடியுரிமை திருத்தச் சட்டம் 2019'. ஆனால், முஸ்லிம் அகதிகளுக்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்துள்ள ஹிந்து அகதிகளுக்கும், பூடானிலிருந்து புலம்பெயர்ந்த கிறிஸ்தவ அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க மறுக்கிறது.

"பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மைச் சமூகங்களுக்குக் குடியுரிமை அளிக்கிறோம்.

மூன்றுமே இஸ்லாமிய நாடுகள் என்பதால், அங்கு மத ரீதியான துன்புறுத்தலுக்கு முஸ்லிம்கள் உள்ளாக வாய்ப்பில்லை. எனவே, அவர்களுக்குக் குடியுரிமை தர வேண்டிய அவசியமில்லை என்பதுதான் மத்திய அரசின் வாதம்.

மியான்மரிலும், பூடானிலும் பெளத்தம் அரசு மதமாக உள்ளது. மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களும், பூடானில் கிறிஸ்தவர்களும் மத ரீதியான துன்புறுத்தலைச் சந்தித்து வந்தாலும் இந்தச் சட்டம் அவர்களுக்கு நீதி அளிக்கவில்லை. இது இந்திய அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் முரணான, அப்பட்டமான மதவாதக் கண்ணோட்டமாகும்.

முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக மாட்டார்கள் என்பது பாஜக அரசின் சாதுர்யமான கற்பனையே தவிர, எதார்த்த நிலை இதற்கு எதிரானது. ஈரானும், இராக்கும் இஸ்லாமிய நாடுகளே ஆயினும். பல ஆண்டுகள் போர் நடந்து பல்லாயிரம் உயிர்கள் மாண்டன. இராக்கிற்குட்பட்ட குர்து இனமக்கள் மார்க்கத்தால் முஸ்லிம்களே. ஆனால், இராக் அரசால் கொடும் துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.

குவைத்தும், இராக்கும் ஒரு சமயப் போக்கைக் கடைப்பிடிக்கும் இஸ்லாமிய நாடுகளே. ஆயினும் படையெடுப்பு நடக்கவில்லையா? இந்தியாவுக்குள் அடைக்கலமாக வந்துவிட்ட மக்களை மத ரீதியாக அடையாளம் கண்டு குடியுரிமை வழங்குதல் என்பது, சட்டத்தின் முன் சமத்துவம், சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு ஆகிய அரசியல் சாசன விழுமியங்களுக்கு நேர் முரணானதாகும்.

அண்டை நாடுகளில் மூன்றை மட்டும் தேர்ந்தெடுப்பதும், பல மதங்களில் ஆறு மதங்களை மட்டும் தேர்ந்தெடுப்பதும், "டிசம்பர் 31, 2014-க்கு முன்' என்று தேதி வரையறை செய்வதும், மதத்தால் ஹிந்துக்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை மறுப்பதும் எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?

இந்தப் பிரச்னையின் ஆதிமூலம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து (என்.ஆர்.சி.) தொடங்குகிறது. பாகிஸ்தானிலிருந்து வங்கேதசம் பிரிந்தபோது, வங்கதேச விடுதலைக்கு ஆதரவளித்த இந்தியா, போர்ச்சூழல் காரணமாக இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களையும் ஆதரித்தது.

மேலும், வடமேற்கு மாநிலங்களை வளப்படுத்துவதற்காக, விவசாய விற்பன்னர்களாகத் திகழ்ந்த வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களை இந்தியா வரவேற்கவும் செய்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையைச் சமாளிப்பதற்காக அஞ்சல் தலைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. பத்து பைசா அஞ்சல் தலை, பதினைந்து பைசாவுக்கு விற்கப்பட்டது. அகதிகள் நலனுக்காக  ஐந்து பைசா ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் அஸ்ஸாமில் பூர்வகுடிகளான அஸ்ஸாமிகளுக்கும், குடியேறிய வங்க தேசத்தினருக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றி மோதல்களாய் வளர்ந்தன. இதை அனைத்து அஸ்ஸாம் மாணவர் முன்னணி  கையில் எடுத்தது. பெருங்கலவரங்கள் வெடித்தன.  நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நெல்லி படுகொலையும் அதன் தொடர்ச்சியே ஆகும்.

"அஸ்ஸாம் மாணவர் முன்னணி', பிறகு "அஸ்ஸாம் கனபரிஷத்' என்ற அரசியல் கட்சியாகி ஆட்சியைக் கைப்பற்ற, அதன் தலைவர் பிரஃபுல்லகுமார் மகந்தா முதலமைச்சரானார். அவர் மத்திய அரசின் இப்போதைய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாம் மாணவர் முன்னணியின் தொடர் போராட்டங்களால், ஆகஸ்ட் 15,1985-இல் பிரதமர் ராஜீவ், அஸ்ஸாம் மாணவர் முன்னணியோடு ஒப்பந்தம் செய்தார். அதுவே "அஸ்ஸாம் ஒப்பந்தம்' என அழைக்கப்படுகிறது. அதன்படி 25.3.1971-க்கு முன்பு வரை அஸ்ஸாமில் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம், அந்த நாளுக்குப் பிறகு குடியேறியவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்படக் கூடாது என்பதே அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் சாரம்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், குடியுரிமைக்கான இறுதித் தேதியை 31.12.2014 வரை நீடித்ததை அந்த மாநில பாஜகவினரே கடுமையாக எதிர்க்கின்றனர்.

வங்கேதசத்திலிருந்து இந்தியாவுக்குள் குடியேறியவர்களில் முஸ்லிம்களே அதிகமாக இருப்பர் என்பது மத்திய பாஜக அரசின் கணிப்பு. ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) வெளிப்படுத்திய புள்ளிவிவரமோ இதற்கு நேர்முரணாக அமைந்தது. சட்டவிரோதக் குடியேறிகள் என்று கண்டறியப்பட்ட 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் ஹிந்துக்கள், 7 லட்சம் பேர் முஸ்லிம்கள்.

என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்களை ஹிந்து அமைப்புகளே தீவிரமாக முன்னெடுத்தன. குவாஹாட்டியில் ஆகஸ்ட் 31, 2019 அன்று "ஹிந்து யுவசாத்ர பரிஷத்' என்ற அமைப்பு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை தீ வைத்துக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தியது.

இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டவிரோதக் குடியேறிகளாய்க் கண்டறியப்பட்டுள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது போராடியவர்களுக்கு அபய அறிவிப்பாகவும், முஸ்லிம்களுக்கு அபாய அறிவிப்பாகவும் அமைந்தது.

அதன்பிறகு 9.12.2019 அன்று குடியுரிமைத் திருத்த மசோதாவை பாஜக அரசு மக்களவையில் அவசரமாக நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்தச் சட்டம் நிறைவேறியது .

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிமல்லாதோருக்குக் குடியுரிமை வழங்கிவிட்டு அகதி முஸ்லிம்களை இந்த அரசு என்ன செய்யும்? மேற்கண்ட நாடுகளுடன் "திருப்பி அனுப்பும் ஒப்பந்தம்' எதையும் இந்தியா செய்திராத நிலையில், அந்த நாடுகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்ப முடியாது.

தடுப்பு முகாம்களில் வைக்கும் என்றால், எத்தனை லட்சம் பேரை?  எத்தனை தடுப்பு முகாம்களில்? எவ்வளவு காலத்திற்கு? அதற்குச் செலவிடப் படவேண்டிய பெருந்தொகைக்கு என்ன வழி?  இந்த வினாக்களுக்கு மத்திய அரசிடம் விடையில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் முற்றிலும் குடியேறிய மக்களுக்கே பொருந்தும், இந்தியக் குடிமக்களான முஸ்லிம்களுக்கு இதனால் சிறிதும் பாதிப்பு இல்லை என்கிறது மத்திய அரசு. முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலிஅகமதுவின் குடும்பம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் நீக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி,  நாட்டுக்காக தீரமுடன் போரிட்டு, குடியரசுத் தலைவரின் பதக்கத்தையும் வென்ற சனாவுல்லா என்ற ராணுவ அதிகாரி, குடியுரிமை மறுக்கப்பட்டு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அஸ்ஸாம் முன்னாள் துணைமுதல்வர் அன்வாரியாதைமூர் பெயரும் என்.ஆர்.சி.யில் இல்லை. இவ்வளவும் உலகறிய நடந்து வரும்போது, இந்தியக் குடிமக்களான முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என பாஜக அரசு கூறுவதை எப்படி நம்புவது?

தன்னைப் பெரிதும் ஈர்த்த தலைவர்கள் குறித்து பிரதமர் மோடி எழுதிய நூலில், குருஜி என்று குறிப்பிடப்படும் ஆர்.எஸ்.எஸ். பிதாமகர் மாதவ சதாசிவ கோல்வல்கர் குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார்.  எம்.எஸ்.கோல்வல்கர் தான் எழுதிய "நாம் அல்லது நமது தேசிய வரையறை (We or Our Nationhood Defined) என்ற நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில் "முஸ்லிம்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் இந்தியக் குடிமக்களாக இருக்க விரும்பினால் அவர்கள் தமது மதநம்பிக்கைகளை, பண்பாடுகளை, பழக்கவழக்கங்களைக் கைவிட்டுவிட்டு, முழுமையான ஹிந்துவாக மாறிவிட வேண்டும் என்றும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் குடிமக்களுக்குரிய எந்த உரிமையையும் கோராமல் வாழலாம்' என்றும் குறிப்பிடுகிறார்.

அதைத்தான் மத்திய பாஜக அரசு வித்தகமாய்ச் செயல்படுத்த எத்தனிக்கிறதோ என்ற கவலை ஆழிப்பேரலையாகி மக்கள் மனதை அலைக்கழிக்கிறது.
அரசின் திட்டங்களால் பயனடைய, அரசுப் பணிகளில் இணைய, பொதுப் பதவிகளை வகிக்க, வாக்களிக்க, இந்தியாவின் உயர் பொறுப்புகளை வகிக்க, குடியுரிமையே அடிப்படையாக உள்ளது.

பிற நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த அனைத்து அகதிகளுக்கு இந்த உரிமையைத்தர முடியுமா? சொந்த நாட்டில் மண்ணின் மைந்தர்கள் உரிமை இழக்க நேர்ந்தால் என்னாவது என்ற கவலை எழுவது இயற்கையானது.
குடியுரிமை  கொடுப்பது என முடிவெடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். கூடாது என முடிவெடுத்தால் யாருக்குமே கூடாது என்பதுதான் அறம் சார்ந்த, அரசியல் சாசனத்துக்கு உகந்த அணுகுமுறையாக இருக்க முடியும்.
கட்டுரையாளர்:
தமிழ்த் துறைத் தலைவர்,
காயிதே மில்லத் கல்லூரி.

No comments:

Popular Posts