Thursday, 26 December 2019

பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?

பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன? | முனைவர். செ. சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., | காவல்துறை தலைமை இயக்குனர். | 2010 -ம் ஆண்டு கோவையில், 2012-ம் ஆண்டு டெல்லியில், 2017-ம் ஆண்டு உன்னவாவில், 2019-ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த கொடிய பாலியல் பலாத்கார கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நான்கு குற்றங்கள் மட்டும் அல்ல, இந்தியாவில் 2018-ம் ஆண்டு மட்டும் 780 பாலியல் பலாத்கார சம்பவங்கள் குற்றவழக்காக பதியப்பட்டுள்ளது. இதில் சில குற்றவாளிகள் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர், சிலர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்,

இந்த சூழ்நிலையில், காவல் துறையினர் எடுத்த என்கவுண்ட்டர் நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது, காவல் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒருசாரார் இதுபோன்ற நடவடிக்கைகள் சரிதான் எனவும் அதை ஆதரிக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். இதுபோன்ற நீதிதான் சரியானது, அதுதான் குற்றவாளிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்பது அவர்களது வாதம்.

என்கவுண்ட்டர் நிகழ்வுகளில் குற்றவாளிகளை, காவலர்கள் வேண்டும் என்றே சுட்டுவிட்டார்கள் என்பதாகத்தான் அனைவரும் புரிந்து கொள்கிறார்கள். இது ஒரு வகையில் சரியான புரிதல் என்றாலும், எல்லா என்கவுண்ட்டர்களும் போலி என்கவுண்ட்டர்கள் இல்லை. பல நிகழ்வுகளில் பாலியல் குற்றவாளிகள் ஆயுதம் ஏந்திய காவலர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.

துப்பாக்கியை பிடுங்கி கொண்டும் தப்பித்து ஓடியுள்ளனர். அதற்காக காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவேளை அந்த சூழ்நிலையில் காவலர் அவரை திருப்பிச் சுட்டிருந்தால் அது போலி என்கவுண்ட்டராகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றால் அவரை காவலர் துப்பாக்கியால் சுடலாம் என்பதற்கு சட்டம் அனுமதி வழங்குகிறது. ஆக, எல்லா என்கவுண்ட்டர்களும் போலி என்கவுண்ட்டர்கள் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நான் காவல்துறையில் சேர்ந்த காலத்தில் சந்தன கடத்தல் வீரப்பனும் அதே சத்தியமங்கலம் வனப் பகுதியில் முகாமிட்டு சந்தன மரம் வெட்டி கடத்திக் கொண்டிருந்தான். அவனுடன் மூன்று முறை துப்பாக்கி சண்டை நடத்தியுள்ளேன். ஒரு என்கவுண்ட்டரில் இரு தரப்பிலும் குண்டடிப்பட்டது. எனது தரப்பில் குண்டடிப்பட்ட மூவரில் ஒருவர் பின்னர் இறந்து போனார். ஆனால் அந்த துப்பாக்கிச் சண்டையில் அப்போது வீரப்பன் சுடப்பட்டு இறந்திருந்தால், அதுவும் போலி என்கவுண்ட்டர் என்றே குற்றம் சாட்டப்பட்டிருக்கும்.

இன்று மனித உரிமையின் இருப்பிடமே அமெரிக்காதான். ஆனால் அமெரிக்க ‘சீல்’ கமாண்டோ வீரர்கள் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை பிடித்து அவனை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து முறைப்படி விசாரணை நடத்தவில்லை. அவனை கொன்று பல கூறுகளாக பிரித்து கடலிலேயே வீசிவிட்டுத்தான் தாய்நாடு திரும்பி வந்துள்ளனர். உடனடி நீதி என்பது உலகிலேயே முன்னணி மனித உரிமை பாதுகாக்கும் நாடும் செய்கிறது. எனவேதான் சிலர், இங்கு நடந்ததும் சரியான செயல்தான், பாலியல் குற்றவாளிகளுக்கும் இதே விதி பொருந்தும் என்று உறுதியாக நம்புகிறார்கள். இருந்தாலும், படு பாதக குற்றவாளியை உடனே என்கவுண்ட்டர் செய்யுங்கள் என்று பொதுமக்கள் கொதித்து எழுவதை சரிதான் என்றும் சொல்லிவிட முடியாது.

காவல்துறைக்கு நெருக்கடி கொடுக்கும் பொதுமக்களுக்கு கோபமும், விரக்தியும் வர காரணம்தான் என்ன? புலன் விசாரணையில் சுணக்கம், ஊடகங்களில் போலி தகவல்கள், மறுக்கப்பட அல்லது தாமதமான நீதி போன்றவை மக்களுக்கு குற்ற பரிபாலனை அமைப்புகள் மீது அவநம்பிக்கை ஏற்பட காரணமாயின. டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்முறை மற்றும் கொலை, 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி நடந்தது. ஆனால் இந்நாள் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை! இந்த தாமதம் மக்கள் மத்தியில் நீதி பரிபாலன அமைப்புகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த நிச்சயம் உதவாது.

ஆனால் பொதுமக்கள் இந்த நிலைமைக்கு அரசுகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி விடுகின்றனர். இப்படி குற்றம் சாட்டுவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் இது போன்று குறைகூறும் பழக்கத்தால் எந்த பயனும் ஏற்படாது. ஏனென்றால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ வேறு பல காரணங்கள் உண்டு, அவற்றை முதலில் களைய வேண்டும். இன்னும் சொல்ல போனால் பொதுமக்கள் கொதித்தெழுந்து ஆவேசமாக போராடுவதால்தான் ‘என்கவுண்ட்டர்’ சம்பவங்கள் நடைபெறுகின்றன என்ற கோணமும் இதில் இருக்கிறது. காவல் துறையின் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவே திணறுகிறார்கள். அந்த அளவுக்கு பொதுமக்கள் வழிமறித்து குற்றவாளிகளை தாக்குகிறார்கள். இந்த தருவாயில் காவல்துறையினரும் தாக்கப்படுகிறார்கள்.

பொதுமக்களோடு சமூக விரோதிகளும் சேர்ந்து விடுவதால் காவலர்களுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பது கூட கடினமான காரியமாகிவிடுகிறது. அப்படியென்றால் பொதுமக்கள் கொதித்து எழக்கூடாதா? யாரையும் குறை சொல்லக் கூடாதா? உடனடி நீதி கேட்கக் கூடாதா? என்ற கேள்வி எழும். இதுவும் நியாயமான கேள்வி என்றாலும் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஏன் நடைபெறுகின்றன என்ற கேள்வியையும் பொதுமக்களாகிய நாம் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது போன்ற குற்றம் நிகழ உளவியல், சமூகவியல், பொருளாதார, அரசியல் காரணங்கள் என்ன என்பதை பற்றியும் ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்து அதற்கான காரணங்களை கண்டுபிடித்து, அவற்றைக் களைந்தெடுத்தாலொழிய பாலியல் குற்றங்களை தடுக்க முடியாது.

அரசையும் ஆட்சியையும் மக்களும் ஊடகங்களும் பெருத்த குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கிய மறுகணமே ஒரு கடுமையான சட்டம் வந்துவிடுகிறது. ‘கற்பழிப்பு குற்றத்திற்கு தூக்கு தண்டனை‘ என்ற ஒரு சட்டம் அவசர அவசரமாக இயற்றப்படுகிறது. இது நல்ல தீர்வு அல்ல. சில பாலியல் வன்புணர்வு வழக்குகள் காதலர்களாக இருந்த ஜோடிகளில் அந்த பெண் பின்னர் ஒருநாள் தன்னை காதலன் கற்பழித்துவிட்டான் என்ற புகார் சொன்ன வழக்குகள்தான். அதேபோல, ஓடிப்போன காதலர்களில் அந்த காதலி 18 வயதிற்குட்பட்ட சிறுமியாகக்கூட இருப்பாள்; அப்போது அந்த 19 வயது அல்லது 20 வயது ஆண் மீது பாலியல் பலாத்கார வழக்கு இயற்கையாகவே பாய்கிறது. அப்போது அவனை தூக்கிலிடுவது சரியாக இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. அந்த இளைஞனுக்கும் தாயும், சகோதரியும் உண்டு. அவன் தவறு செய்யாதவனாகக்கூட இருப்பான், பொய் குற்றச்சாட்டு அவன்மீது சுமத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

ஆக, பாலியல் வன்முறை சம்பவம் ஒன்று நடந்துவிட்ட பிறகு அதனால் உணர்வுப்பூர்வமாக எதிர்வினைஆற்றுவதைவிட்டுவிட்டு அறிவுப்பூர்வமாக ஆழ்ந்து சிந்தித்து நகர வேண்டியிருக்கிறது. திருவள்ளுவரின் ‘நோய் நாடி, நோய் முதல் நாடி’ என்ற அணுகுமுறை சரியாக இருக்கும். அப்படியாக பாலியல் வன்கொடுமைகளுக்கான காரணங்களை துணிந்து ஆராய்ந்து, முனைப்புடன் களைய முற்படும் மனிதனாக நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும். அன்றுதான் பாலியல் வன்முறையை கையாளத் தெரிந்த சமூகம் ஒன்று உருவாகும். அதற்கு அறிவியல், குறிப்பாக உளவியல், சமூகவியல் கல்வி மிகவும் அவசியம். அறிவியல் அறிவு உள்ள சமுதாயமாக நாம் மாறிய பிறகு, இதுபோன்ற குற்றங்களும் குறையும், மீறி குற்றம் நடந்துவிட்டால் நாம் அவற்றைக் கையாளும் முறையும் நாகரிகமாக இருக்கும்.

No comments:

Popular Posts