Thursday 26 December 2019

மகிழ்ச்சியான குழந்தையே தேசத்துக்குப் பெருமை

மகிழ்ச்சியான குழந்தையே தேசத்துக்குப் பெருமை | By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்  |   குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இன்று குழந்தைகள் மீது குடும்பத்திற்குள்ளேயும், வெளியேயும் பல்வேறு வன்முறைகள் ஏவப்படுகின்றன. பிறந்தவுடன் மருத்துவமனையில் தொடங்கி, குடும்பத்தில் வன்முறை, பள்ளியில் வன்முறை, பணிபுரியும் இடத்தில் வன்முறை, சமுதாயத்தில் வன்முறை என பல வகை வன்முறைகளைக் குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்.

பாகுபாடு, சுரண்டல், வன்முறை, தவறாக நடத்தப்படுவது ஆகியவற்றின் அனைத்து வடிவங்களும் இல்லாத சூழலில் இன்றைய குழந்தைகள் வளருவது என்பது மிகவும் கடினமாகி விட்டது. குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை, பதினெட்டு வயதுக்குக் கீழுள்ள அனைவரும் குழந்தைகள் எனத் தெரிவிக்கிறது.   1989-ஆம் ஆண்டு  குழந்தைகள் உரிமை குறித்த உடன்பாட்டை ஐ.நா. ஏற்படுத்தியது. அதை இந்தியா 1992-இல்  ஏற்றுக் கொண்டது. அதன்படி, குழந்தைகளுக்கு வாழ்வுரிமை, பாதுகாப்புக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பங்கேற்புக்கான உரிமை என முக்கியமான நான்கு உரிமைகள் உண்டு.

குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டமைத்துத் தர வேண்டிய குடும்பங்களும், கல்விக்கூடங்களும் நாளுக்கு நாள் வன்முறைக் களங்களாக மாறி வருகின்றன. உடல் ரீதியான அத்துமீறல்களை மூன்றில் இரண்டு குழந்தைகள் சந்தித்து வருகின்றனர். இவர்களில் 55 சதவீதம் பேர் சிறுவர்கள், சிறுமிகள்.  குடும்பச் சூழலில் துன்புறுத்தல்களுக்குள்ளாகும் குழந்தைகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களுடைய பெற்றோரால் துன்புறுத்தப்படுகின்றனர்.

குழந்தைகளின் மீதான வன்முறை என்பது, அவர்களை மகிழ்ச்சியற்றவர்களாகவும், வலுவற்றவர்களாகவும் மாற்றி, எதிர்காலத்தில் தாழ்வுமனப்பான்மையுடன் கூடிய வன்மம் மிகுந்தவர்களாக மாற்றி விடுகிறது.  இந்தியக் குழந்தைகளில் 55 சதவீதத்துக்கு மேல் ஏதோ ஒரு வகையில் இத்தகைய வன்முறைத் தாக்குதல்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. 

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் தனது 6 வயது ஆண் குழந்தை மற்றும் இரண்டாவது கணவருடன் வசித்து வந்துள்ளார் ஒரு தாய்.   இரண்டாவது கணவருக்கு அந்தக் குழந்தையைப் பிடிக்காததால், அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். வழக்கம் போல் அவர் குழந்தையை சமையல் கரண்டியால் தாக்கியதால் குழந்தைக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பதறிப் போன தாய், தன் இரண்டாவது கணவர் மீது காவல் நிலையத்தில் அண்மையில் புகார் கொடுத்தார்.  போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இது போன்று பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

நாடு முழுவதும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்  இதுவரையிலும் 3.18 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக மத்திய மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.  இதில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில்  52,272 குழந்தைகளும், மேற்கு வங்கத்தில் 47,744 குழந்தைகளும், குஜராத்தில் 43,658 குழந்தைகளும், தில்லியில் 37,418 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.

குழந்தைகள் முன்னிலையில் வன்முறைகள் குறித்துப் பேசாமல் இருப்பது நல்லது. திரைப்படங்களில், தொலைக்காட்சியில், வன்முறை காட்சிகளைக் குழந்தைகள் காண அனுமதிக்கக் கூடாது.  தமிழகக் காவல் துறை அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது; ஆபாச படங்கள் பார்ப்போருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, குழந்தைகள் தொடர்பான ஆபாச படம், காணொலி காட்சிகளைக் காண்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது எனவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு  காவல் துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், "குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், காணொலி காட்சிகளைக் காண்பது சட்டப்படி குற்றம், ஆபாச படம் மற்றும் காட்சிகளை செல்லிடப்பேசிகள், மடிக்கணினியில் வைத்திருப்பதும், அது தொடர்பான இணையங்களைப் பதிவிறக்கம் செய்வதும் குற்றம். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், தகவல் தொழில்நுட்பம், போக்ஸோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.  இவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும். "குழந்தைகளைக் காப்போம், குற்றங்களைத் தடுப்போம், தமிழர் பண்பாட்டைப் பேணுவோம்' என அவர் தெரிவித்துள்ளார். 

குழந்தைகள் பார்க்கின்ற பார்வைகள் எல்லாம், இது போன்று நாமும் வளர வேண்டும் என்ற நல்ல சிந்தனையில்தான் இருக்க வேண்டும்.  அவ்வாறு இருக்கும்படி தான் பெற்றோர் வளர்க்க வேண்டும்.  அப்போதுதான் நல்ல சிந்தனையுடைய குழந்தைகள் சமுதாயத்தில் மலருவார்கள்.  பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு அன்பு குறையும்போதுதான், குற்றங்களுக்கான அடித்தளம் அமைகிறது.  ஒரு நாட்டிற்கு அற்புதமான  அறிஞர்களையும், கலைத்துவம் மிக்க கலைஞர்களையும்,  எதற்கும் அஞ்சாத வீரர்களையும் அளிப்பது நல்ல பெற்றோர்தான்.  எனவே, பெற்றோர்கள் சிறந்தவர்களாக இருந்து விட்டால், அவர்களின் குழந்தைகளும் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பது உறுதி.

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே எழும் பல்வேறு மனப் போராட்டங்களுக்கு ஆலோசகராக இருக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.   குழந்தைகளுக்கு இரண்டாவது பெற்றோர் ஆசிரியர்கள். அவர்கள் சொல்லே குழந்தைகளுக்கு வேதவாக்கு.  மாணவர்களுக்கு நல்ல தோழர்களாக ஆசிரியர்கள் அமைந்து, பாடத் திட்டங்களோடு தன்னம்பிக்கை, தைரியங்களைக் கற்றுத் தர வேண்டும்.

குழந்தைகள் மீது காட்டும் வன்மங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை, மன முதிர்ச்சியை ஒடுக்கி விடுகிறது.  இத்தகைய மனநிலையில் வளரும் குழந்தைகளைக் கொண்ட சமுதாயம், பொருளாதார ரீதியாகவோ,  சமத்துவ ரீதியாகவோ,  ஆன்மிக ரீதியாகவோ வளர்வது என்பது வளர்ச்சிக்கு அடையாளமாகாது.
"உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர். அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர். அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி,  உங்களிடமிருந்து அல்ல.  உங்களுடன் இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு உரியவர்கள் அல்லர். அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம், எண்ணங்களை அல்ல. அவர்களுக்கு என்று சுயசிந்தனைகள் உண்டு, அவர்களுடைய  உடல்களை நீங்கள் சிறைப்படுத்தலாம், ஆன்மாக்களை அல்ல. நீங்கள் அவர்களாக முயற்சி செய்யலாம். அவர்களை உங்களைப் போல உருவாக்க முயற்சி செய்யாதீர்கள்' என்றார் தத்துவ  கவிஞர் கலீல் ஜிப்ரான்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு குழந்தைகளின் மனநிலை முக்கியப் பங்காற்றுகிறது.  அமைதியை விரும்பும் குழந்தைகளின் சமூகம் அமைதி நிறைந்ததாக இருக்கும். அதே சமயத்தில் வன்முறை எண்ணங்கள் கொண்ட குழந்தைகளின் சமூகம், எதிர்காலத்தில் வன்முறைக் களமாக மாறி நாட்டையே  வன்முறைக் களமாக மாற்றி விடும்.  குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாத எந்த நாடும் வளமான எதிர்காலத்தைக் கொண்டிருக்காது.
எந்தக் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் போது குடும்பமும், சமுதாயமும் ஆரோக்கியம் மிக்கதாக இருக்கும். ஆனால், வறுமைத் துன்பத்தில் உழலும் குழந்தைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, தீயசக்திகளுடன் சேர்ந்து துன்பத்தில் உழலுகிறார்கள்.  குறிப்பாக, சமுதாய, பொருளாதார பாதிப்புகளால் வளரும் குழந்தைகள் தவறான வழிகளில் நடத்தப்படுகிறார்கள். இதனால்தான் ஆங்காங்கே வன்முறை உருவாகிறது.

நமது நாட்டின் சட்டங்களில் நோக்கம், குற்றம் புரிந்தவரைத் தண்டிப்பது மட்டுமல்ல, அவரைத் திருத்தி நல்வாழ்வு வாழ வைப்பதும்தான். குற்றவாளிகளை விரைவாகவும், கடுமையாகவும் தண்டிக்கும்போதுதான் அச்சம், அவமானம், தவறான எண்ணங்கள் விலகும்.  குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது; அதை அமல்படுத்தி அளிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். 

குழந்தைகள் மீது வன்முறையாக நடந்துகொள்பவர்களுக்கு கடுமையான தண்டனையைக் கொடுக்க வேண்டும். 
தனி மனிதர்களை இணைப்பதுதான் குடும்பம்.  குடும்பங்கள் இணைந்ததுதான் சமுதாயம்.  இந்தச் சமுதாயத்தில் வளரும் குழந்தைகளின் மனநிலைதான் சமூகத்தை உயர்த்தி, நாட்டையும் உயர்த்துகிறது.  ஒரு மனிதன், ஒரு குடும்பம், ஒரு சமுதாயம், ஒரு நாடு, ஓர் அரசாங்கம்-இவை எல்லாம் சேர்ந்து செயல்பட்டால் தான் குழந்தைகள் மீதான வன்முறை தடுக்கப்படும்.
குழந்தைப் பருவம் என்பது, குழந்தைகளுக்கு இறைவன் கொடுத்த பரிசு.  அந்தப் பரிசை அவர்களிடமிருந்து பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. குழந்தைகள் தங்களின் குழந்தைப் பருவத்தை முறையாகவும் முழுமையாகவும் அனுபவிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கச் செய்வோம், அவர்கள் மனமுதிர்ச்சி அடைந்து விட்டதாக நாமே  அவர்களின் கனவு வாழ்கையுடன் விளையாட வேண்டாம். 
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று' என்று சொல்லிக் கொண்டே தெய்வங்களைக் கொண்டாடும் நாம் குழந்தைகளை மறந்து விடுகிறோம்.

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகம் வெளிச்சத்துக்கு வரும் காலமிது. குற்றம் செய்தவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைப்பது மட்டுமே, தான் இருக்கும் உலகம் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்குத் தரும். "மகிழ்ச்சியான குழந்தையே தேசத்துக்குப் பெருமை' என 1979-ஆம் ஆண்டிலேயே ஐ.நா. அறிவித்துள்ளது.  குழந்தைகள் நடை பயிலும்போது கையைப் பிடியுங்கள்,  நடக்கும்போது நம்பிக்கையைக் கொடுங்கள்.

No comments:

Popular Posts