Thursday 26 December 2019

வானில் தோன்றும் ஓர் நெருப்பு வளையம்

வானில் தோன்றும் ஓர் நெருப்பு வளையம் | எஸ். பாலக்குமார், எழுத்தாளர் | இ ன்று (டிசம்பர் 26-ந்தேதி) சூரிய கிரகணம் | இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் வானில் ஓர் நெருப்பு வளையம் தோன்ற உள்ளது. இவ்வாறு ஒரு நெருப்பு வளையம் தோன்றுவதற்கு சூரிய கிரகணமே காரணமாகும். சூரிய கிரகணம் பொதுவாக மூன்று வகைப்படும். அவை முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என்பன ஆகும். இதுபோக பகுதி சூரிய கிரகணமும், வளைய சூரிய கிரகணமும் சேர்ந்து உருவாகும் கலப்பின சூரிய கிரகணம் என்ற ஒரு வகையும் உள்ளது.

சூரிய கிரகணம் அமாவாசை தினத்தன்று தான் உருவாகும். அன்று சூரிய ஒளியானது நாம் பூமியில் இருந்து பார்க்க முடியாத சந்திரனின் பின்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் முன்பக்கம் இருண்டு காணப்படுகிறது. எனவே சந்திரன் மறைந்து விடுகிறது. மேலும் அன்று சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் நடுவே அமைந்து ஒரே நேர்கோட்டில் இருக்கிறது. இப்போது எல்லா அமாவாசை நாட்களிலும் சூரிய கிரகணம் தோன்றுவதில்லையே என்ற கேள்வி எழலாம். சூரிய கிரகணம் ஏற்படும்போது சந்திரனின் நிழல் பூமியில் விழ வேண்டும். இது எல்லா அமாவாசை நாட்களிலும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையானது, பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில் இருந்து 5 பாகை சாய்வாக அமைந்துள்ளதால், சந்திரனின் நிழலானது பூமியின் மேல்தளத்திலோ, அல்லது கீழ்தளத்திலோ விலகிச் சென்று விடுகிறது அவ்வாறு இல்லாமல் சந்திரன், பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைந்துள்ள அமாவாசையன்றே சூரிய கிரகணம் உண்டாகிறது. இத்தகைய நிகழ்வுகள் ஒரு ஆண்டில் 2 முதல் 5 முறை ஏற்படலாம். ஒரு நூற்றாண்டில் ஏறத்தாழ 240 சூரிய கிரகணங்கள் ஏற்படுகின்றன.

சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல்; பூமியின் எல்லாப் பகுதிகளிலும் விழுவதில்லை; பூமியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் விழுவதால், சூரிய கிரகணத்தை எல்லா இடங்களிலும் பார்க்க முடியாமல் போகிறது. பெரும்பாலான சூரிய கிரகணங்களின்போது நிழல் கடலில் விழுந்து விடுவதால், தரைப்பகுதிகளில் இருந்து பார்க்க முடியாமல் போய் விடுகிறது.

சூரிய கிரகணத்தின் தன்மைகளைச் சற்று பார்க்கலாம். கழுகை விட பல மடங்கு பெரிய ஆகாயவிமானம் வானத்தில் பறக்கும்போது கழுகின் அளவில் உள்ளது போல் தோன்றுகிறது. அதேபோன்று சந்திரனின் அளவைவிட 400 மடங்கு பெரியதாக இருக்கும் சூரியன், பூமியில் இருந்து சந்திரன் இருக்கும் தூரத்தைப் போல் 400 மடங்கு தூரத்தில் உள்ளதால் சூரியனும், சந்திரனும் ஒரே அளவில் காணப்படுகின்றன. இதனால் சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் இருக்கும் போது சூரியனை நமது பார்வையில் இருந்து மறைக்க முடியும். பூமிக்கு மிக அருகில் சந்திரன் இருக்கும் போது, சூரியன் முழுவதுமாக மறைந்து விடுகிறது. இதையே முழு சூரிய கிரகணம் என்கிறோம்.

பூமியில் இருந்து மிகத் தொலைவில் சந்திரன் இருக்கும் போது சந்திரனின் அளவு, சூரியனைவிட சிறியதாகி விடுவதால் சூரியனை முழுமையாக மறைக்க முடிவதில்லை. அந்த நேரத்தில் சூரியனின் நடுப்பகுதி இருட்டாக மறைக்கப்படுகிறது. சூரியனின் விளிம்புப்பகுதி பிரகாசமாகத் தெரிகிறது. இது ஒரு ஒளிவீசும் நெருப்பு வளையம் போல் காணப்படுகிறது. இதனை வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கிறார்கள். சந்திரனானது சூரியனை பகுதி அளவில் மறைக்கும் பொழுது, பகுதி சூரிய கிரகணம் உண்டாகிறது.

வளைய சூரிய கிரகணம் ஏற்படும் போது முதலில் சந்திரன் சூரியனைத் தொட்டு மறைக்கத் தொடங்குகிறது. இந்த சமயத்தில் சூரியன் மறைக்கப்படும் போது ஒரு வைர மோதிரம் போல் ஜொலிக்கிறது. இதனை வைரமோதிர விளைவு என்று கூறுகிறார்கள். பின்னர் நெருப்பு வளைய சூரியன் தோன்றுகிறது. அதன் பின்னர் மீண்டும் ஒரு வைர மோதிர விளைவு உண்டாகிறது. கடைசியில் சந்திரன் விலகிச் சென்று விடுகிறது.

இன்று (26-ந் தேதி) நடைபெறும் வளைய சூரிய கிரகணம் காலை 8 மணி 6 நிமிடங்கள் தொடங்கி 11 மணி 4 நிமிடங்களுக்கு இந்தியாவில் முடிவடைகிறது. சரியாக 9 மணி 25 நிமிடங்களுக்கு நெருப்பு வளையத்தைப் பார்க்க முடியும். இது 3 நிமிடம் 12 நொடிகள் வானத்தில் தோன்றும். இந்த வளைய கிரகணம் தோன்றும் மறைவுப் பகுதி 164 கி.மீ. அகலத்தை கொண்டு ஒரு நொடிக்கு 1.1 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்று மூன்று மணி நேரத்தில் சுமார் 12,900 கி.மீ. தூரத்தை கடக்கிறது. வளைய சூரிய கிரகணம் சவூதி அரேபிய பாலைவனத்தில் தொடங்கி தென்தமிழகம் வழியாக இலங்கையை கடந்து வங்காள விரிகுடா கடலைத் தாண்டி சுமத்திரா, சிங்கப்பூர், இந்தோனேசியா வழியாக தென்சீனக் கடல் கடந்து பிலிப்பைன்ஸ் வழியாக குவாம்; தீவுகளை அடைகிறது. கண்ணூர், மங்களுரு பகுதிகளிலும், தமிழகத்தில் ஊட்டி, கோவை, ஈரோடு, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தேவகோட்டை ஆகிய பகுதிகளிலும், யாழ்ப்பாணம் மற்றும் சிங்கப்பூர் நகரங்களிலும் இந்த நெருப்பு வளையம் முழுமையாகத் தெரியும்.

சென்னை, மதுரையில் நெருப்பு வளையத்தின் முழுப்பரிமாணத்தையும் பார்க்க முடியாது. 9 மணி 34 நிமிடங்களுக்கு சென்னையிலும், 9 மணி 31 நிமிடங்களுக்கு மதுரையிலும் அதிக அளவில் வளையத்தை பார்க்கலாம். இந்த இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் முழுமையான நெருப்பு வளையத்தை காண்பது அரிது. பகுதி சூரிய கிரகணத்தையே பார்க்க முடியும். ஆனாலும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் 87 சதவீத மறைவினைப் பார்க்க முடியும். மும்பை, டெல்லி வரை பகுதி சூரிய கிரகணமாக காட்சியளிக்கும்.

சூரிய கிரகணம் ஏற்படும்போது ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா என்ற கேள்விக்கு அறிவியல் சார்ந்த பதில் என்னவென்றால் இல்லை என்பதே ஆகும். ஆனால் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது கூடவே கூடாது. திடீரென்று தோன்றும் அதிக ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள் கண்ணின் விழித்திரையை உடனடியாகத் தாக்கிவிடும். இது அப்போது உணரப்படுவதில்லை சிறிது நாட்களில் கண் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தகுந்த சூரிய ஒளிக்கதிர் வடிகட்டி எனப்படும் உபகரணங்களின் துணையோடுதான் சூரியனைப் பார்க்கலாம். பழைய எக்ஸ்ரே தகடுகள், குளிர் கண்ணாடிகள், மொபைல் போன் கேமராக்கள், டெலஸ்கோப்புகள் போன்றவைகளின் வழியாக சூரிய கிரகணத்தை பார்ப்பது ஆபத்தானது. கூடியவரையில் வீட்டில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டியின் வழியாகவோ அல்லது இணைய சேவை மூலமாகவோ சூரிய கிரகணத்தைப் பார்த்தால் எந்த ஆபத்தும் வராது.

நேரடியாக சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை, தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் பொதுமக்களும், பள்ளிக் குழந்தைகளும் கண்டு மகிழும்படியாக மத்தியஅரசின் விஞ்ஞான் பிரசார் மையமும், தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையமும், அறிவியல் இயக்கங்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீ. தூரம் சந்திரன் பூமியில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதால், ஒரு நாள் அது அளவில் சிறியதாகி சூரிய கிரகணத்தை உண்டாக்க முடியாமல் போகும் என்று கருதுகிறார்கள். ஆனால் அதற்கு இன்னும் 60 கோடி ஆண்டுகள் ஆகும்.

No comments:

Popular Posts