Sunday, 1 December 2019

காலமாற்றத்தால் காணாமல் போன சினிமா ஸ்டூடியோக்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி, ரசனை மாற்றங்கள், சினிமா படப்பிடிப்புகளை ஸ்டூடியோக்களில் இருந்து வெளிப்புறத்திற்கு கொண்டு சென்றதால், ஸ்டூடியோக்களின் தேவை குறைந்து விட்டது.

தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக ஒரு காலத்தில் திகழ்ந்தது சென்னை. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிப்படங்களும், ஏன் சில இந்திப்படங்கள் கூட சென்னை ஸ்டூடியோக்களில் தான் தயாராகின. சினிமாவை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்தனர். இதனால் கோடம்பாக்கத்தில் தடுக்கி விழுந்தால், ஏதாவது ஒரு சினிமா ஸ்டூடியோ வாசலில் தான் விழமுடியும் என்ற அளவுக்கு திரும்பும் திசையெல்லாம் ஸ்டுடியோக்களும், சினிமா தொழில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களும் கோலோச்சின.

ஆனால், இன்றோ, 2, 3 ஸ்டுடியோக்களை மட்டுமே பார்க்க முடிகிறது. அவையும் ஒரு பகுதியாக மட்டுமே இயங்குகின்றன. 4 முதல்-அமைச்சர்கள் உருவாக நாற்றங்கால்களாக இருந்த சினிமா திரைப்படத்தளங்களை காலமாற்றங்கள் காணாமல் ஆக்கி விட்டன.

சினிமா ஸ்டூடியோக்களின் தோற்றம்

சினிமா ஸ்டுடியோக்கள் என்றவுடன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கோடம்பாக்கம் தான். ஆனால், தமிழகத்தின் முதல் ஸ்டூடியோ தோன்றிய இடம் புரசைவாக்கம். அதன் பெயர் இந்தியா பிலிம் கம்பெனி. அதை உருவாக்கியவர் முதல் மவுனப்படமான கீசக வதத்தை தயாரித்த நடராஜ முதலியார். அடுத்தடுத்து உருவான ஸ்ரீனிவாசா சினிடோன், இம்பீரியல் மூவிடோன் ஸ்டூடியோ ஆகியவையும் புரசைவாக்கம் மற்றும் அதை சுற்றி உருவானவை தான்.

தயாரிப்பாளரும், கதை வசனகர்த்தாவுமான கலைஞானம் கூற்றுப்படி, கோடம்பாக்கத்தின் முதல் ஸ்டூடியோ 1930-ம் ஆண்டுகளில் உருவான ஸ்டார் கம்பைன்ஸ் ஸ்டூடியோ தான். இதை உருவாக்கியவர் ஏ.ராமையா. இவர் லண்டன் சென்று ‘பாரத்லா’ படித்து வந்தவர். அடுத்த ஸ்டூடியோ பி.நாகிரெட்டியின் வாகினி ஸ்டூடியோ. அதற்கு அடுத்தது ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் ஏ.வி.எம். ஸ்டூடியோ. இந்த 3 நிறுவனங்களும் தான் கோடம்பாக்கத்தை தென்னிந்திய சினிமாவின் தலைநகராக்க அடித்தளமிட்டன. அதன்பிறகு சரியாக சொல்ல வேண்டும் என்றால், 1950 மற்றும் 1960-ம் ஆண்டுகளில் தான் கோடம்பாக்கம் சினிமா ஸ்டூடியோக்களின் கோட்டையாக மாறியது.

கோடம்பாக்கம்

கோடம்பாக்கத்தின் உண்மையான பெயர் திருப்புலியூர். இது அடிப்படையில் விவசாய பூமி. வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளும், பூந்தோட்டங்களும், நல்ல மேய்ச்சல்நிலமும் கொண்ட நிலப்பரப்பாகும். ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த இடம் குதிரைப்படையை பராமரிக்கும் இடமாக திகழ்ந்தது. நல்ல மேய்ச்சல் நிலங்களில் குதிரைகளை மேயவிட்டு லாடம் கட்ட இந்த இடம் பயன்பட்டது. குதிரைகளை ஆங்கிலேயர்களுக்கு விற்ற கர்நாடக நவாபுகள் இந்த இடத்தை ‘கோடா பாக்’ என பெயரிட்டு அழைத்தனர். இதற்கு ‘குதிரைகளின் தோட்டம்’ என்று அர்த்தமாகும். இதுவே நாளடைவில் கோடம்பாக்கம் என்றும், ‘கோலிவுட்’ என்றும் பெயர் மாறியது.

சினிமாவின் பொற்காலம்

1980-ம் ஆண்டு வரையில் சென்னையில் மட்டுமே சுமார் 30 ஸ்டூடியோக்கள் இருந்தன. பல மொழிகளிலும் ஆண்டுக்கு 300-க்கும் மேற்பட்ட சினிமாக்கள் இங்கு தயாராகின. எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் போன்ற திரையுலக ஜாம்பவான்கள் தினசரி நடமாடிய நிலம். அவ்வப்போது வட இந்திய பிரபலங்களான திலீப்குமார், தர்மேந்திரா போன்றவர்களும் வந்து நடிப்பார்கள்.

எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டூடியோ இன்றைய அண்ணா மேம்பாலத்தின் கீழ் கம்பீரமாக இருந்தது. இங்கு தான் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சந்திரலேகா படம் தயாரானது. ஏ.வி.எம். நிறுவனமும் இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களை எடுத்தது. நாகிரெட்டியின் விஜயா, வாகினி ஸ்டூடியோ ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றிப்படங்களை எடுத்து குவித்தது. எல்.வி பிரசாத்தின் பிரசாத் ஸ்டூடியோ, நடிகை பானுமதியின் பரணி ஸ்டூடியோ, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் ஸ்டூடியோ, ஏ.கே.வேலனின் அருணாச்சலம் ஸ்டூடியோ, கேமராமேன் வி.எஸ்.ரங்காவின் விக்ரம் ஸ்டூடியோ, வாசுமேனனின் வாசு ஸ்டூடியோ, கெல்லீசில் இருந்த ஜோசப் தலியத்தின் சிட்டாடல் ஸ்டூடியோ, சாரதா ஸ்டூடியோ, கோல்டன் ஸ்டூடியோ, எம்.ஜி.ஆரின் அடையாறு சத்யா ஸ்டூடியோ, சிவாஜியின் ராமாவரம் சிவாஜி கார்டன், நியுடோன் ஸ்டூடியோ, மயிலாப்பூர் பிரகதி ஸ்டூடியோ, கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோ, ரோகிணி ஸ்டூடியோ, சியாமளா ஸ்டூடியோ, மெஜஸ்டிக் ஸ்டூடியோ, அம்பிகா, ராதாவின் ஏ.ஆர்.எஸ்.கார்டன், வீனஸ் ஸ்டூடியோ, டி.ஆர்.கார்டன், மோகன், செந்தில் ஸ்டூடியோ, ரேவதி ஸ்டூடியோ, பிரகாஷ் ஸ்டூடியோ ஆகியவை அன்றைய கலைஞர்களின் கலைக்கோவில்களாக திகழ்ந்தன.

சினிமாவுக்கு பிரம்மாண்ட ‘செட்’ போட்டு தரும் நிறுவனங்கள், ஆடை, ஆபரணங்கள் மற்றும் சோபா, டேபிள், சேர் வாடகை தரும் நிறுவனங்கள் என சினிமா சார்ந்த துணைத்தொழில்களும் தழைத்தோங்கி இருந்தன. ஏதோ, சென்னை மட்டுமே சினிமா ஸ்டூடியோக்களின் தாயகமாக இருந்தது என்று நாம் நினைத்து விட முடியாது. மெய்யப்ப செட்டியாரே முதலில் 1930-ம் ஆண்டில் காரைக்குடியில் தான் ஸ்டூடியோ வைத்திருந்தார். பிறகு தான் கோடம்பாக்கம் வந்தார்.

அதேபோல சினிமா தயாரிப்பில் மற்றொரு மிக முக்கிய முன்னோடி நிறுவனம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். இதை உருவாக்கி நடத்தியவர் டி.ஆர்.சுந்தரம். 1937-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை செயல்பட்ட நிறுவனம். புரட்சி கவிஞர் பாரதிதாசன், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்ட பல முக்கிய படைப்பாளிகளின் வேடந்தாங்கலாக திகழ்ந்த ஸ்டூடியோ. இங்கு ஆங்கிலம், சிங்களம், இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களை தயாரித்தார். தமிழின் முதல் ‘கலர்’ படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ தயாரித்த நிறுவனமும் இது தான். இந்த நிறுவனத்திற்கு சென்னையிலும் நெப்டியூன் ஸ்டூடியோ என்ற நிறுவனம் இருந்தது. பின்னாளில் இதைத்தான் எம்.ஜி.ஆர். வாங்கி சத்யா ஸ்டூடியோ என பெயரிட்டார். தற்போது இது பெண்கள் கல்லூரியாகி விட்டது.

இதேபோல 1940-ம் ஆண்டு தொடக்கத்திலேயே கோவையில் புகழ் பெற்ற 2 திரைப்பட நிறுவனங்கள் செயல்பட்டன. ஒன்று ரங்கசாமி நாயுடுவின் சென்டிரல் ஸ்டூடியோ, மற்றொன்று ஸ்ரீராமுலு நாயுடுவின் பட்சிராஜா ஸ்டூடியோ. சென்டிரல் ஸ்டுடியோவை பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் வாங்கி பல புகழ் பெற்ற படங்களை தயாரித்தனர். பட்சிராஜா ஸ்டூடியோவுக்கு 1956-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி நடித்த நான் பெற்ற செல்வம் தான் கடைசி படம்.

இப்படி சேலம், கோவை போன்ற ஊர்களில் இயங்கிய முன்னோடி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையிலும் 1980-ம் ஆண்டில் மதுரையில் சித்திரகலா ஸ்டூடியோ என்ற ஒரு சினிமா தயாரிப்பு ஸ்டூடியோ உருவாக்கப்பட்டது. ஆனால், வெகு சில படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் கட்டுப்படியாகாமல் அதுவும் மூடப்பட்டு விட்டது.

சினிமா ஸ்டூடியோக்கள் ஏன் மூடப்பட்டன?

1970-ம் ஆண்டின் பிற்பகுதியில் சினிமாவில் ஒரு புதிய அலை உருவானது. சினிமாவை ஸ்டூடியோக்களில் மட்டுமே எடுக்காமல் இயற்கையாக அந்த இடங்களுக்கே சென்று கலைத்தன்மையுடன், யதார்த்தமாக படம் பிடிக்கும் பாணி உருவானது. இயக்குனர் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்தரையா, தேவராஜ் மோகன், பாக்யராஜ், துரை போன்ற இளம் இயக்குனர்கள் ஸ்டூடியோக்களில் மட்டுமே முடங்கி கிடந்த சினிமாவை விடுவித்து மக்கள் புழங்கும் இடங்களுக்கு கொண்டு வந்தனர். ‘அவுட்டோர் சூட்டிங்’ எனப்படும் வெளிப்புற படப்பிடிப்பு பிரபலமானது. பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஊட்டி, கொடைக்கானல், தேனி மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என சினிமா நகர்ந்து பயணப்பட்டது.

ஆகவே ஸ்டூடியோக்களுக்கான அவசியம் குறைந்தது. அதுவும் 2,000-ம் ஆண்டிற்கு பிறகு ‘டிஜிட்டல்’ முறை வந்துவிட்டதால் ‘போஸ்ட் புரடக்சன்’ செய்ய மட்டும் ஸ்டூடியோ போதுமானது என்ற நிலைமை தோன்றிவிட்டது.

No comments:

Popular Posts