Sunday, 1 December 2019

புரிதலும், வாழ்க்கையும்...!

புரிதலும், வாழ்க்கையும்...!

பேராசிரியர். கா.மணிமேகலை, முன்னாள் துணைவேந்தர்,

அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்.

பெ ண் என்றவுடன் நம் அனைவரின் மனதிலும் தோன்றுவது மனைவியாக வேண்டியவள், மற்றவர்களைச் சார்ந்து இருப்பவள் என்பதே. பெண்கள் பலவிதத்திலும் சமூகத்தால் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான உரிமைகளும் மறுக்கப்படுகிறது. மவுனத்திலேயே பெண்கள் தங்கள் வலிகளை மறைத்துக்கொள்கின்றனர். ஆண்பிள்ளைதான் வாரிசு என்று நினைக்க ஆரம்பித்ததால்; பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

பெண்களின் வாழ்க்கை கணவரையும், அவர் வீட்டாரையுமே சுற்றி அமைகிறது. நன்கு படித்த ஆண்கள் கூட தன் மனைவி என்று வந்தவுடன் பழமையான, பாரம்பரிய வழக்கத்தைத்தான் கடைப்பிடிக்க விரும்புகிறார்கள். உயர்பதவியில் இருக்கும் மனைவி, வீட்டில் தன்னிடம் எதிர்கேள்வி கேட்காமல் அடங்கி நடப்பதை மனதுக்குள் ரசிப்பவர்கள்தான் ஆண்கள். ஆனால் அவள் சம்பாதிக்கும் பணம் குடும்பத்திற்கு அவசியம் வேண்டும். அதே சமயம், கணவருடைய ஈகோ, மனைவி தனக்கு நிகராக சம்பாதிப்பதையோ, பிரச்சினைகளை சமாளிப்பதையோ ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறது.

அதேபோன்று, வேலைக்குச்செல்லும் பெண்கள் வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வேலையின் காரணமாக தாமதமாக வந்தால் அவமானங்களை சந்திக்க வேண்டும். வேலைக் களைப்பினாலோ அல்லது மன உளைச்சலினாலோ கணவனின் தேவையை பூர்த்திசெய்ய மறுத்தால், உடலும், மனமும் கூசிப்போகும்படியான வார்த்தைகள். மனிதத்தன்மையற்ற பேச்சையும், அடியையும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டும். அவர்களின் நேர்மையும் கடினமான உழைப்பும் கணவராலேயே சந்தேகத்திற்கு உரியதாகும்போது பெண்களின் துன்பம் சொல்ல முடியாததாகிறது.

வீட்டிலிருந்து வெளியுலகம் வரை அனைத்து வேலைகளும் ஆண், பெண் என்று பாலினத்தின் அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. எந்த வேலையும் ஆண்வேலை என்றோ, பெண் வேலையென்றோ இயற்கையில் கிடையாது. தெளிவாகச் சொன்னால் இந்த வேலைகள் பிரிக்கப்பட்டதன் பின்னணியில் ‘அதிகாரம்’ அல்லது ஆணாதிக்கம் என்ற ஒற்றைச் சொல் மறைந்து கிடக்கிறது. அதிகாரமிக்க, வருமானம் அதிகம் வரக்கூடிய வேலையும், பதவிகளும் ஆண்களுக்கு, அதிகாரமற்ற, குறைந்த வருமானமுடைய, இடுப்பு உடையும் வேலைகள் பெண்களுக்கு என்றுபிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவினை பெண்களுக்கு புரிவதில்லை. இது இயற்கை என்று படித்த, படிக்காத பெண்களும் நினைப்பதுதான் வருத்தத்திற்குரியது.

பொருளாதார மாற்றங்களும், வளர்ச்சியும், சமூகத்திலும், குடும்பத்திலும் சூழ்நிலைகளை மாற்றுகிறது. அனைத்தும் உலகமயமானதால் எதிர்காலம் குறித்த பயம் குழந்தையையும், பெற்றோரையும் மிரட்டுகிறது. நல்ல நிலைமைக்கு நம் குழந்தைகள் வரவேண்டும் என்ற ஆசை பெற்றோர்களுக்கு. பலதடைகளையும் உடைத்து இந்த சமூகத்தில் தன்னையும் நிலைநிறுத்தி தன் பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் படும்பாடு எண்ணிலடங்காது.

பெண்கள் காலங்காலமாக வகித்த மனைவி, அம்மா, மருமகள் போன்ற பாத்திரங்களையும் புதிய வேலைச்சுமையுடன் சேர்த்துச் செய்ய வேண்டியதிருக்கிறது.. வீட்டில் குழந்தையைப் பார்ப்பதற்கு ஆள் இல்லாததால் மிகச்சிறிய வயதிலேயே குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம். தனக்கு என்ன வேண்டும் அல்லது என்ன செய்கிறது என்று சொல்லக்கூட தெரியாத வயது. அந்தத் தாயின் மனம் படும்பாடு சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது. வேலையை செய்து கொண்டிருக்கும் போதே அந்தத்தாயின் மனம் பதறும், பிள்ளை ஒழுங்காகச் சாப்பிட்டாளா? பள்ளிக்கூடத்தில் சமத்தாக இருக்கிறாளா? காய்ச்சலோடு போனாளே என்னவானதோ என குழந்தை பற்றிய கவலை. வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள், வேலை முடித்து வீட்டிற்கு வந்தால் ஏன் தாமதம் என்று வீட்டிலுள்ளவர்களின் அசிங்கமான பார்வை. அம்மா வந்து சாப்பாடு தருவாள் என்று காத்திருக்கும் குழந்தை ஒருபுறம், மனைவி இல்லாது கையும் ஓடாமல், காலும் ஓடாமல் உள்ளும், வெளியும் சிடுசிடு முகத்துடன் நடக்கும் கணவன் மறுபுறம், குழந்தைக்கு வீட்டுப்பாடம், இரவு உணவு, காலையில் விட்டுப்போன மீதி வேலைகள்! என்ன செய்வார்கள் பெண்கள்? ஆதனால்தான் வேலைக்குச் செல்வதே பெண்களுக்கு சாபமானதோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

இது தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ள பெண்கள் எல்லா வேலைகளையும் பார்க்க தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். அம்மா, தங்கை, மருமகள், மனைவி, ஏன் வேலைக்காரியாகக்கூட வீட்டிலிருக்கும்போது இருக்கும் பெண்கள், வெளியே வரும்போது அதிகாரியாகவோ, பணியாளராகவோ தங்களை உடனே மாற்றிக்கொள்கிறார்கள். வீட்டின் சுமையோ, வருத்தமோ வெளியே தெரியாதவாறு; மறைத்து விடுவார்கள், ஏனென்றால் உதவுவதுபோல் வந்து உபத்திரவம் கொடுக்கும் கூட்டம் மிக அதிகம். எனவே வீட்டுப் பிரச்சினைகளை வெளியே பகிர்வதும் இயலாது. அதேபோல்தான் அலுவலகத்தில் நடக்கும் அவமானங்களையும் கூட, தன்னுடைய சக ஊழியரோ, மேலதிகாரியோ அல்லது அலுவலகத்தில் உள்ள யாரோ ஒரு ஆண் தன்னிடம் கடுமையாக கடிந்து கொண்டதையோ அல்லது அசிங்கமாகப் பேசியதையோ கணவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அதை வைத்தே குடும்பத்தில் நாளை பிரச்சினைகள் கிளம்பும். ஆகையால் பெண்கள் தனது மனச்சுமைகளை பகிர்ந்து கொள்வதற்குக்கூட ஆளில்லாமல் தவிக்கிறார்கள். எதற்காக பெண்கள் இத்தனை துன்பப்படுகிறார்கள்? அனேகப் பெண்களுக்கு இந்த வேலையினால் ‘ஆத்ம திருப்தியும்’ கிடைப்பதில்லை. ஆனாலும் ஏன்? ஒரே பதில் ‘குடும்பம்’, தன் பிள்ளைகளின் எதிர்காலம்.

வேலைக்குப் போகும் பெண்களால் குடும்பத்தையும், பிள்ளைகளையும் ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியாது என்றால் வேலைக்குப் போகும் கணவனால் மட்டும் குழந்தைகளையும், மனைவியையும் எவ்வாறு ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியும்?.

தாய்மையின் சந்தோஷத்தையும், தன் பிஞ்சுக் குழந்தையின் மழலையையும், சேட்டையையும் முழுவதும் அனுபவிக்க முடியாமல், பெண்கள் பெரிதும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். தங்களுடைய விருப்பங்களை மற்றவர்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு, ஆண்களுக்கு நிகராக, சில நேரங்களில் அவர்களையும் விட அதிகமாக உழைக்கும் பெண்கள் சந்தோஷமாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தங்கள் கனவுகள் அனைத்தையும் தகர்த்து விட்டு வேலை, செய்வதிலேயே பெண்கள் வாழ்நாளை வீணடிக்கவும் விரும்பவில்லை. கணவன், குழந்தை அல்லது வீட்டிலிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத நேரங்களில் சொர்க்கத்தைவிட சிறந்த வீடே நரகமாகிறது. இத்தனையும் குடும்பத்திற்காக இழக்கும் இவர்களுக்கு, இவர்கள் சம்பாதிக்கும் பணத்தின் மீதும் உரிமை கிடையாது. நிறைய குடும்பங்களில் ஏ.டி.எம். கார்டு கணவரிடம்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் சம்பாதித்தாலும், கைச் செலவிற்குக் கணவனிடம் கையேந்தும் பெண்கள் அதிகம். எனவே வேலைக்குச் செல்லும் பெண்களுக்கெல்லாம் பொருளாதார சுதந்திரம் உண்டு என்பதுவும் மாயை.

இன்றைய பொருளாதார சூழலில் கணவன், மனைவி இருவரும் அவசியம் வேலைக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது. விட்டுக்கொடுத்தல் என்பது இருவரிடம் மட்டுமின்றி குடும்ப உறவினர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டும். நம் வீடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் வீட்டில் உள்ளவர்களிடம் அலுவலகத்திலும், வெளியிலும் நடந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கு கணவனுக்கும், மனைவிக்கும் இருக்க வேண்டும். நல்ல புரிதல் இருக்கும் வீட்டில் வறுமை கூட பெரிதாகத் தெரிவதில்லை. மகிழ்ச்சியான குழந்தைகளே வன்முறை இல்லாத அமைதியான மற்றும் வளமையான சமூகத்திற்கான வித்து. எனவே, ஆரோக்கியமான குடும்ப உறவுகளை மேம்படுத்தி எதிர்காலத்தில் வலிமையாக திகழ்வோம்.

No comments:

Popular Posts