Wednesday, 11 December 2019

மலைகளை பாதுகாப்போம்...!

மலைகளை பாதுகாப்போம்...!

முனைவர் அ. உஷா ராஜ நந்தினி,

இணை பேராசிரியர்,உயிர்தொழில் நுட்பவியல் துறை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்,

கொடைக்கானல்.

இ ன்று(டிசம்பர்11-ந்தேதி) சர்வதேச மலைகள் தினம்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது டிசம்பர் மாதம் 11-ந்தேதியை சர்வதேச மலைகள் தினமாக 2002-ம் ஆண்டு அறிவித்தது. மலைகளின் முக்கியத்துவத்தை நம் வருங்கால சந்ததியினருக்கு கற்பித்தல் மிக முக்கியமானது என்பதற்காகவும், அவர்கள் தான் உலகின் அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமாய் விளங்கும் நன்னீரின் பிறப்பிடமான மலைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பாளர்கள் என்பதற்காகவும் இந்த 2019-ம் ஆண்டிற்கான கருப்பொருளை “மலைகளே இளமைக்கு காரணி” என்று அறிவித்துள்ளது.

இந்த பூமியில் வாழும் உயிரினங்களிலேயே அதீத புத்தியால் சக்திவாய்ந்த ஜீவியாய் மனிதன் மாறிவரும் வேளையில், இங்கு வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் பூமியில் வாழும் உரிமை சமமாக உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. இயற்கையென்பது ஒன்றோடு ஒன்று சார்ந்து பிணைந்திருப்பது. அதில் ஏதாவது ஒன்றை சரியான புரிதலில்லாமல் கையாண்டால் அதன் பின்விளைவுகளை அறிய சில தலைமுறைகள் கூட ஆகலாம். அதை சரி செய்துவிடலாம் என்று முயற்சிகளை முன்னெடுக்கும் போது அது இயலாமையிலும் தோல்வியிலும் முடிவடைந்து காலந்தாழ்ந்த செயலாய் மாறியிருப்பதை உணரமுடியும்.

பலநேரங்களில் அத்தகைய தவறுகள் இயற்கையை புரிந்து கொள்ளாமல் அறியாமையால் நடந்தவையே. ‘கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்’ செய்து பலனில்லாதது போல் தவறு செய்த பின் வருந்தி பயனொன்றுமில்லை. மொரிசியஸ் தீவில் 1970-களில் டம்பலாகோக் என்னும் மரம் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 300 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய 13 மரங்கள் மட்டுமே எஞ்சியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டது. எவ்வளவோ முயன்றும் அந்த மரத்தின் விதைகளை முளைக்க செய்ய இயலவில்லை. மேலும் பல தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில் அறியப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாய் இருந்தது.

அந்த தீவில் பதினேழாம் நூற்றாண்டுகளில் டூடூ எனும் பறவையினம் வாழ்ந்தது. உணவிற்காக டூடூ அதிகமாக வேட்டையாடப்பட்டதால் அந்த பறவையினமே அழிந்துபோனது. டூடூவிற்கும் டம்பாலாகோக் மரத்திற்கும் ஒரு பிணைப்பு இருந்திருக்கிறது. அந்த மரத்தின் விதைகள் டூடூவின் உணவுப்பாதையில் சிறிது ஜீரணிக்கப்பட்டபோதே முளைத்தன. டூடூ இனம் அழிந்ததால் மரமும் அழிவின் விளிம்பிற்கு சென்றது.

பின்னர் ஒரு வாழும் ஆமையினத்தால் அந்த விதைகளை முளைக்கும் பக்குவத்திற்கு செரிமானம் செய்ய இயலும் என்று கண்டறியப்பட்டு மரத்தை காக்க மாற்றுவழி கண்டனர்.

ஒரு உயிரியை சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் பூமியில் பல உண்டு. ஒரு உயிரினம் அழிந்தால் அதை சார்ந்து வாழும் உயிரினமும் அழிந்து போக நேரிடலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்காவின் காட்டிலுள்ள ஓம்பலோகார்பம் எலேட்டம் எனும் மரத்தின் பழங்கள் இரண்டு கிலோ எடையுள்ளவை. அந்த காட்டில் வசிக்கும் யானைகளால் மட்டுமே அதை உடைக்க முடியும். யானையின் உணவுப் பாதையில் சென்று வரும் விதைகளே முளைக்கும். இந்த மரம் யானையை சார்ந்தே வாழ்கிறது. பழம் பழுத்து விழும் நேரங்களில் குறிப்பிட்ட வலசை பாதையில் பயணித்து யானைகள் இந்த மரங்களை சென்றடையும். அதையறியாமல் மனிதனின் செயல்பாடுகளால் வலசை பாதை தடுக்கப்பட்டாலோ, யானைகள் அந்த காட்டிலிருந்து மறைந்தாலோ அதை சார்ந்திருக்கும் மரம் அழிந்துபோகும்.

அது போலவே நம்நாட்டில் அழகான மேகங்கள் தவழும் மலைத்தொடர்கள், பருவநிலை தவறாது மழையை பொழிந்து நாட்டின் உயிரினங்கள் அனைத்தும் தளைக்க பகிர்ந்தளிப்பதில் பேருதவியாய் நிற்பவை. மலை உச்சிகளிலுள்ள பசும்புல் போர்வையும் அதன் கீழ் உள்ள அடர்ந்த காடுகளின் வேர்களும் உறிஞ்சும் பஞ்சுகள் போல பல அடுக்குகளாய் இருக்கும். அவை பொழியும் மழையையும் படரும் பனியையும் உறிந்து சொட்டு சொட்டாய் வடியவைக்கும்.

அவை அனைத்தும் சிறிய நீரோடையாய் மாறும். நீரோடைகள் ஒன்று சேர்ந்து அருவியாய், ஆறாய் உருமாறும். அதனால் காட்டில் இணக்கமாய் வாழும் உயிரினங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய் வாழும். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழும் சோலை மரங்களையும், அவற்றுடன் இணக்கமாய் வளரும் ஆயிரக்கணக்கான தாவரங்களையும் பிற உயிரினங்களையும் உள்ளடக்கியது நம் நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்.

ஓரிரு நூற்றாண்டிற்கு முன்னர் மனிதனுக்கு சில தேவைகள் சார்ந்த சிந்தனை தோன்றியது. மரத்திலிருந்து தாள் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. தோல் பதனிடுவதற்காக சவுக்கு மரத்திலிருந்து டானின் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றிற்கு மட்டுமல்லாமல் எரிபொருளாகவும் தொழிற்சாலைகளுக்கு நிறைய மரங்கள் தேவைப்பட்டன. தொழிற்சாலைகளுக்கு பயனற்ற சோலை மரங்களை காட்டிலிருந்து நீக்கிவிட்டு மேற்கூறிய பயன்களுடைய மிகவிரைவாக வளரும் மரங்களை பெரும் பரப்பளவில் வளரச்செய்தால், தொழிற்சாலைகளின் தேவைக்கு ஈடுகொடுக்க இயலும் என்றெண்ணி சோலை மரங்களை பெருவாரியாக அழித்து அன்னியநாட்டு மரங்களான யூகாலிப்டஸ், பைன், வேடில் மரங்களை கணிசமாக நட்டு வளரச் செய்தனர்.

நம் நாட்டு மலைகளின் தட்ப வெட்ப நிலையை பற்றிக் கொண்ட மரங்கள் வெகு விரைவாக காட்டை ஆக்கிரமிக்கத் தொடங்கின. சோலை மரங்களோடு இணக்கமாய் வாழ்ந்த சிறிய தாவரங்களும், அதை சார்ந்து வாழ்ந்த பிற உயிரினங்களும் நுண்ணுயிரிகளும் அவ்விடங்களிலிருந்து மறைந்து போயின. அயல்நாட்டு மரங்களுக்கடியில் நம் காட்டுத் தாவரங்கள் அதிக இணக்கம் காட்டுவதில்லை. அதிவேகமாக வளரும் தன்மையுள்ள அந்த மரங்கள் சிலவற்றிற்கு தண்ணீர் தேவையும் அதிகப்படியாகயிருந்ததால் புல்வெளிகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கின. மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டாலும், செயற்கை டானின் மற்றும் தாளின் கண்டுபிடிப்பால் காலப்போக்கில் அத்தகைய மரங்களின் தேவைகள் குறைந்தது. ஆனால் அந்த மரங்களின் பெருக்கம் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

நூற்றாண்டுகள் கடந்து இப்போது நாமிழைத்தத் தவறை உணர்ந்து விட்டோம். மழைக்கு ஆதாரமாயிருந்த காடுகளையும் புல்வெளிகளையும் பெருமளவு பறி கொடுத்து விட்டோம் என்பதை அறிந்து விட்டோம். புதிய திட்டங்கள் பல கொண்டுவந்து சோலை மரக்காடுகளை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சோலை மரங்களின் ஒரு வகை மரத்தைக்கூட வளர்த்து வெற்றிபெற இயலவில்லை. இயற்கையை மனித பயன்பாட்டிற்காக மாற்ற எண்ணும் போது பலவழிகளில் ஆராய்ந்து மாற்றுவழிகளை தேர்ந்தெடுப்போம். அடுத்த தலைமுறையினருக்கும் நாம் காணும், அனுபவிக்கும் இயற்கையை விட்டு வைப்போம். மலைகளை பாதுகாப்போம்.

தயவுகூர்ந்து இயற்கையை ரசிப்போம், தொடவேண்டாம். தொடுவது நம் அஸ்திவாரத்தை அசைப்பதற்கு சமம்.

No comments:

Popular Posts