Tuesday, 26 November 2019

சிறந்த கல்வியே இந்தியாவுக்கு அடித்தளம்

சிறந்த கல்வியே இந்தியாவுக்கு அடித்தளம்

ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி.

உ லகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில், மிகப்பரவலான கல்வி முறைகளில் ஒன்றைக் கொண்டுள்ள நாம் சிறந்த கல்வியின் மூலமே புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்க முடியும் என்பதையும் நாம் அறிந்துள்ளோம். மனித குலத்தின் தூண்களான, எக்காலத்திற்கும் பொருந்தும் மதிப்பீடுகளை அறிமுகம் செய்வதன் மூலமே சுமார் 32 கோடி மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் பொன்னான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்ற உண்மையையும் நாம் நன்கு உணர்ந்துள்ளோம்.

ஒரு மனிதர் கவுரவமிக்க வாழ்க்கையை நடத்த விரும்பினால், அவரது செயல்கள் எதுவும் மற்றவர்களின் கவுரவம் மிக்க வாழ்க்கைக்கு இடையூறு செய்யாமல் இருப்பதை உறுதி செய்யும் கடமை அவருக்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். கருத்து கூறும் சுதந்திரத்தை எவர் ஒருவரும் விரும்பினால், மற்றவர்கள் அவர்முன் வைக்கிற கருத்துகளைப் பொறுமையோடும், கட்டுப்பாட்டோடும், சகிப்புத் தன்மையோடும் கேட்டுக்கொள்வதை அவர் உறுதி செய்ய வேண்டும். உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் அடிப்படை உரிமைகள் பற்றி பேசுகின்றன. ஆனால், அடிப்படை கடமைகள் பற்றி மவுனம் சாதிப்பது பெரும் வியப்பாக உள்ளது.

சோவியத் ஒன்றியத்தால் ஈர்க்கப்பட்டு, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன. நமது மாணவர்களுக்குக் கடமைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் நிலை ஏற்படும் போது நமது பிரச்சினைகளில் பலவும் தாமாகவே தீர்ந்துவிடும். இந்தியாவின் மையமான புனிதக் கல்வி பற்றி நாம் பேசும்போது, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கடமைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக அதில் சேர்ந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன். 33 ஆண்டுகளுக்குப் பின், புதிய கல்விக் கொள்கை நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்பு ஆர்வத்தை மேம்படுத்துவது, மாண்புகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது, புனிதத்தன்மையை உள்ளடக்கியிருப்பது, அறிவதற்கு ஆர்வமுள்ள ஆராய்ச்சிகளை மேற்கொள்வது போன்ற நோக்கங்களைக் கொண்ட புதிய கல்விக் கொள்கை நாட்டின் சமூக, பொருளாதார வாழ்க்கையில் புதிய தொடக்கத்தைக் கொண்டுவரும். உலக அளவில் இந்தியாவை வல்லரசாக நிறுவுவதற்கு புதிய கல்விக் கொள்கை உறுதி கூறுகிறது. ஒரு நாடாக மட்டுமின்றி, துணைக்கண்டமாகவும் உள்ள இந்தியா, பன்முகத்தன்மையையும், வேறுபட்ட பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும் கொண்டுள்ளது என்பதை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது இன்றைக்கு மிகவும் அவசியமானது.

இந்தியாவைப் போல், உலகின் வேறெந்தப் பகுதியிலும் இவ்வாறு வெளிப்பட்டுத் தோன்றும் பன்முகத் தன்மையைக் காண்பது அரிது. மனித நாகரீகத்தின் ஆன்மிகக் களஞ்சியத்திற்கு இந்திய கலாசாரம் எப்போதும் ஆழமான பங்களிப்பை செய்துள்ளது. இதனை அர்ப்பணிப்போடு நாம் பாதுகாப்பது அவசியம். ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் நமது பேச்சு வழக்கு மாறுகிறது. அதன்பிறகு, சுமார் 200 கிலோமீட்டர் சென்றால், உணவுப் பழக்கமும், உடைப் பழக்கமும் மாறுகிறது.

ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்றால் நமது மொழிகளும், பலவகை வண்ணங்களைக் கொண்ட வாழ்க்கை முறையும் மாறிவிடுகின்றன. இவற்றுக்கெல்லாம் அப்பால் பன்னெடுங்காலமாக ஒற்றுமை இழையோடு நாம் ஒருங்கிணைந்திருக்கிறோம். ஒற்றுமை, இணக்கம், ஒத்துழைப்பு, சகோதாரத்துவம், வாய்மை, அகிம்சை, தியாகம், பணிவு, சமத்துவம் போன்ற மாண்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வை நோக்கி முன்செல்வதாக நமது கலாசாரம் நம்மை ஈர்த்துள்ளது. இக்காலத்தில் மனிதர்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் எண்ணற்றப் பிரச்சினைகளோடு போராடி வருகிறார்கள். சிந்தனைகள் மூலம் உலகின் தலைமைத்துவத்தை பெற்றிருந்த நாம், மீண்டும் நமது சிந்தனைகள் மூலம் உலகத்தை வெல்வோம். அதிவேகமாக மாறிவரும் டிஜிட்டல் யுகத்தில் கல்வியின் மூலம் நமது மாண்புகளைப் பரவலாக்குவது மிகப்பெரிய சவாலாகும். புதிய கல்விக் கொள்கையால், நமது மாணவர்களை வேர்களோடு தொடர்புப்படுத்த நாம் முயற்சி செய்துள்ளோம்.

குழந்தைப் பருவத்தில் பள்ளிகள் மூலம் கடமை உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வு தாமாகவே வரப்பெற்றதாக நான் நினைக்கிறேன். இமாலயப் பகுதியில் தொலைதூரத்தில் இருந்த எனது தொடக்கப்பள்ளியில் முறையான கல்வி போதிக்கப்படுவதற்கு முன், நல்ல குடிமகன்களாக இருப்பது பற்றி போதிக்கப்பட்டது இப்போதும் என் நினைவில் உள்ளது. அதிவேகமாக மாறிவரும் உலகச்சூழலில், சாதாரண குடிமக்கள் என்பதைவிட, டிஜிட்டல் குடிமக்களாக மாறிவரும்போது எதிர்காலம் மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

அதிகபட்ச சவால் நிறைந்த உலகச்சூழலில், இந்தியாவின் மக்கள் தொகை பகுப்பு தனித்தன்மையுடன் இருப்பது நமக்குப் பெருமையாகும். நாம் மிகப்பெரிய அளவுக்கு இளைஞர்களைக் கொண்டிருக்கிறோம். உலக அளவிலான போட்டி சகாப்தத்தில், முன்னிலையில் இருக்கும் வாய்ப்பை இது வழங்கியுள்ளது. இருப்பினும், நமது இளைஞர்களை ஆக்கப்பூர்வமான வழியில் ஊக்கப்படுத்துவது எவ்வாறு என்பது நம்முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும். அரசியல் சட்டப்படியான கடமைகள் குறித்து நமது மாணவர்களிடம் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மிகச்சரியாகவும், காத்திரமாகவும் தங்களின் கடமைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய சூழலையும் இன்று உருவாக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் நமது மாணவர்கள் முக்கியம் எனும் அதேவேளையில், நமது ஆசிரியர்களின் பங்களிப்பும் பெரிதாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் மதிப்புக்கூட்டிய கல்வியின் மூலம் கடமைகளின் முக்கியத்துவத்திற்கான சூழலை உருவாக்க புதிய கல்விக் கொள்கை முயற்சி செய்துள்ளது. கணந்தோறும் மாறிவரும் உலகச்சூழலில், இந்தியாவைப் பயனுறும் வகையில் முக்கியத்துவம் கொண்டதாக வைத்திருப்பது சவால் மிக்கப் பணியாகும். நமது மாணவர்களின் மனித மாண்புகளை வளர்ப்பதன் மூலமே இத்தகைய சவால்களை நாம் வெல்ல முடியும்.

இந்திய சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த நம் அனைவரிடையே அமைதி மிக்க ஒத்துழைப்பு உணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். கூட்டுணர்வும், பரஸ்பர ஒத்துழைப்பும் அமைதியை உண்டாக்குகிறது. இந்த அமைதி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. சமூக வாழ்க்கையில் நமது பொறுப்புகள், கடமைகள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, அவற்றை அமைதியான முறையில் நிறைவேற்றும் மன உறுதியும் கொண்டிருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பதும்அவசியமாகும். எந்த சாதியை, மதத்தை, பிராந்தியத்தை, மொழியை, பழக்கவழக்கங்களை நாம் சார்ந்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல. சூழ்நிலைகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்பதுதான் முக்கியம். பரஸ்பர புரிதல் மற்றும் ஆதரவின் மூலமே நாட்டின் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்த முடியும். பல நாடுகள் குடிமைப்பண்பை தங்களின் கல்வித் திட்டங்களின் பாடங்களில் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. குழந்தைகளுக்கு உரிமைகளையும், பொறுப்புகளையும் விளக்குவதன் மூலம் அவர்களுக்கு உதவி செய்வது மட்டுமின்றி, தேசத்தின் கட்டமைப்புக்கான அடித்தளத்தையும் வலுப்படுத்துகிறோம் என்பதில் ஐயமில்லை.

No comments:

Popular Posts