Monday 18 November 2019

காணாமல் போன கதாகாலட்சேபம்

காணாமல் போன கதாகாலட்சேபம்

முனைவர் இரா.கீதா,

உதவிப் பேராசிரியர்,

ராமசாமி தமிழ்க்கல்லூரி,காரைக்குடி.

த மிழகம் மிகப் பழமையான நாகரிகமும் பண்பாடும் கொண்டது. தமிழ்நாட்டினை உலகக் கலைகளின் பிறப்பிடம் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டில் பிறந்த கலைகள் அனைத்தும் பிற இடங்களில் பரவி வேறுவேறு வடிவங்கள் பெற்றுத் திகழ்கிறது. அந்த வகையில் கதாகாலட்சேபம் என்னும் கதை சொல்லும் கலைக்கும் தமிழகம்தான் ஆணி வேராகும். இக்கலைக்குத் தமிழில் ‘இன்னிசைச் சொற்பொழிவு’ என்ற பெயர் உண்டு. மராட்டிய மாநிலத்திலிருந்து கதாகாலட்சேபக் கலை வந்ததாகக் கருதுதல் மரபு. எனினும் தமிழகத்தில் இக்கலையின் முழுவடிவம் இல்லையென்றாலும் அடிப்படைக்கூறுகள் இருக்கின்றன. ஆந்திராவில் இக்கலைக்கு “ஹரிகதாகாலட்சேபமு” என்று பெயர். கர்நாடகத்தில் ‘கதாபிரசங்கம்’ என்று பெயர். மராட்டிய மாநிலத்தில் ‘கீர்த்தன்’ என்று அழைப்பர். இக்கலையில் ஈடுபடுபவர்களைக் ‘கீர்த்தன்கார்’ என்று அழைத்தனர்.

கதை கூறும் மரபு

காலங்காலமாய்க் கதைகேட்டு வளரும் மரபு நமது நாட்டில் உள்ளது. பழைய நிகழ்ச்சிகளை, கதைகளை, புராணங்களைக் கதைகள் மூலம் விளக்கினர். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கதை கேட்பதை விரும்புவது இயல்பே. அக்கதைகள் அனைத்தும் அறிவுரைக் கதைகளாகவும், இறைவனைத் தேடவேண்டும் என்பதற்காக அமைந்த தெய்வீகக் கதைகளாகவும், அறத்தையும் தர்மத்தையும் உணர்த்துகின்ற புராணக் கதைகளாகவும் இருந்தன. இவைகள் அனைத்தும் மனிதனை நெறிப்படுத்துவதற்காகவே அமைந்தன. அந்த வகையில் கதாகாலட்சேபக் கலையானது மக்கள் வாழ்வைச் செப்பம் செய்ய வந்த கலையாகும்.

இசையோடு

தொடர்புடைய கலை

கதாகாலட்சேபம் இசையோடு தொடர்புடையது ஆகும். கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கேள்வி வாயிலாக அறிவு புகட்டுவதற்காக இக்கலை இசையோடு அமைந்தது. தொடக்க காலத்தில் மகாபாரதக்கதையே அதிகமாகச் சொல்லப்பட்டது. நாட்டுப்புற மக்களுக்கு அறியாமையைப் போக்கும் வகையில் இக்கதாகாலட்சேபம் வந்தது. இதில் அறிவும், அனுபவமும் பெற்றவர்களே இக்கலையை மேற்கொண்டனர். இசையோடு கூடிய இக்கலையைப் பாகவதர்களும், பக்கவாத்தியக்காரர்களும் நடந்துகொண்டுதான் கதை நிகழ்ச்சியை நடத்தினர்.

கதை கூறிய பாகவதர்கள்

தஞ்சையில் வாழ்ந்த ராமச்சந்திரபாகவதர், அவரின் மகன் விஷ்ணுபாகவதர், தஞ்சை ஸ்ரீகிருஷ்ணபாகவதர், நரசிம்ம பாகவதர், லட்சனாச்சாரியார் குலமங்கலம் வைத்யநாதபாகவதர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், சீ.சரஸ்வதிபாய், திருவாரூர் வாமன பாகவதர், திருவிடைமருதூர் கிருஷ்ண பாகவதர், திருமுருக கிருபானந்தவாரியார், எம்பார் விஜயராகவாச்சாரியார் போன்றோர் குறிப்பிடத் தக்கவர் ஆவர்.

மேடை அமைப்பும் ஆடை அணிகலன்களும்

தொடக்கத்தில் மேடையின்றி நடைபெற்ற கலை பின்பு பிற்காலத்தில் நீண்ட பலகை போடப்பட்டு மேடை அமைக்கப்பட்டது. அதில் பாகவதர் பின்பாட்டுக்காரர், தாளம் போடுபவர், சுருதி மீட்டுபவர், மிருதங்கம் வாசிப்பவர் ஆகிய ஐந்து பேரும் மேடையில் இருப்பர். பாகவதர் தம் குழுவினரோடு ஒரு கிராமத்திற்குச் சென்று கிராமத் தலைவரிடம் அனுமதி பெற்றுப் பின்பு இரவில் கதை சொல்வார். பாகவதர் பஞ்சகச்சம் இடையில் அணிந்திருப்பர். தலையில் குடுமி வைத்து அதில் பூச்சுற்றி, காதுகளில் கடுக்கன் அணிந்து, மார்பில் உருத்திராட்சம் அல்லது துளசி மணி அணிந்து கொண்டு, நெற்றியில் திருநீறு பூசி, மார்பில் சந்தனம் பூசித் தோற்றமளிப்பர். பாகவதர் பத்து முழ வேட்டியும், ஆறுமுழத் துண்டும் அணிந்திருப்பர்.

சமுதாயம் பெற்ற பயன்

கதாகாலட்சேபம் என்பது பாரதநாட்டின் பண்பாட்டை வெளிக்கொணர்வதாகும். ஒரு கலையானது மக்களுக்கு பயன்படும் பொழுது தான் உயர்ந்த நிலையினை அடைகிறது. கதாகாலட்சேபக் கலையை மேற்கொண்ட பாகவதர்கள் தம் வாழ்நாளில் பலருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார்கள். சமுதாயச் சிக்கல்களையும், அதைத் தீர்த்துவைக்கும் வழிகளையும், இதிகாச புராணங்களின் வழியே நீதிமுறைகளையும் மக்களுக்கு அவர்கள் இசையோடு எடுத்துக் கூறினார்கள். வாழ்வுக்கு வழிகாட்டும் மாந்தர்களாக இதிகாசப் பாத்திரங்களை மக்கள் கருதினார்கள். இடைக்காலத்தில் சமுதாயப் பிரசாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. சுதந்திர உணர்வைப் பரப்புவதற்கும் இக்கலை பயன்படுத்தப்பட்டு காசியில் ‘கங்காராம்’ என்ற பாகவதர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கதை கூறியதால் மக்களுக்கு சுதந்திரத் தாகம் அதிகமானது. இதன் விளைவாக அவரை ஆங்கில அரசு கைது செய்தது.

மேலும் கதாகாலட்சேபக்கலையானது சமுதாயச் சிக்கல்களைத் தீர்க்கும் முறைகளை எடுத்துக்கூறியது. ‘அனுசியா’ என்ற கதையைக் கேட்டு குடும்பச் சண்டையை மறந்து வாழ்ந்தவர்கள் உண்டு என்கிறார்கள். ‘வாரியார்’ கோவில்களை உருவாக்கவும், புதுப்பிக்கவும் காரணமாக அமைந்திருக்கிறார். சமுதாயம் நலம் பெறவேண்டும் என்ற சிந்தனைவுடையவர்களாகப் பாகவதர்கள் திகழ்ந்துள்ளனர்.

மக்களைத் திருத்தச் சட்டங்கள் மட்டும் போதாது மக்கள் தானே மனம் மாற வேண்டும். மக்களின் மனங்களை மாற்றும் கருவியாக இதிகாசப் புராணக்கதைகள் அமைந்தன. அவற்றிற்கு சமுதாயச் சீர்கேடுகளை மாற்றும் ஆற்றல் உண்டு. அக்கதைகளை மக்களிடம் பரப்பியவர்கள் பாகவதர்கள். சமயப் பணியைச் செய்ய வந்த இக்கலை சமுதாயத்தில் காணாமல்போனது வருந்தத்தக்கது.

No comments:

Popular Posts