Sunday, 10 November 2019

மனித முன்னேற்றத்துக்கு வித்திட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள்

மனித முன்னேற்றத்துக்கு வித்திட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள்

கோ.ஒளிவண்ணன், எழுத்தாளர்

இ ன்று(நவம்பர் 10-ந்தேதி) உலக அறிவியல் தினம்

யுனெஸ்கோ அமைப்பின் வேண்டுகோளின்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 10-ந்தேதி உலக அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. மக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனித இனத்திற்கு முன்னேற்றத்தை காணவும், அமைதியை நிலைநாட்டவும் அறிவியல் பயன்படவேண்டும். மேலும் நாடுகளிடையே தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தகவல்களையும் ஒருவருக்கு ஒருவர் தங்குதடையின்றி பரிமாறிக் கொள்ளுதல். அதுமட்டுமின்றி அறிவியலை சமூக மேம்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்துவது என்கிற உறுதிமொழியை நினைவுபடுத்திக் கொள்ளவும், அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைகளுக்கும் சமூகத்தில் ஏற்படும் சவால்களையும் எதிர்ப்புகளையும் தக்கவாறு எதிர்கொள்ளுதல் என முக்கிய குறிக்கோள்களை நினைவு கூரும் வகையில் உலக அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் இத்தினத்தின் நோக்கம் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாத் தரப்பினருக்கும் தங்குதடையின்றி போய்ச்சேர வேண்டும் என்பதாகும். தொடக்க காலத்தில் மனிதன் அறியாமையில் மூழ்கி கிடந்த போது அவனுக்கு இயற்கை தொடர்பான பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. இரவு, பகல், காற்று, மழை, இடி, மின்னல், வெள்ளம், பூகம்பம், தீ, கிரகணங்கள், ஆழிப்பேரலை போன்றவற்றிற்கு விடை தெரியாத போது, தன்னை மீறிய சக்தி ஒன்று உள்ளது என்று நம்ப தொடங்கினான். அவைகளை கண்டு அச்சம் கொண்டான். பிறகு வழிபடவும் தொடங்கினான்.இருந்தபோதிலும் மனிதனுக்கு இயற்கையாய் அமைந்துள்ள எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் காரணமாக தொடர்ந்து விடைதேட தொடங்கினான். மற்ற எல்லா உயிரினங்களை விட மனிதனுக்கு உள்ள சிறப்பான குணம் யாதெனில் தனக்கு தெரிந்த செய்திகளையும் தான் அறிந்த தகவல்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டது. இதன் காரணமாக ஒரு தலைமுறையில் அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்ட செய்திகள் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு பல்வேறு வகைகளில் கொண்டுசெல்லப்பட்டது. இதன் காரணமாக முன்பிருந்த தலைமுறையை விட அடுத்து வந்த தலைமுறை முன்னேறிய சமூகமாக மாற முடிந்தது.

பானை ஓடுகள், பாறைகள், பட்டு துணிகள், கற்கள், இவைகளிலெல்லாம் தன்னுடைய கருத்துகளை எல்லாம் பதித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தான். இப்படியாக அறிவியல் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தாள்களில் அச்சடிக்கப்பட்டு புத்தகமாக மாறியபோது அறிவு மூலைமுடுக்கெல்லாம் சென்றது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலம் என்று சொல்லக்கூடிய அறிவியல் புரட்சி ஏற்பட்டது.

எண்ணற்ற அறிவியலாளர்கள் பல துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தனர். இவைகளெல்லாம் மனிதகுலம் மேம்படுவதற்கு தக்கதாய் அமைந்தது. மருத்துவத்துறையில் மனிதன் மகத்தான புரட்சிகளை கண்டான். இதன் காரணமாக மனித ஆயுளை நீட்டிக்க முடிந்தது. உடலில் பழுதுபட்ட உறுப்புகளை நீக்கிவிட்டு மாற்று உறுப்புகளை வைத்துக்கொள்ள முடிந்தது. அதைப்போல புவியீர்ப்பு விசையை தாண்டி இந்த பூமிப் பந்தை விட்டு வெளியே சென்று விண்வெளியில் வலம் வர முடிந்தது. சந்திரனில் கால் பதிக்க முடிந்தது. செயற்கைக்கோள்களை பூமிக்கு மேலே நிலைநிறுத்தி 24 மணி நேரமும் தான் வசிக்கும் இப்புவியை கண்காணிக்கவும் முடிகிறது.

அறிவியல் புரட்சி மனித இனத்திற்கு மாபெரும் நன்மைகள் செய்தது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் பல்வேறு பாகுபாட்டின் காரணமாக மனித இனத்தை கொத்துக்கொத்தாக அழிப்பதற்கும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசப்பட்டு ஒரு சில நிமிடங்களில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று சேர்க்கவும் அறிவியல் வழிகோலியது. அறிவியல் என்பது கூரான கத்தியை போன்றது. அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது, அதுயார் கைகளில் உள்ளது என்பதை பொறுத்தது. அதைப்போலவே அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் எல்லா காலத்திலும் எல்லாத் தரப்பினராலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

அறிவியல் அறிஞர்கள் கொல்லப்பட்டனர். கல்லடி பட்டனர். சிறை சென்றனர் வாழ்ந்த காலத்தில் அறிவியலாளர்களும் அவர்களது கண்டுபிடிப்புகளும் நிராகரிக்கப்பட்டாலும் பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எந்த சமூகம் அவர்களை தாக்கியதோ அவையே பிற்காலத்தில் தூக்கிக் கொண்டாடியதை நாம் வரலாற்றில் காண்கிறோம். நாம் வாழும் பூமி தட்டையானது. சூரியன் உள்பட எல்லா கோள்களும் நமது பூமியை மையமாக வைத்து சுற்றி வருகின்றன என்று பல ஆண்டுகாலம் மக்கள் நம்பி வந்தனர். தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் உருண்டையானது, பூமி உள்பட எல்லாக் கோள்களும் சூரியனை மையமாக வைத்து சுற்றி வருகின்றன என்ற உண்மைகளை கூறும்போது, அதுகாறும் இருந்து வந்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்ட போது உலகம் அந்த கண்டுபிடிப்புகளை பாராட்டவில்லை. தண்டித்தது. ஆனால் பிற்காலத்தில் மீண்டும் மீண்டும் அந்த உண்மைகள் வெவ்வேறு கண்டுபிடிப்புகளின் வாயிலாக நிறுவப்பட்டபோது பழமைவாதங்கள் சாய்ந்தன. அறிவியல் கோலோச்சியது.

அறிவியலை அறிந்திருப்பது வேறு, அறிவியல் மனப்பான்மை என்பது வேறு. கற்ற அறிவினை அன்றாட வாழ்வினில் பயன்படுத்துவதே அறிவியல் மனப்பான்மையாகும். அதுஒன்றே மனித இனத்திற்குள் இடையே உள்ள வேறுபாடுகளை களைந்து ஒப்பற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். அறியாமையே மனித இனத்திற்கு ஏற்படும் எல்லா கேடுகளுக்கும் மூலகாரணம் என்று புத்தர் கூறினார். ஆகவே இந்நாளில் அறியாமை என்னும் இருளை விரட்டி அறிவெனும் தீபத்தை ஏற்றுவோம்.

No comments:

Popular Posts