தையல் போடும் முறையை உருவாக்கிய ஜோசப் லிஸ்டர்

மருத்துவத்துறையில் உடல் காயங்களுக்கு தையல் போடும் முறைகள் இன்று நவீனம் பெற்றுவிட்டன. ஆரம்ப காலத்தில் இந்த முறைக்கு வித்திட்டவர் ஜோசப் லிஸ்டர் என்னும் அறிஞர் ஆவார். இவர் இதைப்பற்றி கூறியபோது உலகத்தினரால் அவரது கருத்து புரிந்து கொள்ளப்படவில்லை. வழக்கம்போல நீண்டகாலம் கழிந்த பின்னரே அவரது கண்டுபிடிப்பின் தேவையை உலகம் உணரத் தொடங்கியது.

ஜோசப் லிஸ்டர், இங்கிலாந்தில் 1827-ம் ஆண்டு பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். அப்போது அறுவைச் சிகிச்சை துறையில் புகழுடன் விளங்கிய ராபர்ட் விஸ்டரிடம் பயிற்சி பெற்று வந்தார். பல புதிய கண்டுபிடிப்புகளை விரும்பும் குணம் அவருக்கு இருந்தது.

பட்டம் பெற்றதும் அவரும், அவருடைய நண்பர்களும் உலக அனுபவங்களை வளர்த்துக் கொள்ள திட்டமிட்டனர். அவர் புகழ் வாய்ந்த மருத்துவரான ஜேம்ஸ் சைம் என்பவரை சந்திக்க விரும்பினார். அவர் அறுவைச் சிகிச்சை செய்யும்போது, ஒரு சொட்டு ரத்தம் வீணாவதையோ, பயனில்லாமல் பேசுவதையோ விரும்பமாட்டார். எனவே அவரைக்காண நண்பர் ஒருவரிடம் இருந்து அறிமுக கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

இருவருக்கும் ஒத்துப்போகவே அவருடைய உதவியால் எடின்பரோ மருத்துவ கல்லூரியில் லிஸ்டர் விரிவுரையாளராக பணி செய்தார். அவரது மகளையே திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்திற்குப் பின்னர் தனது மருத்துவ பணியைத் தொடங்கினார். நோயாளிகள் பலர் மருத்துவமனையில் மடிந்தது அவருக்கு கவலையை ஏற்படுத்தியது. அறுவை நடந்த பாகத்தில் வீக்கம் ஏற்பட்டு சீழ் பிடித்து நோயாளிகள் மடிவதை அறிந்தார்.

சாதாரண எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் நலம் பெற்றுவிடும் நேரத்தில், சதையை கிழித்து கொண்டு வரும் எலும்பு முறிவுக்கு ஆளானவர்களே அறுவை சிகிச்சை செய்த பின்னரும் மடிகின்றார்கள் என்பதை தெரிந்துகொண்டார். சதைக்குள் முறிந்த எலும்புகளை சரிப்படுத்த சதையை தைத்து மருத்துவம் செய்து வந்தனர். ஆனால் அவர்களில் பலபேர் மடிவது அவருக்கு கவலையை ஏற்படுத்தியது. அதைப்பற்றி தீவிரமாக சிந்தனை செய்தார்.

பல குழப்பத்தில் இருந்த அவர் நண்பர்களது ஆலோசனையில் அறிவியல் மேதை லூயி பாஸ்டரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தார். திராட்சை ரசத்துடன் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கலப்பதினால் அது புளிப்படைகிறது என்ற புதிய கருத்து அந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருந்தது. அதைக் கவனித்த லிஸ்டர் காயம் சீழ் பிடித்து வடிதலுக்கும் நுண்ணுயிர்களே காரணமாக இருக்கும் என உணர்ந்தார். அதை ஆராய்ந்து உண்மை என்பதையும் அறிந்தார். அதனைப் போக்க என்னவழி என்று யோசித்தார்.

கார்பாலிக் அமிலம் என்ற பினாயில் பற்றிக் கேள்விப்பட்டார். அது கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களைக் கொல்லும் தன்மையுடையது என அறிந்தார். அதனை வாங்கி வந்து எலும்பு முறிந்து காயமுற்றிருந்த ஒரு நோயாளிக்கு தடவி மருத்துவம் செய்தார். ஆனால் அந்த நோயாளியும் மடிந்துவிடவே மனச்சோர்வடைந்தார்.

அவரிடம் வண்டி ஏறி படுகாயமடைந்த ஒரு சிறுவனைக் கொண்டு வந்தார்கள். அவர் கார்பாலிக் அமிலத்தைப் பயன்படுத்தி மருத்துவம் செய்தார். அந்தச் சிறுவன் பிழைத்துக்கொண்டான். அது அவருடைய முயற்சிக்கு நம்பிக்கையை தந்தது. எனவே அவர் கார்பாலிக் அமிலத்தைப் பயன்படுத்தி மருத்துவம் செய்யத் தொடங்கினார். கைக்கு கிடைக்கும் கார்பாலிக் அமிலம் மருத்துவத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதால் முழுநலம் தரக்கூடிய கார்பாலிக் அமிலக் கலவைக்காக பல ஆண்டுகள் ஆய்வு நடத்தினார். கார்பாலிக் அமிலம் நுண்ணுயிர்க் கொல்லி என்ற உண்மையை அவர், தன் முதல் கட்டுரையில் வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கு தகுதியான வரவேற்பு கிடைக்கவில்லை. அவருடைய புதுமையை புரிந்து கொள்ளும் அறிவு எவருக்குமில்லை.

எடின்பரோவில் அறுவையியல் துறை பேராசிரியராக பணியாற்றிய ஜேம்ஸ் சைம் ஓய்வு பெற்ற பின்னர் பலரும் கேட்டுக்கொண்டதின் விளைவாக லிஸ்டர் அந்த வேலையில் சேர்ந்தார். பகல் முழுவதும் நோயாளிகளுடன் மருத்துவமனையில் இருந்து அவர்களை அன்பாக கவனித்தார். உடல்நலத்தைவிட மனநலமே நோயாளிகளை விரைவில் குணமடைய வழி செய்யும் என நம்பினார்.

ரத்தக்கசிவை தடுக்கும் முறையில் தனது கவனத்தை செலுத்தினார். அதுவரையிலும் பட்டு நூல் அல்லது சணல் இழையே உடல்காயத்தின் தையலுக்குப் பயன்பட்டு வந்தன. அவைகள் உறுதி இல்லாமல் இருந்தன. மேலும் அவற்றின் முனைகள் காயத்திற்கு வெளியே தெரியும்படி விடப்பட்டு வந்தன. லிஸ்டர் அதனைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்தார்.

கங்காரு உட்பட பல விலங்குகளின் உரோமத்தை தையல் போடுவதற்காக உபயோகப்படுத்திப் பார்த்தார். அவைகள் எதுவுமே சரியாக அமையவில்லை என்பதை உணர்ந்த அவர் ஆழ்ந்த யோசனை செய்தார். அந்நேரம் பக்கத்து பண்ணைவீட்டில் ஆடுகள் கத்தும் ஓசை கேட்கவே அவர் மனதில் திடீரென ஓர் எண்ணம் உதயமானது.

ஆடுகளின் ரோம முடிகளைக் கொண்டு வந்து தையல் போட பயன்படுத்தினார். அதுவே உறுதியானது என முடிவு செய்தார். அவர் கண்டுபிடித்த அந்த ஆடுகளின் ரோம முடிகள்தான் மருத்துவ துறையில் அறுவைச்சிகிச்சையில் இன்று வரையிலும் காயம் ஏற்பட்ட இடங்களுக்கு தையல் போடப் பயன்படுத்தப்படுகிறது.

லிஸ்டரின் திறமையை அறிந்த பல நாடுகள் அவரை அழைத்தன. அமெரிக்காவும், ஐரோப்பாவும் அவரைப் போற்றி புகழ்ந்தன. ஆரம்பத்தில் அவரது திறமைக்கு அங்கீகாரம் தராத அவரது தாய்நாடான இங்கிலாந்தும், பின்னர் அவர் திறமையை ஏற்றுக்கொண்டது. அவருக்கு லண்டன் மாநகரில் உள்ள அரசு கல்லூரியில் அறுவையியல் பேராசிரியர் பதவியளித்து பெருமைப்படுத்தியது.

லிஸ்டர் நுண்ணுயிர் துறையிலும் ஆய்வு நடத்தினார். ரணத்தைக் கட்டும்போது ஏற்படும் கசிவை இழுத்துக்கொள்ளும் புதுவகைத் துணியைப் புகுத்தினார். மணிக்கட்டு அறுவைத் துறையில் புதுமுறையை அறிமுகப்படுத்தினார். வெண்கம்பி ஊசி, காதுவளை முளைக்கம்பி போன்ற புதுப்புதுக்கருவிகளை உருவாக்கினார். அறுவைத் துறையில் பினாயில் கலவையை கட்டாயமாக்கினார்.

உலகில் பல பகுதிகளில் இருந்து பட்டங்களும், பரிசுகளும் அவரைத் தேடி வந்தன. பிரபு என்ற பெரிய நிலைக்கு உயர்த்தப்பட்டார். மருத்துவத் துறையில் இத்தகைய சிறப்பு பெற்ற முதல் மனிதர் இவரே. 1912-ம் ஆண்டு இவர் இயற்கை எய்தினார்.

இவரது தொண்டும், பங்களிப்பும், செயல்பாடுகளும் மருத்துவ உலகில் மணி மகுடம் என்று கூறிடலாம். மாணவர்கள் மாணவியர் எல்லாம் இவரை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

Comments