Tuesday, 2 October 2018

நேர்மையின் இலக்கணம் லால்பகதூர் சாஸ்திரி

நேர்மையின் இலக்கணம் லால்பகதூர் சாஸ்திரி வெங்கையாநாயுடு, இந்திய துணை ஜனாதிபதி ந மது ஹீரோக்களையும், பெருந் தலைவர்களையும் அவர்களின் பிறந்த தினத்தன்று நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது நமது வழக்கமாக உள்ளது. அதோடு நின்று விடாமல், இந்த தேசத்துக்கு அவர்கள் செய்த நன்மைகள், அவர்களின் பங்களிப்புகள், அவர்களின் வாழ்வின் உண்மைகள் ஆகியவற்றை இளைய சமுதாயத்தினரும் தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டும். தேசத் தந்தை மகாத்மா காந்தியுடன் ஆண்டு தோறும் நினைவுகூரப் படும் தலைவராக லால் பகதூர் சாஸ்திரி திகழ்கிறார். லட்சக் கணக்கான இந்தியர்களைப் போல லால்பகதூர் சாஸ்திரியும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மகாத்மா காந்தியினால் உத்வேகம் பெற்று வளர் இளம் பருவத்திலேயே சுதந்திர போராட்டத்தில் குதித்தார். கொள்கையில் கொண்ட உறுதி, நேர்மையில் கொண்ட அசைக்க முடியாத தன்மை ஆகியவற்றினால் இந்தியாவின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். எளிமை மற்றும் அரசியல் தூய்மையின் மறுவடிவமாய் அவர் ஜொலித்தார். பொது வாழ்க்கையில் நேர்மை என்றால் என்ன என்பதை கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே லால்பகதூர் சாஸ்திரி காட்டியுள்ளார். அரியலூரில் ரெயில் விபத்து ஏற்பட்டு 140 பேர் இறந்த சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரை பாராட்டிப் பேசிய அப்போதய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்த விபத்துக்கு லால்பகதூர் சாஸ்திரி பொறுப்பானவர் இல்லை என்றாலும், அரசியல் சாசனத்தை பின்பற்றுவதில் இது ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தேச நன்மைக்காக லால்பகதூர் சாஸ்திரி மேற்கொண்ட செயல்பாடுகளை படித்து ஒவ்வொரு இந்திய இளைஞனும் ஊக்கம் பெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மூலம் லால்பகதூர் சாஸ்திரி மிக தைரியமான கொள்கை முடிவுகளை எடுத்தார். 7-ம் வகுப்பு படிக்கும்போதே சாதி வேறுபாட்டை கைவிட்டதோடு, இளம் வயதிலேயே பரந்த மனப்பான்மையுடன் செயல்படத் தொடங்கினார்.தேச ஒற்றுமை பற்றி 1964-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமராக அவர் முதலில் ஆற்றிய உரை, இன்றும் பொருந்தக் கூடிய ஒன்றாக உள்ளது. அவர் தனது உரையில், “நமது நாட்டில் இருந்து வேலையில்லா நிலையையும், வறுமையையும் ஒழிப்பதோடு, உள்நாட்டு விவகாரங்களில் பலமுள்ளவர்களாய் விளங்கினால் உலக அளவில் மதிப்பு, மரியாதையை நம்மால் பெற முடியும். எல்லாவற்றையும்விட தேச ஒற்றுமைதான் நமது தேவையாக உள்ளது. இன வாதம், மாநில வாரியான மற்றும் மொழி ரீதியான மோதல்கள் போன்றவை தேசத்தை பலவீனமாக்கிவிடும். எனவே நமது தேசத்தை பலப்படுத்துவதற்காக அனைவருமே தேச ஒற்றுமைக்காக பாடுபடுவதோடு, சமுதாய சீர்திருத்தங்களை வரவேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், “ஒரு தேசத்தின் வலிமையை, அது கொண்டுள்ள செல்வத்தினால் மட்டும் பெற்றுவிட முடியாது. காந்தி, நேரு, தாகூர் போன்றவர்களால் தேசம் பலப்படுகிறது. ஒவ்வொரு இந்தியனும் நல்லொழுக்கத்தை வளர்த்துக்கொள்வதோடு, தேச ஒற்றுமை, வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் இளம் பெண்ணும் இந்த வழியில் பணியாற்றினால், இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்பதில் சந்தேகம் இருக்காது” என்று பேசினார். 1965-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டபோது அவர் அளித்த ‘ஜெய் ஜாவான், ஜெய் கிசான்’ என்ற கோஷம், இன்றைக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கம் தருவதாகத் தொடர்கிறது. போரில் பாகிஸ்தானை வென்று தேசத்தின் மன உறுதியை வலுவடையச் செய்தார். பிரதமராக இருந்த நிலையில் லால்பகதூர் சாஸ்திரியை தூரதிருஷ்டவசமாக மரணம் தழுவியது. உணவு தானியத்தில் தன்னிறைவு குறித்து அவர் கொண்டிருந்த தொலைநோக்கு பார்வை, பசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் வித்திட்டது. உணவு தானியத்தில் நாம் இன்று தன்னிறைவு பெற்றிருக்கிறோம் என்றால், அதற்கான பாராட்டை அவருக்கே வழங்க வேண்டும். சுவாமி தயானந்த சரஸ்வதியின் 83-வது நினைவுதினமான 24.10.1965 அன்று டெல்லியில் உரையாற்றிய லால்பகதூர் சாஸ்திரி, “இந்தியா ஓய்வெடுக்கும் நிலையில் இல்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கக் கூடும் என்பதை சொல்ல கடினமாக உள்ளது. ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பாகிஸ்தான் தனது கொள்கையை கைவிடவில்லை. எனவே தேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கடமை தெளிவாகத் தெரிகிறது. அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் உணவு உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அதனால்தான் ஒரு விவசாயி ஒரு போர்வீரனுக்கு சமமானவன் என்ற அர்த்தம் விளங்கத்தக்க கோஷமான ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற கோஷத்தை குறிப்பிட்டேன்” என்று குறிப்பிட்டார்.பிற்காலத்தில் இந்திய விஞ்ஞானிகளின் சாதனையை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஜெய் விக்யான்’ என்ற கோஷத்தை அதோடு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இணைத்துக் கொண்டார். பாகிஸ்தானின் திடீர் ஆக்கிரமிப்புகளுக்கு தக்க பதிலடி தருவதில் லால்பகதூர் சாஸ்திரி மிக உறுதியாக இருந்தார். உணவு தானிய பற்றாக்குறை ஏற்பட்டபோது, இந்தியர் அனைவரும் வாரம் ஒரு மதிய உணவை கைவிடுவதற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு முன்பாக, தனது வீட்டில் அதை லால்பகதூர் சாஸ்திரி அமல்படுத்தினார். அவர் சொல்வதோடு நின்றுவிடாமல் செய்தும் காட்டியதால், அவரது வேண்டு கோள் தேசம் முழுவதும் பின்பற்றப்பட்டு நேர்மறையான விளைவுகள் ஏற்பட்டன.அவரது மனிதாபிமானத்தை ஒரு சம்பவம் மூலமாக விளக்க முடியும். உத்தரபிரதேசத்தின் போலீஸ் மற்றும் போக்குவரத்து மந்திரியாக இருந்தபோது, லத்தி அடிக்கு பதிலாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் முறையை லால்பகதூர் சாஸ்திரி கொண்டு வந்தார். பஸ்களில் பெண் நடத்துனர்களை பணிநியமனம் செய்த முதல் போக்குவரத்து மந்திரி இவர்தான். அவரிடம் காணப்பட்ட எளிமை, மனிதநேயம், மனிதப் பண்பு, சிக்கனம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தேசாபிமானம் ஆகியவற்றை ஒவ்வொரு இந்தியனும் பின்பற்ற வேண்டும் என்பது தான் இன்றைய தேவையாக உள்ளது. இன்று (அக்டோபர் 2-ந் தேதி) லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts