Wednesday, 10 October 2018

மரண தண்டனை ஒழிப்போம்...! மனித நேயம் காப்போம்...!

மரண தண்டனை ஒழிப்போம்...! மனித நேயம் காப்போம்...! வீ.குமரேசன், திராவிடர் கழகம் இ ன்று (அக்டோபர்10-ந்தேதி) மரண தண்டனை எதிர்ப்பு தினம். இந்தப் புவியில் தோன்றும் ஒவ்வொரு மனிதப் பிறப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்பட வேண்டும்; ஒவ்வொருவர் மனதிலும் அது உறுதிப்பட வேண்டும். மனித இனமானது நாகரிக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், குற்றச் செயல் புரிந்த நபருக்கு அளிக்கப்படும் மரண தண்டனை என்பது நியாயமான முடிவல்ல; குற்றம் புரிந்தவர் தனது செயல்களை உணர்ந்து, ஆக்க ரீதியாக செயல்படத் தூண்டும் வகையில் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கருத்து மனிதநேயர்கள் கோரிக்கையாக எழுந்து இன்று பொதுப்புத்தியாக பரிணாமம் அடைந்து வருகிறது. தனிநபர் செயல் குற்றம் எனக் கருதப்படுவது, எல்லா காலங்களிலும் ஒன்றாக இருந்ததில்லை. சமூகத்தின் மனப்பான்மை மாறும்பொழுது ஒரு காலத்தில் மனிதக் குற்றம் எனக் கருதப்பட்ட செயல், பின்னாளில் ‘மனித உரிமை’ என்று மாற்றம் பெற்றுள்ளன. மக்களைச் சிந்திக்கத் தூண்டிய சாக்ரடீஸ் இளைஞர்தம் உள்ளங்களைக் கெடுத்ததாக முடிவு செய்து அவர் விஷம் அருந்தி உயிர்விட வேண்டும் என்று மரண தண்டனை விதிக்கப்பட்டதை உலகு அறியும். அன்று மரண தண்டனை அளித்து தீர்ப்பு அளித்த கிரேக்க (மன்னர்) ஆட்சி ஏற்படுத்திய களங்கத்தினை இன்றைய கிரேக்கநாட்டு நீதிமன்றமானது விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெற்று கால வெள்ளத்தில் ஏற்பட்ட கறையினைத் துடைத்துக் கொண்டது. ஆனால் இழந்த சாக்ரடீஸ் உயிரை மீட்க முடியவில்லை. பூமியைச் சூரியன் சுற்றவில்லை; மாறாக பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது எனும் அறிவியல் உண்மையினை மதக் குறிப்புகளுக்கு எதிராகப் பரப்பியதாக அன்றைய போலந்து நாட்டு ஆட்சியாளரால் கொல்லப்பட்டவர் அறிவியல் அறிஞர் கோபர்நிகஸ். கொல்லப்பட்ட 600 ஆண்டுகள் கழிந்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் கோபர்நிகஸ் கொல்லப்பட்டதனால் ஏற்பட்ட களங்கத்தினை துடைத்திட, அவரை புதைத்த இடத்தில் எஞ்சி இருந்த அவரது உடல் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன. தண்டனைக் குற்றவாளியான கோபர்நிகஸ் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த போற்றுதலுடன் அரசு மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். அரசின் மீதான களங்கம் துடைக்கப்பட்டது. ஆனால் கோபர்நிகஸ் உயிரை அவரது கல்லறையிலிருந்து மீட்டு எடுக்க முடியவில்லை. சென்ற உயிர் சென்றதுதான்; செய்யப்படும் குற்றச் செயலுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் மரண தண்டனையால் ஆக்க ரீதியாக விளையப்போவது ஏதுமில்லை. குற்றம் செய்தவர் உயிர் போன பின்பு ஆகப் போவது ஒன்றுமில்லை. உயிர் வாழும் பிறர் அத்தகைய குற்றச் செயல்களைச் செய்யாமல் இருப்பதற்கு, வழங்கப்படும் ‘மரண தண்டனை’ சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என விவாதிக்கலாம். ஆனால் அறிவியல் ஆய்வுப்படி உயிரைக் கொல்லும் குற்றச் செயல் என்பது திட்டமிட்டு நடைபெறுவது மிகக் குறைவு. சரியான புரிதலின்றி, உணர்ச்சி வசப்பட்ட சூழலில் மனித உயிரைப் பறிப்பதுதான் மிக அதிகமான அளவில் நடக்கிறது. அப்படிக் குற்றம் புரிந்தவர்களை, அவர்தம் தவறை உணரச் செய்து மீண்டும் மனிதராக வாழச் செய்திடுவதுதான் உண்மையான நியாயமான சட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும். அதைவிடுத்து மரண தண்டனை என்பதை இன்னும் நடைமுறையில் சட்டவடிவிலான தீர்வாக வைத்திருப்பதானது, கைக்கு கை; கண்ணுக்குக் கண், எனும் காட்டுமிராண்டி கால நிலையிலேயே மானுடம் இருக்கிறது என்பதன் எச்சமாக, மானுட இழிவுகளின் மிச்சமாக தொடர்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என பரந்துபட்டு உலகளாவிய அளவில் எதிர்ப்புக் குரல் மனித உரிமைக்குரல் எழுந்துவரும் வேளையில், வாழும் வரை சிறை தண்டனை என்பதுவும் பரிசீலனைக்கு உரியதே. குற்றம் புரிந்தவர் வாழும் வரை அவருக்கு சிறை தண்டனை என்பது மரண தண்டனையினைவிட கொடுமையானது. மரண தண்டனையில், உயிர் ஒரு நொடியில் பிரிந்து முடிவு நிலை வந்துவிடும். வாழும் வரை சிறை தண்டனை என்பது உரியவர் செய்த குற்றத்தினைவிடக் கொடுமையானது. உயிர் வாழும் வரை சிறையில் அடைத்து வைப்பதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? மரண தண்டனை, வாழும் வரை சிறை தண்டனை என்பதால் குற்றம் செய்தவர் திருந்தி வாழும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சட்ட ரீதியான மறுப்பு மனிதநேயத்திற்கு புறம்பானது. மனித உரிமைக்கும் எதிரானது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்; அழுத்தமான தொனியில் உயிர் வாழும் வரை சிறை தண்டனை என்பதும் ரத்து செய்யப்பட வேண்டும். வாழ்நாள் சிறை தண்டனையில் தண்டனைக் காலம் சட்ட ரீதியாக வரையறுக்கப்பட வேண்டும். விலங்கின உயிர்களைப் பாதுகாத்துப் பேணிட விழையும் மனிதர்கள், மனித உயிர்களைப் போக்கிடும் மரண தண்டனையையும், மெதுவாக உயிரைப் போக்கிடும் வாழும்வரை சிறை தண்டனையையும் நீக்கிட வேண்டும். மகத்தான மனித உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். ஆக்கம் நிறைந்த கருத்துப் பரவல் அந்த தண்டனைகளை எதிர்த்து பெருகிட வேண்டும். வெறும் கருத்து அடிப்படையில் மட்டும் மரண தண்டனையையும் வாழும் வரை சிறை தண்டனையையும் பற்றிப் பேசிடும் நிலையிலிருந்து, தற்காலத்தில் அத்தகைய கருத்திற்கு ஆக்கம் கூட்டும் நடைமுறைகளுக்கு ஆதரவாக குரல் எழுந்திட வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது வாழ்நாள் சிறை தண்டனை என மரண தண்டனையை விட ‘அதிகப்படியான தண்டனை’ வழங்கப்பட்ட ஏழு நபர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையினை அவர்கள் அனுபவித்த நிலையிலும், ‘விடுதலை’ எனும் நிலை ஏற்படவில்லை. நாட்டின் உச்ச நீதிமன்றம் தண்டனைக் குறைப்பு குறித்து முடிவு எடுக்க ஆளுபவர்களுக்கு உரிமை இருக்கிறது என இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையிலும், முடிவு எடுப்பதில் தாமதம் காட்டுவது, உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளில் களையப்பட வேண்டும். காலச் சூழலுக்கு ஏற்ப கருத்தியல் நடைமுறையில் ஆக்கம் கூட்ட வேண்டியது ஆளுபவர்கள், ஆளுநர்கள் ஆற்ற வேண்டிய அவசிய, அவசரக் கடமையாகும். உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளில் ஆக்க ரீதியான சிந்தனைகள் வலுப்படட்டும்! மானுடம் மேம்பட மனித நேயம் தழைக்கட்டும்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts