Thursday, 6 September 2018

என்று தணியும் புதுவையின் மக்களாட்சி தாகம்?

என்று தணியும் புதுவையின் மக்களாட்சி தாகம்? டாக்டர் மு.ராமதாஸ், முன்னாள் எம்.பி. ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்று ஒலித்த மகாகவி பாரதியின் குரல் இன்றும் இந்தியாவின் ஓர் மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது வேறு எங்கும் இல்லை. மகாகவி வாழ்ந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்தான். இந்தியா சுந்திரம் அடைந்து, ஏழாண்டுகளுக்குப் பிறகு 1954-ம் ஆண்டு 138 ஆண்டுகால பிரெஞ்சு ஆட்சியில் இருந்து புதுச்சேரி விடுதலை பெற்றபோது அதனை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர் பிரெஞ்சுக்காரர்கள். அதைப் பெற்றுக் கொண்ட நவீன இந்தியாவின் சிற்பியும், முதல் பிரதமருமான பண்டிட் ஜவகர்லால் நேரு புதுச்சேரி “ பிரஞ்சுக் கலாசாரத்தின் ஜன்னல் “ என்றும் அதனை தன் செல்லக் குழந்தையாக தத்தெடுப்பதாகவும் கூறினார். எனவே புதுச்சேரியை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பிரதேசமாக, அதாவது, யூனியன் பிரதேசமாக 1963-ம் ஆண்டின் யூனியன் பிரதேச சட்டத்தின்படி அறிவித்தார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றமும் அமைச்சரவையும் இருந்தும், புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் ஆளுமைக்கும் நேரடிக் கண்காணிப்பிலும் நிர்வகிக்கப்படுகிறது. இந்த யூனியன் பிரதேச அமைப்பு மக்களாட்சிக்கு மாறுபட்டது, மக்களின் சுதந்திர உரிமைகளுக்கு எதிரானது, ஒரு மக்களாட்சியில், மக்களுக்கான அரசு, மக்களால் ஆன அரசு, மக்களே அரசு என்ற தத்துவம் நிலவுகிறது. மக்கள் அனைவரும் தங்களை நிர்வகிக்க முடியாது என்பதால், தங்களது பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் ஒன்றை நிறுவுகிறார்கள். ஒரு மக்களாட்சியில், மக்களின் விருப்பப்படி இயங்கும் சட்டமன்றம்தான் மிகப் பெரிய தூண். எங்கெல்லாம் அனைத்து அதிகாரமும் படைத்த சட்டமன்றம் இயங்குகின்றதோ, அவை எல்லாம் முழுத் தகுதி பெற்ற மாநிலங்களாக அமைகின்றன தமிழகம், கேரளா, போன்றவை. கட்டுப்பாட்டிற்குட்பட்ட, வரையரைக்குப்பட்ட, மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியாத சட்டமன்றங்கள் உள்ள பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக உள்ளன. இங்கே முழுமையற்ற, பற்றாக்குறை அல்லது குறைவு பெற்ற மக்களாட்சிதான் நடைபெறுகிறது. இந்த யூனியன் பிரதேசத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் தனது பிரதிநிதியான துணைநிலை ஆளுநர் மூலமாக ஆள்கிறார், துணைநிலை ஆளுநர் கட்டுப்பாடற்றச் சுதந்திரத்துடன், சட்டமன்ற, நிதித்துறை, சட்டம் மற்றும் நிர்வாக அதிகாரங்களை புதுவை மக்கள் மீது செலுத்துகிறார். இவருக்கு மேலாக இந்தியக் குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை, நிதி அமைச்சகம் ஆகியோர் துணைநிலை ஆளுநருக்குத் தேவையான வழிகாட்டுதலை அளிக்கின்றனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றம், முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மக்களை ஆள்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்யலாம், அவற்றை ஏற்றுக் கொள்ளுவதும் நிராகரிப்பதும் துணை நிலை ஆளுநரின் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத துணைநிலை ஆளுநர் மற்றும் உள்துறை அதிகாரிகள் புதுச்சேரி மக்களை ஆள்வதற்கான அதிகாரம் பெற்றவர்கள். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிர்வாகத்தை எடுத்துச் செல்வதற்கான அதிகாரங்களைப் பெற்றிருக்காமல் வெறும் பார்வையாளர்களாக மட்டுமாகவே இருக்கின்றனர். தினசரி நிர்வாக நடவடிக்கைகளில் கூட கோப்புகளை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றபின்னரே அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க முடியும், அதாவது அனைத்து நடவடிக்கைகளிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உண்டு. அப்படி என்றால் இங்கே எதற்கு ஒரு சட்டமன்றம் ? இதனை மக்களாட்சி என்று எப்படி ஏற்றுக் கொள்வது? இப்பிரதேச சட்டமன்றம் சட்டமியற்ற அதிகாரம் பெற்றிருந்தாலும், மசோதா நிலையிலேயே அச்சட்டத்தை, மத்திய அரசுக்கு அனுப்பி அதன் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அம் மசோதாவைச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும். எனவே சட்டமன்றத்திற்கு மக்கள் நலன் கருதி சட்டம் இயற்றுவதற்குக் கூட எல்லா கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது, புதுவையின் ஆண்டு வரவு செலவு அறிக்கை கூட மத்திய நிதித்துறையும், உள்துறையும் ஏற்பு செய்த பின்னரே சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும், ஏறக்குறைய மத்திய அரசின் சட்டங்கள் தான் புதுவையை ஆள்கிறது சுருங்கக் கூறின், இந்த யூனியன் பிரதேசம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு தனித்துறையாகவே செயல்படுகிறது புதுச்சேரிக்கு பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 1 நிதிக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் கிடைக்க வேண்டிய நிதி 2. திட்டக் கமிஷனிடமிருந்து கிடைக்கும் நிதி 3.இந்திய அரசின் பல்வேறு அமைச்சகத்திடமிருந்து கிடைக்கும் மானியங்கள் 4. இந்திய அரசு திரட்டும் வெளிக்கடன்களிலிருந்து கிடைக்கும் பங்கு மறுக்கப்பட்டு இதனால் புதுச்சேரி பல சமயங்களில் நிதி இழப்பை சந்தித்திருக்கிறது. யூனியன் பிரதேச அரசுக்கு தேர்வாணையம், உயர்நீதிமன்றம், வழக்குரை தலைவர் இல்லை, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை புதுச்சேரி பின்பற்றவேண்டியுள்ளதால், இங்கே சமூக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல திட்டங்கள் செயல்படுத்த வேண்டியுள்ளதால் அவை புதுச்சேரி நிலைமைக்கு ஒவ்வாமல் பயனற்றதாக உள்ளது, அதிகாரிகள் ஈடுபாடு இல்லாமல் பணி செய்கின்றனர். எனவே எந்த நிலையில் பார்த்தாலும், மக்களாட்சிக்கும் யூனியன் பிரதேச நிலைக்கும் ஒரு பொருத்தமே கிடையாது. மிகக்குறிப்பாக, மாநில சுயாட்சிகோரும் தருவாயில், ஒரு மூலையில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அடிப்படை உரிமை இல்லை என்பது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும், யூனியன் பிரதேச அமைப்பால் எந்த நன்மையும் புதுச்சேரிக்குக் கிடைக்க வில்லை என்று கூற முடியாது, ஆரம்ப காலத்தில், புதுச்சேரி குழந்தைப் பருவத்தில் இருந்த போது அதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து, புதுச்சேரி விரைவான முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றது யூனியன் பிரதேச அந்தஸ்துதான், நிதி என்பது ஒரு பிரச்சினையாக அப்போது இருந்ததே இல்லை, ஆனால் மக்களின் உரிமைகள் மற்றும் மக்களாட்சியின் மகத்துவம் பணத்தால் முடிவு செய்யப்படுவதில்லை, மற்ற மாநிலங்கள் கூட நிதியைப் பெறுகின்றன. அம்மாநில மக்கள் அனைத்து உரிமைகளையும் பெறுகின்றனர். இதுதான் புதுவையின் இன்றைய பிரச்சினை. தத்துவ ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும் மற்ற மாநிலங்களில் உள்ளது போல உரிமைகள் கிடைக்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி மத்திய அரசு புதுவைக்கு மாநில தகுதி அளித்து அதன் மூலம் மக்களாட்சியை நிலைபெறச் செய்வது தான். இந்தக் கோரிக்கை 1987-ல் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. புதுச்சேரி சட்டமன்றம் இதுவரை 12 தீர்மானங்களை நிறைவேற்றி மக்களாட்சி மலர வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, தற்போது புதுச்சேரியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் முதல்-அமைச்சர், துணை நிலை ஆளுநருக்கிடையே தொடரும் வெளிப்படையான அதிகாரப்போர் புதுச்சேரியில் மக்களாட்சி எப்போது மலரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் மக்களாட்சியின் தாகம் என்று தணியும் என்று தெரியவில்லை.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts