Monday 17 September 2018

சமூகப் புரட்சியாளர் பெரியார்

சமூகப் புரட்சியாளர் பெரியார் பெரியார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் பெரியார் சிறந்த சிந்தனையாளராக, சமூகப்புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். ஐ.நா.சபையின் உறுப்பாகிய யுனெஸ்கோ நிறுவனம் ‘புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் பிரதிவாதங்களால் ஆராய்ந்துபார்த்துத் தன் அறிவுக்குச் சரியென்று பட்டதையே ஏற்றுக் கொள்ளும் அறிவு முதிர்ச்சி பிஞ்சுப் பிராயத்திலேயே பெரியாருக்கு வாய்த்திருந்தது. அவர் பள்ளிக்குச் செல்லும்வழியில் கடைவைத்திருந்த ஒரு கடைக்காரர் ‘எது நடந்தாலும் எல்லாம் தலைவிதிப்படியே நடக்கிறது’ என ஓயாமல் சொல்வதைப் பிள்ளை வயதிலிருந்த ராமசாமி ஏற்றுக்கொள்ள மறுத்துக் கடைக்காரரிடம் வாதங்கள் புரிந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடைக்காரர் ‘எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்’ என்றாராம். சுட்டிப்பிள்ளையாய் இருந்த ராமசாமி அந்தக் கடையில் சாத்திவைத்திருந்த தட்டியைக் கீழே தட்டிவிட்டு ‘அப்படியானால் இதுவும் விதிப்படி தான் நடந்தது’ என்று கூறிவிட்டு ஓடிவிட்டாராம். கடைக்காரர் விதியை நோவாரா? ராமசாமியைத் திட்டுவாரா? அவரது சேட்டைகளைப் பொறுக்கமாட்டாமல் அவரது தந்தையார் வெங்கடப்பர் கடையில் அமர்ந்து வணிகம் பார்க்குமாறு கூறிவிட்டார். தமது பொதுவாழ்வின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அப்போது அவர் நிகழ்த்திய கள்ளுக்கடை மறியல், பங்கு பெற்றுப் போராடிய வைக்கம் போராட்டம் ஆகியன வரலாற்றுப் புகழ்மிக்கவை. காங்கிரசில் இருந்து விலகித் தனியே சமூக நீதியை நிலைநாட்ட 1925-ம் ஆண்டு இறுதியில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற கொள்கையை அடிநாதமாக்கினார். 1928-ல் வகுப்புவாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார். அதன்படி, அரசு ஆணை அன்றிருந்த சமூகநீதி அரசால் நடை முறைப்படுத்தப்பட்டது. ‘1950-ல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை சமத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்சாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச்சியை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951-ல் நிறைவேற்றினர். அதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டது. பெரியாரின் பேருழைப்பினால் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பினர் அரசியலிலும் அரசுப் பணிகளிலும் பெற்ற எழுச்சி இந்தியா எங்கும் பரவியது. ஆட்டோ ஓட்டும் தொழிலாளி மகன் பொறியாளர் ஆவதும் கல்லுடைக்கும் தொழிலாளி மகள் கலெக்டர் ஆவதும் பெரியார் விதைத்த சமூகப் புரட்சியின் விளைவேயாகும். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் முழங்கி, பெண்கள் தம் அடிமைத்தளையை உடைத்தெறிந்து எல்லா நிலைகளிலும் ஆணுக்குச் சமமாக முன்னேற வேண்டும் என அறிவுறுத்திய முன்னோடித் தலைவர் பெரியாரே. அவருடைய ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்னும் நூல் பெண்ணுரிமை இயக்கத்தின் வழிகாட்டியாய் விளங்குகிறது. தமது வாழ்க்கையிலும் துணைவியார் நாகம்மையார், அவருக்குப் பின் துணைவியாய் அமைந்த மணியம்மையார், தங்கை கண்ணம்மை எனத் தம் இல்லப்பெண்களுக்கும் தலைமையும் முதன்மையும் வழங்கிப் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு முன்மாதிரியாய் விளங்கியவர் பெரியார். அவருக்குப் பின்னர் மணியம்மையார் திராவிடர் கழகத்தைப் பல சோதனைகளைக் கடந்து திறமையாக நிலைநிறுத்தியது பெரியார் கொடுத்த பயிற்சியாலேயே எனலாம். அக்காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கூறும் மரியாதைச் சொல் அவர்களுடைய சமயப் பிரிவால் வேறுபட்டிருந்தன. பெரியார் வணக்கம் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் வணக்கம் என்று கூறினால் நீங்கள் சுயமரியாதைக்காரரா என்று கேட்பார்கள். காலப்போக்கில் வணக்கமே செல்வாக்குப் பெற்றது. வணக்கம் என்னும் ஒற்றைச்சொல் சமயம், சாதிப் பிரிவுகளைச் சுக்குநூறாக்கியது. எனவே தமிழின் பயன்பாடு சுயமரியாதையைக் காத்து மனிதர்களை ஒன்றுபடுத்தும் வல்லமை வாய்ந்தது என்பதைப் பெரியார் நிறுவிக்காட்டினார். பெரியாரின் இயக்கம் கல்லூரி மாணவர்களை, படித்தவர்களை, கலைஞர்களை, சமூகப் பொறுப்பில் உள்ள பலரைத் தன்பால் ஈர்த்தது. இவர்களுள் அறிஞர் அண்ணாவும் கலைஞர் மு.கருணாநிதியும் திரைப்பட உரையாடலால் மக்கள் கவனத்தைக் கவர்ந்தனர். பொருந்தாக் கற்பனை மிகுந்த புராணப்படங்கள் மறைந்தன. சமூக ஏற்றத்தாழ்வுகளை எண்ணிப் பார்த்துச் சமநீதியும் சமூகநீதியும் மேலோங்குதற்குரிய கருத்துகளைப் பரப்பும் திரைப்படங்கள் வெளிவந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டின. பல நடிகர்கள் பெரியாரின் முற்போக்குக்கொள்கைகளை மக்கள் மன்றத்தில் பரப்பினர். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. கலைவாணர் என்.எஸ்.கே. புரட்சி வாய்ந்த கருத்துகளை மக்களிடையே தம் நாடகங்கள் மூலமும் திரைப்படம் வாயிலாகவும் பரப்பிவந்ததனைப் பெரியார் பாரட்டினார். ‘கொள்கை வேறு; நட்பு வேறு’ என்பது பெரியாருடைய வாழ்வியல் நெறி. அவ்வை டி.கே.சண்முகம் பெரியாரைக் காண வரும்போது அவருடைய நெற்றியில் வழக்கமாகக் காணப்படும் திருநீறு காணப்படவில்லை. ‘என்ன சண்முகம்? என்ன ஆயிற்று? நெற்றி வெறுமனே இருக்கிறதே?’ எனப் பெரியார் கேட்டாராம். ‘இல்லை ஐயா. கருஞ்சட்டைக்காரர்கள் நிறைய வலம்வரும் இந்த இடத்தில் நான் நெற்றி நிறைய நீறு பூசிவந்து உங்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை’ என்றாராம் அவ்வை டி.கே.சண்முகம். ‘கொள்கை வேறு; நட்பு வேறு; நன்றாக நீறு பூசி வாருங்கள். எனக்காக நீங்கள் உங்கள் பழகத்தை விட்டுவருவதுதான் எனக்குச் சங்கடமாயிருக்கிறது’ என்றார். இப்படிப் பெருந்தன்மையின் இலக்கணமாகத் திகழ்ந்த பெரியாரின் மாண்புமிக்க மனிதநேயம் நம் அனைவருக்கும் வழிகாட்டியாய் விளங்குகிறது. அறியாமையிலும் அடிமைத்தனத்திலும் மூழ்கியிருந்த தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து எழுச்சி கொள்ளச் செய்ததில் பெரியாரின் பேருழைப்பு பெரும்பங்களித்துள்ளது. நுழைவுத்தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் கிராமத்து மாணவர்கள் தம் கல்விவாய்ப்பை இழந்துவிடுவார்கள் என எச்சரித்துத் தமது காலத்தில் அறிமுகமாக இருந்த நுழைவுத்தேர்வு முறையைத் தவிர்த்தவர் பெரியார். அவர் வழியில் மத்திய அரசும், மாநில அரசும் நீட் முதலான நுழைவுத்தேர்வுமுறைகளை ஒழித்துக் கட்டி சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்வோரும் கல்விவாய்ப்புப் பெற உழைக்கவேண்டும். இத்தகைய ஆக்கவழிகளில் நாம் முனைந்து செயல்புரியத் தொடங்கினால அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். இன்று (செப்டம்பர் 17-ந் தேதி) பெரியார் பிறந்த தினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts