Friday, 17 August 2018

கணிதப்பாடம் கடினப்பாடமா?

கணிதப்பாடம் கடினப்பாடமா? எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி நம்மில் பலருக்கும் கணிதம் என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கும் நிலையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. கணிதம் என்பது பிறவி ஞானம் இருப்பவர்களுக்குத் மட்டும் தான் வசப்படும் மற்றவர்களுக்கு அது எட்டாக்கனியா என்றால் நிச்சயமாக இல்லை. நம்மால் இது முடியுமா? என்று வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கும்.அனால் அதையே பழகிக் கொள்ளும் போது,அதில் உள்ள நுட்பங்களை கற்றுத் தேறும் போது அச்செயல் எளிதாகிவிடும்.கணிதத்திற்கும் இது பொருந்தும்.மனோதிடமும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் கணிதத்தை வெற்றிக் கொள்வது மிகச் சுலபமாகிவிடும்.ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் தான் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.மற்ற எல்லாப் பாடங்களையும் விட கணிதமே கடினமானது என்று உருவாக்கப்பட்ட பிம்பமே இதற்கு காரணமாகும்.உண்மையிலேயே மாணவர்கள் கணிதப் பாடத்தை வெறுப்பதில்லை.புரியாமல் ஏற்படும் பயமும் குழப்பமுமே வெறுப்புக்கும் அவநம்பிக்கைக்கும் உள்ளாக்குகிறது.சரியாக அறிந்து கொள்வதால் ஆர்வமும் அதன் பயனாக ஆற்றலும் வெளிப்படும். நல்ல அறிவாளி மட்டுமே நன்றாக கணக்குப் போட முடியும் என்பது நம்மிடையே இருந்து வரும் மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும்.நன்றாக கணக்குப் பயிற்சி செய்வதால் நமது வலது மூளைத் தூண்டப்பட்டு சிந்திக்கும் திறன் மேம்படுகிறது.ஜப்பானியர்களின் சோடோக்கு புதிர் கணக்குகளை தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் மந்த நிலை மாறி நாளடைவில் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் மாறுவதை நாம் உணர முடியும். சிறுவயதிலேயே கணக்கின் அடிப்படைகளான கூட்டல்,கழித்தல்,வகுத்தல்,பெருக்கல் ஆகியவற்றை நடைமுறை விஷயங்களின் மூலம் மனக்கணக்காக போடும் பயிற்சியை பெற்றோர் அளித்து வர வேண்டும்.கடைகளில் சரியாக சில்லறை வாங்குவது,மொத்த விலையில் இருந்து ஒரு பொருளின் விலையை கணக்கிடச் செய்வது, அவர்களின் சேமிப்புத் தொகையை அவ்வப்போது எண்ணச் சொல்வது என்று அவர்களுடைய மூளைக்கு வேலைக் கொடுத்து வரவேண்டும்.வாய்ப்பாடுகளை எளிய முறையில் கற்க தரையில் கட்டங்கள் வரைந்து குதிக்கச் செய்தோ அல்லது பொருட்களை பிரித்து அடுக்கிக் காண்பித்தோ கற்றுக் கொடுக்கலாம்.மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் இது போன்ற செயல்முறை விளக்கங்கள் மூலம் அவர்களுக்கு இயல்பாகவே கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்படும்.பெற்றோர் இவ் விஷயத்தில் கொஞ்சம் சிரத்தை எடுத்து வந்தால் பிள்ளைகளுக்கு கணிதத்தின் மீதான அச்சம் குறையும். ஒரு கட்டிடம் கட்ட அடித்தளம் பலமானதாகவும் உறுதியானதாகவும் அமைவது அவசியம்.அதே போல கணிதத்தின் அடிப்படை விதிகளையும், சூத்திரங்களையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டால் உயர்கல்வி வகுப்புகளில் தடுமாற வேண்டி இருக்காது.அல்ஜீப்ரா,கால்குலஸ் போன்ற கணிதப்பிரிவுகள் சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தேற்றங்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கும். இந்த முக்கிய விதிகளை சரியாக கவனிக்கவோ, கற்கவோ தவறவிட்டு கணக்கைப் போட முயற்சித்தால் ஒன்றுமே புரியாமல் குழப்பத்தில் ஆழ்த்தி விடும். கணித வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது மிகுந்த சிரத்தையுடன் கவனச் சிதைவின்றி இருத்தல் அவசியம்.சந்தேகம் இருப்பின் அவ்வப்போது நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.பள்ளியில் நடத்தப்படும் முறை புரியவில்லை எனில் எளிமையாக சொல்லித் தரக்கூடிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். ‘பாடப் பாட ராகம்’ என்பது போல போட போடத் தான் கணக்கு சுலபமாகும்.வாயால் படிப்பதோ, மனதிற்குள் படிக்க முயற்சி செய்வதோ கணிதப் பாடத்தை பொறுத்தவரை ஒத்துவராது.அன்றாடம் பள்ளியில் நடத்தப்படும் பாடத்தை அன்றே போட்டுப் பார்த்து விடுவது நல்லது. மாணவர்கள் ஒரே மாதிரியாக படிக்காமல் சில மாற்று முறைகளை கையாளலாம்.குழுக்கள் அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித் தனி பகுதிகளாக பிரித்துக் கொடுத்து தங்களுக்குள்ளேயே பாடம் நடத்துவது போல் செய்தால் சுவாரசியம் அதிகரிக்கும். கணிதத் தேர்வில் பெரும்பாலும் நிகழ்பவை கவனக்குறைவான தவறுகள் தான். ஒவ்வொரு கணக்கையும் முடித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சரிபார்த்தால் இந்த பிரச்சினையை போக்கலாம்.அடிப்படைகளை கற்றல்,வழிமுறைகளை சரியாக புரிந்துகொள்ளுதல்,பயிற்சி செய்தல்,கவனக்குறை தவறுகளை சரி செய்தல் இதுவே கணக்கு கற்றலின் சூட்சமம்.இதனை அறிந்தால் கணக்கு கண்கட்டிவித்தையாக தோன்றாது. உயர்நிலை வகுப்பு மாணவர்கள் ‘ப்ளூ பிரிண்ட்‘ படி அதாவது ஒரு பாடத்திற்கு இத்தனை வினாக்கள் தான் கேட்கப்படும் என்ற அட்டவணைத் திட்டத்தின் படி படித்தால் தேர்வில் தோற்காமல் தப்பிக்க முடியும். இம்முறை நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கும் வழிவகுக்கும். இன்றைய தொழில்நுட்பக் கருவிகளும் , செயற்கைகோள்களும், ரோபோக்களும் செயலாற்றுவதை கண்டு நாம் பிரமித்துப் போகிறோம்.ஆனால் அவற்றை உருவாக்கும் பொறி மனித மூளையில் இருந்தே உருவாகிறது. எனவே மாணவச் செல்வங்களே, நமது மூளையின் மகத்தான சக்தியால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts