Thursday, 9 August 2018

அசாமில் குடியிருப்போர் விவகாரம்: குழப்பம் தீருமா?

அசாமில் குடியிருப்போர் விவகாரம்: குழப்பம் தீருமா? டாக்டர் எச்.வி.ஹண்டே, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் (தமிழகம்) கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில், ஒரு மாபெரும் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. இதற்கு மூல காரணம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அசாம் மாநில அளவில், அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் குடியிருப்பதற்குரிய மக்களின் பட்டியலை, ஜூலை 30-ந்தேதி வெளியிட்டதுதான். இந்த பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு தான் இந்திய குடிஉரிமை வழங்கப்படும். இவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 83 ஆயிரத்து 677 ஆகும். இந்த குடியுரிமைக்காக மனு போட்டவர்களில், 40 லட்சம் மக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவர்களையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின் றன. பா.ஜனதாவை கண்டித்து இரு அவைகளிலும் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்துகிறார்கள். இந்த அசாம் மாநில பிரச்சினை எப்படி உருவானது? இதன் பின்னணி என்ன? என்பதை தெரிந்துகொள்வது அவசியம். இந்தியா இரண்டாக துண்டிக்கப்பட்டு, நமக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்காளதேசம்) பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் அசாம் மாநிலத்துக்குள் அடைக்கலம் புகுந்தனர். இது சம்பந்தமாக 10-8-1949 அன்று அம்பேத்கர், அரசியல் சாசன சபையில், சரத்து 6-ஐ அறிமுகப்படுத்தினார். இந்த விவாதத்தில் கலந்து கொண்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த அன்றைய காங்கிரஸ் உறுப்பினர், ஆர்.கே.சவுதரி, மிகவும் வேதனையுடன் பேசத் தொடங்கினார். அப்போது, ‘நாம் சுதந்திரத்தை பெற்று இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்பாகவே, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து ஏறத்தாழ 10 லட்சம் முஸ்லிம்கள் அசாம் மாநிலத்துக்குள் வந்து இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஏராளமான இந்துக்களும் விரட்டி அனுப்பப்படுகிறார்கள்’ என தன்னுடைய மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார். இந்த விவாதத்திற்கு பிறகு, அன்றைய பிரதமர் நேரு யோசனையின் பேரில், 1950-ம் ஆண்டு அசாம் மாநிலத்திற்காக தனியாக ஒரு சட்டம் தீட்டப்பட்டது. அதன்படி கிழக்கு பாகிஸ்தானில் இருந்து, அசாம் மாநிலத்துக்குள் யாரையும் வரவிடாமல் தடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பிறகும், அங்குஇருந்து அசாம் மாநிலத்துக்குள் ஏராளமான அகதிகள் வருவது தொடர் கதையாகிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, ஒரு மாபெரும் மாணவர்கள் இயக்கம் தோன்றி, 855 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தில் உதித்ததுதான், ‘அசாம் கன பரிஷத்’. இதன் தலைவர் பிரபுல்லா பொகந்தர், அசாம் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். பிறகு, அசாம் மாநில மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, 14-8-1985 அன்று மத்திய அரசாங்கத்தின் சார்பாக அசாம் மாநில மாணவர் பேரியக்கத்துடன் ‘அசாம் அக்காடு’ என்று அழைக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தத்தின்படி, 1971-ம் ஆண்டுக்கு பிறகு குடியேறியவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் வங்காளதேச நாட்டில் இருந்து அசாம் மாநிலத்துக்குள் ஊடுருவுகின்ற தொடர்கதை ஆரம்பித்தது. 2005-ம் ஆண்டு (மத்திய, மாநில அரசுகள் காங்கிரஸ் வசம் இருந்த தருணத்தில்), வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதனை விரைவுப்படுத்த வேண்டும் என்று, அசாம் மாநிலத்தில் குடியிருப்பவர்களை தேசிய குடியிருப்போர்களின் பதிவேடு மூலமாக கணக்கெடுப்பு நடத்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைப்பெற்ற மாநில பொது தேர்தலில், பா.ஜனதா கட்சியை சேர்ந்த சர்பானந்தா சோனோவால், அசாம் மாநில முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இந்த கால கட்டத்தில்தான், சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் தலையிட்டு அசாம் மாநிலத்தின், மக்கள் தொகையில் எத்தனை பேர் உள்நாட்டுக்காரர்கள், எத்தனை பேர் வெளிநாட்டுக்காரர்கள்? என விரிவான கணக்கெடுப்பு தேவை என்றது. அதுமட்டுமின்றி தன்னுடைய நேர்பார்வையில், அதற்காக அதிகாரிகளை நியமித்து, 30-7-2018 அன்று, எல்லா விவரங்களையும் வெளியிட்டது. அதன்படி 40 லட்சம் மக்கள் குடியுரிமைக்கு அப்பாற்பட்டவர்கள் என தீர்மானிக்கப்பட்டது. இதில் அசாம் முதல்-மந்திரிக்கோ, பா.ஜனதா கட்சிக்கோ எந்த தொடர்புமில்லை. 69 ஆண்டுகளுக்கு முன்பு, அரசியல் சாசன சபையில் தன்னுடைய கவலையை வெளிப்படையாக பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.கே.சவுதரி, நாட்டைப்பற்றி சிந்தித்த ஒரு மாபெரும் காங்கிரஸ் தியாகி. அவர் வெளியிட்ட எச்சரிக்கையை அன்றே, நாம் கவனத்தில் கொண்டு, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து யாரையும் வரவிடாமல், நம்முடைய எல்லையை பலப்படுத்தியிருந்தால், இன்று நமக்கு அந்நிய நாட்டில் இருந்து அகதிகளின் ஊடுருவல் பிரச்சினை இருந்திருக்காது. இன்றைக்கு நாம் இக்கட்டான நிலையில் உள்ளோம். இனியும் தாமதித்தால் அசாம் மாநிலத்தில் வெளிநாட்டுக்காரர்களின் ஆதிக் கம் ஓங்கிவிடும். இதனை தடுப்பதற்காகதான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதை நடைமுறைப்படுத்த வேண்டியது நாட்டுப்பற்றுள்ள அரசின் கடமை. அசாம் விவகாரத்தில் எல்லா கட்சிகளும் ஒன்றுபடவேண்டும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே’ என்று அன்றே பாரதியார் பாடிவிட்டு சென்றார். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வாக்கு வங்கியை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதை தவிர்த்து, வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு ஆபத்து வராமல், நாட்டையும், நாட்டின் எல்லையையும் பாதுகாப்பதில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts