Monday 2 July 2018

அறிவியல் வளர்ச்சிப் பாதை தானா?

அறிவியல் வளர்ச்சிப் பாதை தானா? முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., கூடுதல் டி.ஜி.பி. (ரெயில்வே) இது அறிவியல் யுகம். அனைத்தும் கணினி மயம். இருந்தும் இது வளர்ச்சிப் பாதைதானா? என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கிறது. பழமையை மட்டும் பேசிப் பழகிய நாம் புதுமை என்றால் ஒரு சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறோம். புதியது எதுவானாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையில் நாம் இருக்கிறோம். அதிநவீன அறிவியல் பொருட்களை நுகர்ந்து கொண்டே, பழமையை நேர்மையின்றி உயர்த்திப்பிடிக்கிறோம். பாமர மக்களை தவறாக வழிகாட்டும் வேலையையும் படித்த நாம் செய்கிறோம். மின்சார விளக்கு, தொலைக்காட்சி, குளிரூட்டும் சாதனம் என்று வீடுகளில் எல்லாம் அறிவியல் மயம். மின்சார மோட்டார், வீரிய நெல் பயிர், டிராக்டர் என தோட்டத்தில் அறிவியல் மயம். வங்கிக்கு போகாமலே பணப் பரிமாற்றம் கைபேசியில் செய்து கொள்கிறோம். அறிவியல் வளர்ந்ததால் ஏற்பட்ட நன்மைகள் இவை மட்டும் அல்ல. அம்மை நோய், காலரா நோய், இளம்பிள்ளை வாதம் போன்ற கொடிய நோய்கள் வருவதற்கு முன்னதாகவே தடுப்பூசி முறையில் தடுத்து விட்டது விஞ்ஞானம். 1901-ம் ஆண்டு இந்தியர்களின் சராசரி வயது 21 மட்டும் தான். 1950-ம் ஆண்டில் கூட இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் வெறும் 31 ஆண்டுகள் தான். ஆக, முன்னோர்கள் நீடோடி வாழவில்லை என்பதற்குத்தான் ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. நவீன ஆங்கில மருந்துகள் வந்த பின்னர்தான் உடல் நலம் மேம்பட்டு, இன்று சராசரியாக 67 ஆண்டுகள் வாழ்கிறோம். ஆங்கில மருத்துவ முறை மட்டும்தான் ஆதாரங்களின் அடிப்படையிலும், ஆராய்ச்சியின் அடிப்படையிலும் உருவான உண்மையான மருத்துவமுறை. ஆக, அறிவியல் நம்மை வாழ விட்டிருக்கிறது; அதோடு வாழ வைக்கிறது எனலாம். மோட்டார், ரெயில் மற்றும் விமான பயணத்தால் வந்த வளர்ச்சி அளவிற்கடங்காதது. ரெயிலும், விமானமும், கைப்பேசியும் உலகில் வாழும் மக்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள வழிவகை செய்தன. இன்றுகூட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இளைஞன் அணியும் ஜீன்ஸ் பேண்ட்டை திருப்பூர் இளைஞன் அடுத்த நாளே அணிந்துவிடுகிறான். திருப்பூர் இளைஞன் தயாரித்த டீ-ஷர்ட்டை ஜெர்மனி நாட்டு இளைஞன் அணிகிறான். ஆக பல கலாசாரங்கள் சங்கமித்து புது கலாசாரம் ஒன்று உருவாகிவிட்டது. இது உலக ஒற்றுமையின் அடையாளம் அல்லவா? விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அறியாமை இருளை நீக்கியது. அனைத்து உயிரினங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், நம் அனைவருக்கும் மூதாதையர் ஒன்றே என்றும், மனிதக் குரங்கின் மூதாதையரிடமிருந்து மனிதன் தோன்றினான் என்றும் உயிரியல் கூறியது. அதனை ஆதாரங்களுடன் நிரூபித்தார் சார்லஸ் டார்வின் என்ற உயிரியல் அறிஞர். இந்த ஆதாரம், மக்கள் நம்பிய பல கட்டுக்கதைகள் மனிதன் தோன்றிய வரலாறு கதைகள் மீது சந்தேகம் ஏற்படவும், வலுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. நார்வே, சுவீடன், ஜப்பான் போன்ற நாடுகளில் மனிதர்கள் 89 வயது வரை இன்று வாழ்கின்றனர் என்றால், அதற்கு முழு முதற்காரணம் அறிவியல் தான். அவர்கள் அறிவியலை நம்புகிறார்கள், ஆகவே வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறார்கள். அவர்கள் மனிதர்களை நேசிப்பது போல அனைத்து உயிரினங்களையும் உண்மையாகவே நேசிக்கிறார்கள். ஒரு நாயைக்கூட கல்லால் அடிக்கமாட்டார்கள். ஆனால் அறிவியலை நம்ப மறுக்கும் நாட்டின் மக்கள் மற்ற உயிரினங்களை நேசிப்பது போல பாசாங்கு மட்டும் செய்வார்கள். அறிவியல் அறம், சக மனிதனை நேசிக்க வைத்தது. அது கேள்வி கேட்பதை ஊக்குவித்தது. அறிவியல் இல்லாத அறம், மனிதன் சக மனிதனை வெறுக்க வகை செய்திருக்கிறது. கேள்வி கேட்பவர்களை கொலை செய்யவும் தூண்டுகிறது. அறிவியல் ஏழை என்றும் பணக்காரன் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இருந்தாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஏழைகளுக்கு சென்றடைந்துவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நம்நாட்டில் 20 லட்சம் குழந்தைகள் 5 வயதினை அடைவதற்கு முன்னரே இறந்து போகிறார்கள். 21 சதவீதம் குழந்தைகள் பிறக்கும்போது உயரம் குறைவாகவும், எடை குறைவாகவும் பிறக்கிறார்கள். அவர்களுடைய அம்மாக்கள் ஆரோக்கியமாக இல்லை, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு இல்லை, மருந்துகள் இல்லை, சுகாதாரம் இல்லை. அனைத்து அறிவியல் சாதனங்கள் இருந்தும் அவை ஏழைகளிடம் சென்றடைய மறுக்கின்றன. காரணம் வறுமை! அதோடு அறியாமை என்ற பரிதாப நிலை. இந்த நிலை நல்லது அல்ல, அதற்கு அறிவியல் அறிஞர்கள் காரணம் அல்ல. இருந்த போதிலும் அறிவியல் மூலமாக மட்டுமே இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் அறிவியலை வளர்ச்சியின் ஒரு கருவியாகக் கருத வேண்டும். அறிவியலை வளர்ப்பது நமது கடமை என்று இந்திய அரசியல் அமைப்பு வலியுறுத்துகிறது. குழந்தைகளை அளவோடு பெற்று, ஆரோக்கியமாக வளர்க்க வழி வகை செய்தது அறிவியல். அவற்றை மேல் நாட்டினர் கடைபிடித்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தினார்கள். நமது முன்னோர்கள், மகப்பேறு நமக்கு கடவுளால் கிடைத்த வரம் என்று நம்பி பல குழந்தையைப் பெற்று மக்கள் தொகையைப் பெருக்கிவிட்டனர். அரசு குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கூட புறக்கணித்தனர். 1950-ம் ஆண்டு 30 கோடியாக இருந்த மக்கள்தொகை இன்று 138 கோடியாக உயர்ந்துவிட்டது. அதிகப்படியான மக்களுக்கு உணவு, குடிநீர், வீடு, மின்சாரம், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், சாலைகள், வாகனங்கள் என்று வசதிகள் எங்கிருந்து வரும்? ஐரோப்பியர்கள் கப்பல்கள் கட்டி ஆஸ்திரேலியாவிற்கும், அமெரிக்காவிற்கும் குடியேறிய நேரம் நமது முன்னோர்கள் வரப்புச் சண்டைகளில் நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார்கள். அறிவியலை அவர்கள் முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் அறிவியலை புரிந்து கொள்ளாமல் பலர் இருக்கிறார்கள். நமது ஏழ்மை நிலைக்கும், சக மனித வெறுப்புக்கும் இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. வெட்டிப்பேச்சு, சோம்பேறித்தனம், குறை கூறுவது, நியாயமற்ற போராட்டம், அதிகார கர்வம், சாதிக்கொடுமை, திருட்டு, மோசடி, ஊழல், பெண் அடிமைத்தனம், குழந்தை சித்ரவதை, மதக்கட்டமைப்பு, இனக்கலவரம் போன்ற அறிவியலுக்கு எதிரான செயல்களில் பலரும் அக்கறையுடன் ஈடுபடுகின்றனர். இந்த கொடிய செயல்களால் நம்மால் முன்னோக்கி நகர முடியவில்லை. விஞ்ஞானம் மனித நேயத்தை ஏற்படுத்தியிருக்கிறது; மக்கள் முன்னேற வழிவகை செய்திருக்கிறது. ஆக ஏழைகளும் பணக்காரர்களும், ஆண்களும் பெண்களும், அனைத்து மதத்தினரும் அறிவியலை சரியாக புரிந்து கொண்டு அதன்படி நடந்தால் மக்கள் தொகை குறையும், மக்களிடம் அன்பு பெருகும்; உழைப்பு பெருகும், சுகாதாரம் மேம்படும்; எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும். அப்படி ஒரு சூழ்நிலை 100 ஆண்டுகள் கழித்து உருவானாலும் கூட போதுமானது. அதற்கான வழித்தடத்தை இன்று வாழ்ந்த நீங்களும் நானும் உருவாக்கினோம் என்று எதிர்காலத்தில் நமது சந்ததியினர் நம்மைப் பற்றி உயர் வாகப் பேசவேண்டும். அறிவியல் வளர்ச்சிப்பாதை தான்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts