Sunday 15 July 2018

வெளித்தேர்வு நியமனம் நன்மையா? தீமையா?

வெளித்தேர்வு நியமனம் நன்மையா? தீமையா? சோ.கணேச சுப்பிரமணியன், கல்வியாளர் மத்திய அரசு இணைச்செயலாளர் அந்தஸ்துப் பதவிகளுக்குப் வெளித்தேர்வு நியமனமாக அதிகாரிகளைக் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ‘வெளித்தேர்வு நியமனம்’ என்றால் என்ன? இந்திய அரசுப் பணிகளுக்குப் பொருந்துமா? நன்மையானதா?பொதுவாக அரசுப் பணியாளர்கள் நேரடித் தேர்வு அல்லது பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு ஆகிய இரண்டு முறைகளில் தேர்ந்தெடுக்கப்படுவர். இது தவிர ஏதாவது ஒரு துறையில் சில பணிகளுக்கு அரசுப் பணியில் அனுபவமும், பணிசார்ந்த அறிவும் தேவையாக இருக்கும். அதுபோன்ற பணியிடங்களுக்கு நேரடியாகத் தேர்வு செய்யாமல் மற்றொரு அரசுத்துறையிலிருந்து அதிகாரிகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தேர்ந்தெடுப்பர். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசுத்துறைகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களில் அனுபவம் உள்ளோரையும் அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் உண்டு. இதுபோன்ற நியமனங்கள் ‘வெளித்தேர்வு நியமனங்கள்’ எனப்படும். இவற்றுள் முதலில் கூறிய குறிப்பிட்டகாலவரையறை அடிப்படையிலான நியமனங்கள் இந்தியாவில் எப்போதுமே உண்டு. இரண்டாவதாகச் கூறப்பட்ட நியமனமுறை பொதுவாக இல்லை, விதிவிலக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. உதாரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளித்தேர்வு நியமனமுறையில்தான் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டார். இந்த முறையைப் பணியாளர் தேர்வில் பயன்படுத்த வேண்டுமெனப் பல குழுக்கள் பரிந்துரைத்துள்ளன முதலாம் நிர்வாகச் சீர்திருத்தக் குழு, ஐந்தாவது மற்றும் ஆறாவது மத்திய ஊதியக்குழு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பணியாளர் நியமனத்தில் பணிசார் நியமனம், பணிவாழ்க்கைசார் நியமனம் என இருமுறைகள் உண்டு. இந்தியாவில் பணிவாழ்க்கைசார் நியமனமுறையே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் குறிப்பிட்ட வயதில், ஏதாவது ஒரு நிர்வாகப் படிநிலையில் அரசுப்பணிக்குத் தேர்வாகும் ஒருவர் பணிஓய்வுக் காலம் வரை பணிபுரிவார். தேர்வானது முதல் பணிஓய்வு வரை தகுதி, பணிமூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பதவி உயர்வும் பெறுவார். எனவே அரசுப்பணி அவருடைய பணிவாழ்க்கையாகிவிடுகிறது. இது அவருடைய வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மையைத் தந்து பணிப்பாதுகாப்பையும் உறுதி செய்வதால் அவருடைய கவனம் பணியைத் திறம்பட நிறைவேற்றுவதில் இருக்கும். நிலைத்தன்மையும், பணிப்பாதுகாப்பும் நிர்வாகச் செயல்பாட்டுக்கு இன்றியமையாதவையாகும். வெளித்தேர்வு நியமனங்கள் இந்த முறைக்கு எதிரானது. பின் எதற்காக இந்த முறை பரிந்துரைக்கப்பட்டது? அரசும் செயல்படுத்துகிறது? இந்த முறையிலும் பல நன்மைகள் உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் ஏற்கனவே பயிற்சி பெற்றவராகவும் அரசுப் பணிசார்ந்த அறிவு நிறைந்தவராகவும் இருத்தலால் நேரடியாகப் பணியமர்த்தலாம். பயிற்சிக்கான செலவும் காலமும் மிச்சமாகும். வேறொரு துறை அறிவையும் அனுபவத்தையும் கொண்டுவருவதால் பணியிலும், துறைச் செயல்பாட்டிலும் புதுமை புகுத்தப்படும். தனியார்வணிக நிறுவனங்களிலிருந்து அரசுத்துறைக்கு வருவோரால் இது மேலும் சாத்தியப்படும். அவர்களுடைய அனுபவம் அரசுத்துறைச் சீர்திருத்தத்திற்குப் பெரும் துணையாக இருக்கும். அரசுத்துறையின் மந்தநிலைச் செயல்பாட்டை உலுக்கி விரைந்து செயல்படச் செய்யும். உதாரணமாக ரகுராம் ராஜன், வர்கீஸ் குரியன் போன்றோர் ஆற்றிய பணிகளைச் சொல்லலாம். ஆனால் இந்த முறையில் பல சிக்கல்களும் சவால்களும் உண்டு. விண்ணப்பதாரருக்கான தகுதித்தேர்வுமுறையையும், செயல்படுத்தும் அமைப்பு எது என்பதையும் நிர்ணயிப்பது முதல் சிக்கல். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வுமுறையில் அனுபவ அடிப்படையிலும் தேர்வுமுறை ஆராய்ச்சி அடிப்படையிலும் நிபுணத்துவம் பெற்ற அமைப்பு. வெளித்தேர்வு நியமனமுறை அந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்தாதது மட்டுமல்லாது அதனைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுடைய ஊக்கத்தையும் குலைக்கும் தன்மையுடையது. அரசுப்பணியைத் தன் பணிவாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தவருக்குப் பதவிஉயர்வு மிக முக்கியமானது. வெளித்தேர்வு நியமனங்கள் அதனைத் தடுத்து பணியாளர் ஊக்கத்தைக் குலைக்கும். மேலும் வெளித்தேர்வு நியமனதாரர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவதால் அவருடைய ஊதியம் அவருடைய சந்தை ஊதியமதிப்பை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இது அரசுப் பணியில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துவதோடு அரசுப்பணியாளர்களுடைய மனநிலையையும் பாதிக்கும். அரசு தன்னை நம்பவில்லை என்ற எண்ணம் ஓங்கி பணித்திறம் குறைய நேரிடும். இது அரசுப்பணியாளரின் பணிக் காலம் முழுவதும் நிலைத்துவிடும் ஆபத்தும் உண்டு. உயர்பதவியில் இருப்போர் அரசின் பல்வேறு ரகசிய ஆவணங்களைக் கையாள நேரிடும். குறிப்பிட்ட காலத்துக்கு அந்தப் பதவி வகிக்கும் வெளித்தேர்வு நியமனதாரர் ஆவணங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவாரா? அரசுப்பதவியைவிட்டுச் சென்றபின் அரசாங்க ரகசியங்களைப் பாதுகாப்பாரா? என்பவை முக்கியமான கேள்விகள். குறுகியகால அரசுப்பணியில் ஏற்படும் தொடர்புகள் அரசுப்பணியைவிட்டுத் தனியார் பணிகளுக்குச் சென்றால் சிறப்புச் சலுகை, லஞ்சஊழலுக்கான வாய்ப்பு என அரசுத்துறை செயல்பாடுகளை பாதிக்கும் வாய்ப்பும் உண்டு. மேலும் குறுகிய காலம் பணியில் அவர் எடுக்கும் முடிவுகள் தவறாகிப்போனாலோ, அரசுக்கும் மக்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தினாலோ அவரைப் பொறுப்பேற்கச் செய்யமுடியாது. சரி இப்போது மட்டும் ஊழல் இல்லையா? அரசு அதிகாரிகளைக் தண்டிக்க முடிகிறதா? என்று வாதிடுவோரும் உண்டு. தற்போதைய முறையில் அரசுப்பணியாளர் அரசுசார்ந்தவராகிறார். பணிக்காலத்திலும் ஓய்வுபெற்றாலும் அரசுக்கு அவர்மீது பிடிப்பு உண்டு. ஆனால் வெளித்தேர்வு நியமனதாரர் குறிப்பிட்ட காலமே அரசுப்பணியில் இருப்பார். அக்காலகட்டத்துக்குப்பின் அவரை பணிப்பொறுப்புக்கு ஆளாக்குவது கடினம். எனவே இந்தியாவில் இந்த முறைமைத் தற்போது செயல்படுத்துவது பலனைவிடப் பிரச்சினைகளையே தரும். சிந்தித்துச் செயல்படுத்துதல் நன்று. Location: Chennai Edition: Tiruvallur Date : 15/07/2018 Page : 04 Stories : 3 வெளித்தேர்வு நியமனம் நன்மையா? தீமையா? கண்டக்டர் சேவை பயணிகளின் தேவை எதிரொலி Back

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts