Tuesday 6 February 2018

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை

​ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை | பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆசிரியர் நியமன ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பேராசியர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்காக மூத்த பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வுசெய்து அவர்களின் நியமனத்துக்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றால் போதும். இந்த நடைமுறைகள் இருந்தாலும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனங்கள் அனைத்தும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்துத்தான் நடைபெறுகின்றன என்பது அனைத்து பல்கலைக்கழங்கள் மீதும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டு. இதே அடிப்படையில்தான் பணியாளர் நியமனங்களும் நடக்கின்றன என்ற புகாரும் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து பல்கலைக்கழகங்கள் மீதும் முன்வைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவி பேராசிரியர் பணிநியமனம் தொடர்பாக லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் பணியில் உள்ள துணைவேந்தர் ஒருவர் லஞ்ச விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மட்டும் தொடர்புடையது அல்ல, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் லஞ்ச விவகாரம் வெளியில் தெரிந்தும், தெரியாமலும் நடந்து கொண்டிருக்கிறது என்பது கல்வியில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களின் கருத்து. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று பல்கலைக்கழக ஆசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்ற யோசனையை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்வைக்கிறார்கள். பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வுசெய்ய தனி தேர்வு வாரியம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக முந்தைய திமுக ஆட்சியின்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சென்னை பல்கலைக்கழக விழா ஒன்றில் பேசியபோது குறிப்பிட்டார். ஆனால், அது செயல்வடிவம் பெறவில்லை. பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்களில் நடைபெறும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பேராசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு: பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க துணைத் தலைவர் எம்.ரவிச்சந்திரன்: துணைவேந்தர் பதவிக்கு கோடிகள் கொடுத்துதான் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் வட்டியும் முதலுமாக சேர்த்துத்தான் பணத்தை எடுக்க முயற்சி செய்வார்கள். எனவே, துணைவேந்தர் நியமன நிலையிலேயே குறைபாடுகளை களைய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆசிரியர் நியமனங்கள் சரியாகிவிடும். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக மெரிட் அடிப்படையில் நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால், அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவதைப் போல பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவே தேர்வு செய்யலாம். தனியார் கல்லூரிகளில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பல்கலைக்கழங்களில் இணை பேராசிரியர், பேராசிரியர் ஆவது தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஐ.அருள் அறம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது தலைசிறந்த அறிஞர்கள் வகிக்கக்கூடிய பதவி ஆகும். ஆனால், இந்த பதவிக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள் வந்தால் பல்கலைக்கழக நிர்வாகம் என்னவாகும்? அதேநேரத்தில், துணைவேந்தர் ஒருவர் பணம் சம்பாதிக்கக்கூடிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகிறார்? அதற்கான அடிப்படை காரணம் என்ன? என்பதையும் ஆராய வேண்டியது அவசியம். பல்கலைக்கழங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக இல்லை. நேர்முகத்தேர்வில் பென்சில் மூலமாகத்தான் மதிப்பெண் போடுகிறார்கள். இவ்வாறு அளிக்கப்படும் மதிப்பெண்கள் பின்னர் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்படுவதைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் அதே தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யலாம். சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக்: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை வேறு. தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. கல்வித்திறனோ, நிர்வாகத்திறமையோ பார்க்கப்படுவதில்லை. பணம் கொடுத்துவிட்டு பதவிக்கு வந்தவர்கள் என்ன செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் ஓட்டுக்கு எப்போது பணம் வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதே சமூக சீரழிவு தொடங்கிவிட்டது. இன்னென்ன அனுகூலங்கள் எங்களுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்நிபந்தனைகளுடன் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். பின்னர் அந்த துணைவேந்தர்கள் என்ன செய்வார்கள்? அரசு கல்லூரி ஆசிரியர்களைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்வதாக இருந்தாலும் அதுவும் நேர்மையான முறையில் அமைய வேண்டுமே. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறதே? பொதுமக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலகாரணம். ஜெ.கு.லிஸ்பன் குமார்

No comments:

Popular Posts