Saturday, 7 January 2017

கவனம் கோரும் படிப்பறை வடிவமைப்பு

கவனம் கோரும் படிப்பறை வடிவமைப்பு | பள்ளி கல்லூரி மாணவர்களுக்குக் கைகொடுக்கும் படிப்பறை பொதுத் தேர்வுக்குத் தயாராகும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இருக்கும் வீடுகளில், அவர்கள் கவனம் சிதறாது தனிமையில் அமர்ந்து படிப்பதற்கான பிரத்யேக அறையின் அவசியத்தைப் பெரியவர்கள் உணர்ந்திருப்பார்கள். வீடு கட்டுமானத்தின்போதோ, பின்னர் வீட்டின் அறைகளில் ஒன்றை மாற்றியமைத்தோ படிப்பறை அமைத்துக்கொள்வது மாணவரின் எதிர்காலத்திற்குச் சிறப்பான பங்களிக்கும். இதுவரை இல்லாவிட்டாலும் தேர்வு சமீபத்திலாவது படிப்பறை குறித்து ஆலோசிக்கத் தலைப்படுவோம். படிப்பறையின் அத்தியாவசியம் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மாணவர்களுக்கு, கவனச் சிதறலின்றிப் பாடங்களைப் படிப்பதும் எழுதுவதும் அவர்களின் அன்றாடக் கடமைகளை அலுப்பின்றி விரைந்து முடிக்க உதவும். வீட்டின் இயல்பான சப்தங்கள், மற்றவர்களுக்கான தொலைக்காட்சி இரைச்சல் போன்றவை மாணவர்களைப் பாதிக்காதிருக்க தனியறை தேவை. வழக்கமான படுக்கையறை மற்றும் மாணவருக்கான தனியறை போன்றவை அவர்களின் ஓய்வுக்கும், உறக்கத்திற்கும் மட்டுமே உகந்தவை. மனதை ஒருமுகப்படுத்தவும், முழுக்கவும் பாடத்தில் கவனம் குவிக்கவும் தனியறை அவசியம். அல்லது இருக்கும் அறையின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரித்து படிப்பறை அமைத்துக்கொள்ளலாம். படிப்பறையில் அமர்ந்துவிட்டால் படிப்பது, தேர்வுக்குத் தயாராவது ஆகியவை தொடர்பான அதிர்வுகளே அவர்களைச் சுற்றி வளையவர வேண்டும் என்பதற்காகவே இந்தச் சிறப்பு ஏற்பாடு அவசியமாகிறது. படிப்பறை அமைவிடம் படிப்பறை என்பது வழக்கமான வாசிப்பறை அல்ல. பொதுத் தேர்வுக்கோ போட்டித் தேர்வுக்கோ தயாராகும் மாணவர்களுக்கான அறை என்பதால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் இருப்பையும் குறுக்கீட்டையும் அங்கு தவிர்ப்பது நல்லது. வீட்டைக் கட்டும்போதே படிப்பறை குறித்தும் திட்டமிடலாம். குழந்தைகள் அல்லது வளரிளம் பருவத்தினருக்கான அறையைத் திட்டமிடுவதுபோல, தனியறையாகவோ அவர்களின் அறையின் பகுதியைப் பிரித்தோ படிப்பறையைத் திட்டமிடலாம். இயற்கை ஏற்பாடுகள் இயற்கையான காற்றும், வெளிச்சமும் படிப்பறைக்கு அடிப்படை. மின்விசிறி ஏசி போன்ற செயற்கை ஏற்பாடுகள் உடல் வெப்பத்தின் சம நிலையைப் பாதிப்பதோடு, கண்களைச் சோர்வடையச் செய்யும். எனவே இயற்கையான காற்று அறைக்குள் நுழைந்து வெளியேறும் வசதி முக்கியம். தனி வீட்டில் வசிப்பவர்கள் மேல்நிலை நீர்த்தொட்டிக்கு என மொட்டை மாடியில் ஒரு அறையை அமைத்து அதன் மேலாக அத்தொட்டியின் கட்டுமானத்தினை மேற்கொள்வார்கள். பிரத்யேகமான இந்த அறையைப் படிப்பறையாக முன் கூட்டியே திட்டமிட்டு வடிவமைப்பது வரவேற்புக்குரியது. காரணம் வீட்டிலேயே இருந்தாலும் வீட்டின் நிகழ்வுகளிலிருந்து துண்டித்துக்கொள்ளும் வசதி இந்த அறைக்கு உண்டு. மேலும் மொட்டை மாடியின் தனியறை என்பதால் காற்று போக்குவரத்தும் அள்ளும். அறையின் மேல்தளத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தொட்டியின் தயவால், அறைக்குள் இயல்பான குளிர்ச்சியும் வளையவரும். விவரமறியாதவர்கள் இந்தத் தனியறையைக் கிடங்கு அறையாகவோ, விருந்தினர் அறையாக ஒதுக்கியிருப்பார்கள். அறையைப் பிரித்தும் அமைக்கலாம் சற்றே வளர்ந்த மாணவர்களுக்கு இம்மாதிரியான தனியறை உகந்தது. ஆனால் வயது குறைவானவர்களுக்கும் சதா பெரியவர்களின் கண்காணிப்பு அவசியப்படும் மாணவர்களுக்கு, அவர்களின் வழக்கமான படுக்கயறையைத் தடுப்புகள் உதவியுடன் பிரித்தோ, தடுத்தோ படிப்பறையை வடிவமைக்கலாம். படுக்கையிலிருந்து சற்று விலகியதியாய் அமர்ந்து படிக்கவும் எழுதவுமான பிரத்தியேக வசதிகள் அமைந்திருக்க வேண்டும். படுக்கை அருகிலிருப்பது சற்று நேரத்திற்கெல்லாம் படுத்து ஓய்வெடுக்கத் தூண்டும். தேவையெனில் முதுகைச் சாய்த்து அமர்வதற்கான நீள் இருக்கைகளைப் படிப்பறையில் பொருத்தலாம். இதற்காகச் சன்னலோரம் தனி அலமாரிகள் பொருத்தித் தேவையான மேசை, நாற்காலியை வைக்கலாம். இதர வசதிகள் பிரத்யேகப் படிப்பறைக்கு வீட்டின் கட்டுமானத்தின்போதே காற்றுப் போக்கு, வெளிச்சம் ஆகிவைக்கு வழி விட்டு சன்னல், கதவுகளைத் தீர்மானிக்கலாம். சன்னல்களில் அவசியமான திரைச்சீலை, கொசுத் தொல்லைக்கான தடுப்பு வலைகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம். அறையின் உள் சுவற்றினுள் பொதிந்த அலமாரிகளுக்கு அதிக இடம் ஒதுக்குவது பின்னாளில் அலமாரிக்கான செலவுகளைக் குறைப்பதோடு, இடவசதி மேலாண்மைக்கும் உதவும். கண்களை உறுத்தாத அதே சமயம் பளிச்சென்ற வர்ணங்களைச் சுவர்களுக்குப் பூசலாம். கவனத்தைச் சிதறடிக்கும் இதர அலங்காரங்களைப் படிப்பறையில் தவிர்க்க வேண்டும். மேசையின் அமைவிடம், மின்விளக்கின் வெளிச்ச திசை ஆகியவற்றுக்கான முன் திட்டமிடலுக்கு ஏற்றவாறு, சுவருக்குள் மின்பாதைகள் அமைப்பது அவசியம். இவை பின்னாளில் மின்சார வயர்கள் ஆங்காங்கே குறுக்கிடுவதையும் அதன் அபாயத்தையும் தவிர்க்கும். மின் வயர்களைப் போன்றே, கணினி இணைய இணைப்பிற்கான கேபிள் இணைப்பிற்கும் சுவரிலேயே ஏற்பாடுகளைப் பொருத்துவது அவசியம். கண்களைக் கூசாத, அதிகம் வெப்பம் உமிழாத அதே சமயம் போதிய வெளிச்சம் தரும் போதிய மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். குழந்தைகள் மீது மிகுந்த அக்கறையும் பொருளாதார வசதியும் இருக்கிறது என்பதற்காக, சொகுசான இருக்கை, மேசைகளைப் படிப்பறையில் அமைக்கத் தேவையில்லை. தேர்வறையில் எதிர்கொள்ளும் உணர்வே படிப்பறையிலும் கிடைப்பது, தேர்வுக்கான சிறப்பான பயிற்சியாக அமையும். இல்லையெனில் படிப்பறையில் சொகுசாக அமர்ந்து எழுதிப் பழகும் மாணவர்கள், தேர்வறையில் சற்று சிரமத்தை எதிர்கொள்வார்கள். படிப்பறையின் பிற பயன்பாடுகள் வீட்டின் இதர இடங்களில் அமர்ந்து தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், தனிப் படிப்பறையில் அமர்ந்து தங்களைத் தயார் செய்துகொள்ளும்போது அவர்களின் கல்வி முன்னேற்றத்தின் வித்தியாசத்தைக் கண்கூடாகக் காணலாம். வீட்டின் பல்வேறு உபயோகங்களுக்கான அறைகள் இருக்கும்போது கூடுதலாகப் படிப்பறையையும் அமைத்தே ஆக வேண்டுமா என்று மலைப்பவர்கள், படிப்பறையின் உபயோகங்களைப் பல்வேறு வகைகளில் அதிகரித்துக் கொள்ளலாம். படிப்பறை என்பது மாணவப் பருவத்தினருக்கானது மட்டுமல்ல. புத்தகங்கள் வாசிக்க, தனியாக அமர்ந்து எழுத, கணினி இணைய உபயோகத்திற்கு என வீட்டின் வழக்கமான இடையூறுகள் பாதிக்காது செயல்பட என அனைவருக்கும் இந்தப் பிரத்யேக அறை உதவும். மாணவர்கள் பள்ளி/கல்லூரிகளுக்குச் சென்ற பிறகு, வீட்டிலிருந்தே பணிபுரிவோர், பங்கு வர்த்தகம் மேற்கொள்வோர், வயதானோர் போன்றோர்களின் அமைதியான செயல்பாடுகளுக்கும் இந்த அறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Popular Posts