Monday, 26 December 2016

எதிர்காலத் தொழில் நுட்பம் எப்படி இருக்கும்

எதிர்காலம் இன்றைக்கு நம்மால் நம்ப இயலாத சிலவற்றால் இயங்க இருக்கிறது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும், அதன் வேகமும், அது தரும் வசதிகளும் நமக்குப் பிரமிப்பை உண்டு பண்ணுகின்றன. இவற்றின் அடிப்படையில், இன்னும் சில ஆண்டுகளில் நாம் எவை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்று பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். கணிப்பவர்கள் அறிவிக்கும் அனைத்தும் உறுதியாக நடக்கும் என்றே நாம் நம்பலாம். ஏனென்றால், இன்றைய அறிவியல் உலகில் இதுவரை ஏற்பட்ட வளர்ச்சி, வருங்கால வளர்ச்சியின் அடித்தளமாக அமைந்து, நம்மை சிந்திக்க வைக்கின்றன. அத்தகைய புதிய உலகம் எத்தகைய சாதனங்களால் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் என இங்கு பார்க்கலாம். இன்றைக்கு அதிகம் பேசப்படும், ஓட்டுநர் இல்லாமல், சென்சார்கள் காட்டும் வழியில் இயங்கக் கூடிய கார்கள், நமக்கான வேலைகள், நாம் இறங்கி செயல் ஆற்ற முடியாத தளங்களில் செயலாற்றும் இயந்திர மனிதர்கள் எனப் பல இலக்குகளை இன்றைய அறிவியல் நம் முன்னே வைத்துள்ளது. இந்தப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, இவை எல்லாம் சாத்தியமே என்று உறுதியாக நம்ப வைக்கிறது. அதே அடிப்படையில் வேறு சிலவற்றையும் சாத்தியமாகும் என எண்ண வைக்கிறது. உலக அளவில் செயல்படும் பொருளதார மையத்தின், அறிவியலின் எதிர்காலம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான பிரிவு, வருங்காலத்தில் ஏற்பட இருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது குறித்து தொழில் நுட்ப உலகில் செயலாற்றும் பல முன்னணி ஆய்வாளர்களைப் பேட்டி கண்டு, அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவேறக் கூடிய, சாத்தியப்படக் கூடிய கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டுள்ளது. அவற்றை இங்கு காணலாம். உலக மக்களில் 90% பேர், அளவற்ற டேட்டாவினை இலவசமாகச் சேமித்துப் பதிந்து வைக்கும் வசதியினை வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் பெறுவார்கள். சேமித்து வைப்பதற்கான இடம் அபரிதமாக அனைவருக்கும் கிடைக்கும். இதில் காட்டப்படும் விளம்பரங்கள், இந்த இடத்தைப் பராமரிக்கும் செலவினை ஈடு செய்திடும். இப்போதே, கூகுள் தன் நிறுவன மொபைல் போனில் எடுக்கும் போட்டோக்களை, அவை எந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தன் க்ளவ்ட் சேவையில் பதிந்து வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்து இயக்கி வருகிறது. இதே போல, பல நிறுவனங்கள், இந்த டிஜிட்டல் தேக்ககம் என்ற ஒன்றை இலவசமாகத் தந்து, வாடிக்கையாளர்களைப் பெற முயற்சிக்கலாம். இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. ஹார்ட் ட்ரைவ் விலை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால், அதிக அளவில் டேட்டாவினை உருவாக்கவும் மக்கள் முயற்சிக்கிறார்கள். தற்போது சேமிக்கப்பட்டு இருக்கும் டேட்டாவில், 90% கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவையாக உள்ளன என்பது இதனை உறுதிப்படுத்துகிறது. இனி பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர் மட்டுமல்ல, விலங்கு மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் பொருட்களும் இணையத்தோடு இணைக்கப்படும். இதற்கு சென்சார்கள் பொருத்தப்படும். சென்சார்களின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கம்ப்யூட்டரின் செயல் திறன் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், 2022க்குள், இப்புவியில், ஒரு லட்சம் கோடி சென்சார்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் அணியும் ஆடைகளிலிருந்து, நாம் மிதித்து நடக்கும் பூமி வரை அனைத்து இடங்களிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டு, அவை இணையத்துடன் இணைக்கப்படும். அவற்றின் இயக்கங்களை இணையம் மூலம் கண்காணித்து நெறிப்படுத்தலாம். தற்போது கார்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் சாதனங்களில் சென்சார்கள் பயன்படுத்தப் படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்குள், 10% மக்களின் ஆடைகளில் சென்சார்கள் பொருத்தப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. முப்பரிமாணத்தில் அச்சிடுவது பெருகி வருகிறது. இதன் மூலம் புதியதாக வடிவமைக்கப்பட இருக்கும் ஒரு சாதனத்தின் அனைத்து பரிமாணங்களையும் துல்லியமாக படத்தில் கொண்டு வர இயலும், 2022 ஆம் ஆண்டில் இவ்வாறு அச்சிட்டு வைத்துக் கொண்டு அதே போல கார் ஒன்று உருவாக்கப்படும். ஏற்கனவே, கார் தயாரிக்கும் 'ஆடி' நிறுவனம், ஒரு சிறிய மாடல் கார் ஒன்றை இவ்வகையில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நுகர்வோர் பயன்படுத்தும் சாதனங்கள் இனி முப்பரிமாணப் படங்கள் கொண்டு விளக்கப்படும். "அவன் எப்போதும் ஸ்மார்ட் போனையே தொங்கிக் கொண்டு திரிகிறான்" என்று கூறுவது வேறு ஒரு வகையில் உண்மையாகும். உடலின் உள்ளாக வைத்து இயக்கும் மொபைல் போன் வர இருக்கிறது. 2023ல் இது வெளியாகி, வர்த்தக ரீதியாக, 2025ல் இது கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே, இதயத் துடிப்பு குறையும்போது, அதனைச் சீராக இயக்க, பேஸ்மேக்கர் என்னும் சாதனத்தை உடலுக்குள்ளாக வைத்திடும் பழக்கம் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கண் கண்ணாடி போல அணிந்து, உலகில் உள்ள அனைத்து மக்களுடனும் உடனடியாகத் தொடர்பு கொள்ளக் கூடிய டிஜிட்டல் கண்ணாடி 2023 ஆம் ஆண்டில் கிடைக்கும். மக்களின் வாழ்வு அவர்களின் "டிஜிட்டல் நிலையைக்" கொண்டு கணக்கிடப்படும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறை, வழக்கமான முறையிலிருந்து மாற்றப்பட்டு, டிஜிட்டல் டேட்டா முறைக்கு வந்துவிடும். கனடா நாட்டில் அரசு இதைச் சோதனை முயற்சியாக மேற்கொண்டுள்ளது. தற்போது கம்ப்யூட்டர்களின் இடத்தில் ஸ்மார்ட் போன்கள் "பாக்கெட் கம்ப்யூட்டர்களாகப்" பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேகத்தில் சென்றால், 2023 ஆம் ஆண்டில், 90% மக்கள் சூப்பர் கம்ப்யூட்டர்களைத் தங்கள் சட்டைப் பைகளில் வைத்துப் பயன்படுத்துவார்கள். 2017ல், உலக மக்களில் 50% பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவார்கள். இது 2023ல், 90% ஆக உயரும். இணையம் பயன்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமை என பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும். இது 2024ல் நடைமுறைக்கு வரும். தற்போது இணைய இணைப்பு இல்லாத 400 கோடி மக்களுக்குப் பல வழிகளில் இணைய இணைப்பினைத் தர கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2024ல் மேற்கொள்ளப்படும் இணையப் போக்குவரத்தில், 50% தொடர்புகள், நாம் பயன்படுத்தும் சாதனங்களுடன் அமையும். டிவியை இயக்கிக் கட்டுப்படுத்தல், சலவை இயந்திரங்கள், தூய்மைப் படுத்தும் சாதனங்கள், வீட்டுக் கதவுகள், விளக்குகள் என அனைத்துடனும் நாம் இணையம் வழி தொடர்பு கொண்டு கட்டுப்படுத்த இயலும். செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்டு உலகில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி அடையும். மக்கள் மேற்கொள்ளும் பணிகளில், 50% பணிகளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் மூலம் இயக்கப்படும் சாதனங்கள் மேற்கொள்ளும். சாதாரண பணிகள் மட்டுமின்றி, நிதி நிர்வாகம், மருத்துவப் பணி, உயர்நிலை சமுதாய நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் செயற்கை நுண்ணறிவுத் திறன் அடிப்படையில் இயக்கப்படும் சாதனங்கள் உருவாகும். நிறுவனங்களின் இயக்குநர் குழுவில், இனி இது போன்ற ஒரு சாதனமும் இடம் பெற்று தன் கருத்தைத் தெரிவிக்கும் காலம் விரைவில் வரும். தனிப்பட்டவர்கள் கார்களை வைத்துக் கொண்டு இயங்குவது குறையும். இணையம் வழி தொடர்பு கொண்டு ஷேர் டாக்ஸி போன்ற வாகனங்களே இனி அதிகமாகப் பயன்படுத்தப்படும். தற்போது வெளிநாடுகளில் 'ஊபர்' மற்றும் சென்னையில் 'ஓலா' டாக்ஸிகள் இந்த வழிகளில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. விளக்குகளைக் கொண்டு, கார்கள் மற்றும் மக்களின் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்தும் பழக்கம் மறையும். ஸ்மார்ட் ஹோம் என இருப்பது போல, ஸ்மார்ட் நகரம் உருவாகும். இணையம் மூலமே, தானாக இயங்கும் சாதனங்கள் மூலம் போக்கு வரத்து ஒழுங்கு படுத்தப்படும். 2026 ஆம் ஆண்டில், முழுவதும் இணையத்தில் இயங்கும் சாதனங்களால் நிர்வகிப்படும், 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் முதல் ஸ்மார்ட் நகரம் செயல்பாட்டிற்கு வரும். பணப்புழக்கம் முற்றிலுமாக இணைய வழியில் மட்டுமே இருக்கும். 'பிட்காய்ன்' போன்ற கட்டமைப்பு விரிவு படுத்தப்பட்டு, பொதுவான பணப் பரிவர்த்தனை டிஜிட்டல் பேரேடு உருவாகும். ஒவ்வொருவருக்கும் அதில் கணக்கு இருக்கும். அதனை உரியவருக்கான அனுமதி பெற்று யாரும் இயக்கலாம். மேலே கூறப்பட்டவை அனைத்தும் கற்பனை அல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். அறிவியல் பிரிவில் செயல்படும் முன்னணி விஞ்ஞானிகளின் கருத்தினைக் கேட்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிச்சயம் இவை நிறைவேறும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Popular Posts