Saturday, 11 January 2020

கடலில் சங்கமிக்கும் நதி நீர் வீணாகிறதா?

கடலில் சங்கமிக்கும் நதி நீர் வீணாகிறதா? | மா.இளங்கோ, தலைவர், | தேசிய மீனவர் பேரவை  | ஆற்றில் கரை புரண்டு ஓடி வரும் நதி நீர் "வீணாக கடலுக்கு சென்று சேருகிறது" என்ற சொற்றொடர் பல்வேறு தரப்பினாலும் சொல்லப்படுகிறது. மக்களால் கொண்டாடப்பட கூடியவர்கள் பலரும் அடிக்கடி இக்கருத்தை கூறி வருகின்றனர். அணைகளில் தேக்கினாலும், படுகை அணைகளில் சேமித்தாலும் மீதம் உள்ள ஜீவ நதிகளின் நூற்றுக்கணக்கான ஆறுகளின் நீர் விவசாய பயன்பாட்டுக்கு போக மீதி நீர் கடலில் தான் சென்று சேர வேண்டும். அது தான் இயற்கையின் நியதி.

உருண்டையான இந்த பூவுலகில் பூமியின் மொத்த பரப்பளவில் 71 சதவீத பரப்பு தண்ணீரால் நிரம்பி உள்ளது. 71 சதவீத நீரில், சமுத்திரங்கள் மற்றும் கடல்களில் மட்டும் நீரின் அளவு 96.5 சதவீதத்தை கொண்டதாக உள்ளது. மீதம் உள்ள 3.5 சதவீத நீர், ஆறுகளிலும், ஏரிகளிலும், நீர் நிலைகளிலும், பனிக்குமிழ்களாகவும், நீராவியாகவும், மண் ஈரமாகவும், பனிப்பாறையாகவும் உள்ளது என்கிறது நவீன அறிவியல்.

கடல்களில் இதுவரை நவீன விஞ்ஞானிகளால் கணக்கிடப்பட்டு அடையாளம் காணப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் 2 லட்சத்து 28 ஆயிரம் வகைகளாகும். ஆனால் 2 கோடிக்கு மேலான வகை கடல் வாழ் உயிரினங்கள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .நத்தை, இலை அட்டை, விண்மீன் வடிவு கொண்ட சிறுமலர், நட்சத்திர மீன், எட்டு உறிஞ்சும் கரங்களை கொண்ட கடல் விலங்கினம், மட்டிகள், கடற்பாசி, கடல் புழு, நண்டுகள், நண்டுவகை இறால், சிறு தாவரங்கள், நீருக்கடியிலான காடுகள், கடல் பறவைகள், வண்ண வண்ண மீன்கள், பறக்கும் மீன்கள், ஆமைகள், சுறாமீன்கள், திமிங்கலங்கள், பாறை இடுக்குகளில் ஒடுகளுடன் வாழும் நத்தைகள், ஆலி, ஜெல்லி மீன்கள், நீண்ட வால் கொண்ட உயிரினங்கள், கடல் பாம்புகள், கூர்மையான கொம்பு கொண்ட உயிரினங்கள், கொடிய வி‌‌ஷத்தை பீய்ச்சி அடிக்கும் ஜந்துக்கள், வகை வகையான இறால் மீன்கள், மிகப்பெரிய மீன்பிடி கலங்களையே கவிழ்க்கக் கூடிய கொடிய வகை பிரமாண்டமான கடல் விலங்குகள் கடல் குதிரை, கடல் பசு, பாலூட்டி இனங்கள், புழுக்கள் என ஏராளமான வகை உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன.

இதனால் சமுத்திரத்தில் வாழும் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற பல்வேறு பருவ கால நீரோட்டத்தின் வேகம், குளிர்ச்சித் தன்மை, வெளிச்சத்தின் அழுத்தம், போன்றவை பூமியில் உயிர் வாழ்க்கைக்கு தேவைப்படுவது போல் கடலிலும் தேவைப்படுகிறது. இத்தகைய அத்தனை தன்மைகளையும் சமன்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே கடலின் சுற்றுச்சூழலை பாதுகாத்து பல்லுயிர் வாழ இயலும். இவை அனைத்தும் நடைபெற கடலின் ஜீவ நாடியான நதி நீர் கடலில் சங்கமிப்பது அவசியமாகிறது. உலகம் முழுவதும் விவசாய விளை நிலங்களின் அளவு வெகுவாக குறைந்து வருவதால், உலக மக்களின் எதிர்கால உணவு தேவையை விவசாய விளை பொருட்களால் மட்டும் பூர்த்தி செய்து விட முடியாது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

உணவுச் சங்கிலி அறுந்து போகாமல் இருக்க கடல் நீர் ஆவியாகி, வானத்தில் மேகமாகி மீண்டும் மழையாகி பூமியில், மலைகளில் வனங்களில், காடுகளில் பெய்து ஓடைகள், நீர் வீழ்ச்சிகள் வழியாக ஆறுகள், நதிகள் மூலம் கடலில் கலக்க வேண்டியது என்ற நீர் சுழற்சி அவசியமாகிறது. கடலின் ஜீவன் அதுதான். கடல் நீர் ஆவியாவதால், கடல் நீரின் உப்புத்தன்மை அதிகமாகிவிடுகிறது. மழையாகி நதிகள் மூலம் மீண்டும் நல்ல நீர் கடலில் கலப்பதன் மூலம் தான் வாழத்தகுதியான நீராகி பல்வகை உயிரினங்களை வாழ வைக்கிறது. நதி நீர் கடலில் கலக்கும் முகத்துவாரங்களும், கழிமுகங்களும் தான் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான களமாக அமைந்து ஏராளமான இன விருத்திக்கு வித்திடும்.

ஆவியான கடல் நீர் மேகமாகி மழையாக பெய்து கடலில் சங்கமித்தால் தான் கடல் கூட வற்றாமல் இருக்கும் என்ற பொருளில் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூட கடல் நீர் ஆவியாகி மழை பொழிந்து, நிலத்துக்கு நீர் கிடைத்து மீதம் நீர் கடலில் சங்கமிப்பது தான் பல உயிர் வாழ வழிவகுக்கும் உணவுச் சங்கிலியின் சுழற்சி முறை என்பதை கூறி வந்துள்ளார். ஐ.நா. சபை அறிவித்துள்ள உலக மீன்வள தினத்தின் இந்த ஆண்டுக்கான குறிக்கோளாக " உயிர் வாழ் இனங்களுக்கு தேவையான சுற்றுச்சூழல் கொண்ட ஆரோக்கியமான சமுத்திரங்கள், கடல்கள் தேவை" என்று அறிவித்துள்ளனர். இந்தியாவில் 8 ஆயிரம் கிலோ மீட்டர் கடற்கரை வழியாக கடலில் நல்ல நீரை கொண்டுவந்து சேர்க்கும் பல்லாயிரம் நதிகள், ஆறுகள், கிளை ஆறுகள், சிற்றோடைகள், வாய்க்கால்களின் முகத்து வாரங்கள் தான் ஆரோக்கியமான கடலுக்கு தேவையான நல்ல ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் நரம்பு மண்டலங்களாகவும் பிராணவாயு வழங்கும் மூச்சுக் குழலாகவும் அமைந்துள்ளன. அவற்றின் மூலமாகத்தான் கடல் உயிர் பெற்று, தன்னுள் அடைக்கலமாகியுள்ள ஜீவன்களுக்கு உணவும், உயிரும் அளித்து உலக மக்கள் உயிர் வாழ உணவு பாதுகாப்பை வழங்குகிறது.

நமது நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்திட, குறிக்கோளை அடைந்திட சுற்றுச்சூழலுக்கு கேடான பல்வேறு பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ரசாயன கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், நகர, மாநகர குப்பைகள் ஆகியவைகளை கடலுக்கு கொண்டு செல்லும் போக்கை நாம் தவிர்க்க வேண்டும் .சுத்தமான ஆற்று நீர் தடையின்றி கடலில் சங்கமிக்க வேண்டும் .எனவே நதி நீர் வீணாக கடலுக்கு சென்று சேருகிறது என்று இனி யாரும் கருத்து தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

No comments:

Popular Posts