Tuesday 17 December 2019

ஜி.எஸ்.டி. - தோல்வியடைந்த வரி விதிப்பா?

ஜி.எஸ்.டி. - தோல்வியடைந்த வரி விதிப்பா?

ஒ ரே நாடு - ஒரே வரி’ முறை என்ற வகையில், நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூலிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 13 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா, 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்காக ஜூன் 30-ந்தேதி நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டு அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திரமோடியும் ஒரு பொத்தானை அழுத்திய பின்பு, நாடு முழுவதும் மாநில அரசுகள் வசூலித்து வந்த 7 வரிகள், மத்திய அரசாங்கம் வசூலித்து வந்த 8 வரிகள், ஆக மொத்தம் 15 வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரியாக ஜி.எஸ்.டி. என்று அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் அரசியல் ரீதியாக சர்தார் வல்லபாய் படேல் ஒருங்கிணைத்ததுபோல, பொருளாதார ரீதியாக ஜி.எஸ்.டி. ஒருங்கிணைக்கும் என்று அப்போது நரேந்திரமோடி பேசினார். ஜி.எஸ்.டி. வரியை கடைசி வரை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்த்து வந்தார். அவர் உயிரோடு இருந்தவரையில் மற்ற மாநிலங்கள் எல்லாம் ஜி.எஸ்.டி. வரிக்கான சட்டத்தை நிறைவேற்றிய நிலையில், தமிழ்நாடு மட்டும் நிறைவேற்றாமல் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ஜி.எஸ்.டி.க்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

ஜி.எஸ்.டி. வரி அமல் நடத்தப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பில் முதல் 3 ஆண்டுகளுக்கு 100 சதவீத இழப்பீடும், 4-வது ஆண்டில் 75 சதவீத இழப்பீடும், 5-வது ஆண்டில் 50 சதவீத இழப்பீடும் தரப்படும் என்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதாவில் கூறப்பட்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி ஜீரோ சதவீதம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில ஆடம்பர பொருட்களுக்கு மேல்வரி வசூலித்துக்கொள்ளலாம் என்றும் வகை செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல், மத்திய நிதி மந்திரி தலைமையில் மாநில நிதி மந்திரிகளை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அவ்வப்போது விவாதித்து ஜி.எஸ்.டி. வரியில் மாற்றங்களை கொண்டுவரலாம் என்று அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழக அரசின் சார்பில் முன்பு அமைச்சர் மாபா பாண்டியராஜன் இந்த கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் ஜி.எஸ்.டி. வரி கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார். இதுவரை 37 ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்கள் நடந்துள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மத்திய அரசாங்கத்துக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. இந்த 37 கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நூற்றுக் கணக்கான மாற்றங்களும், விளக்கங்களும் பல குழப்பங்களை ஏற்படுத்தின.

இந்த ஆண்டு மொத்த ஜி.எஸ்.டி. மூலம் 13.35 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை அடைய வேண்டும் என்றால், ஒரு மாதத்துக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி.யாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நிதி ஆண்டு கணக்கை எடுத்துக்கொண்டால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,13,865 கோடி ரூபாயும், மே மாதத்தில் 1,00,289 கோடி ரூபாயும், ஜூன் மாதத்தில் 99,939 கோடி ரூபாயும், ஜூலை மாதத்தில் 1,02,083 கோடி ரூபாயும், ஆகஸ்டில் 98,202 கோடி ரூபாயும், செப்டம்பரில் 91,916 கோடி ரூபாயும், அக்டோபரில் 95,380 கோடி ரூபாயும், நவம்பரில் 1,03,492 கோடியும்தான் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி., மாநில ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மேல்வரி பங்குகள் இருக்கின்றன. மத்திய ஜி.எஸ்.டி. வசூல் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை 3,28,365 கோடி ரூபாய்தான் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 8 மாதங்களுக்கான பட்ஜெட் மதிப்பீடு 5,26,000 கோடி ரூபாயாகும். இது இலக்கைவிட 40 சதவீதம் குறைவாகும். இதுமட்டுமல்லாமல், மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டு தொகையும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இன்னும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட 14 சதவீதம் வருமானம் அதிகமாக இருந்தால் எவ்வளவு அதிகமாக இருக்குமோ, அந்த தொகையோடு அந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வசூலை கழித்தால் கிடைக்கும் தொகைதான் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் மிக சிறப்பாக ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரிக்கான தேசிய வருவாயில் 2-வது பெரிய பங்களிப்பு தமிழ்நாட்டில் இருந்துதான் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விகிதம் அமலுக்கு வந்ததில் இருந்து 1,57,167 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்பட்டு, தேசிய வருவாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (ஐ.ஜி.எஸ்.டி.) நிலுவைத்தொகையாக 4,072.03 கோடி ரூபாயும், ஜி.எஸ்.டி. இழப்பீடாக 3,236.32 கோடி ரூபாயும் வழங்க வேண்டியது இருக்கிறது. இன்னும் எப்போது இந்த இழப்பீடு வழங்கப்படும் என்று தெரியவில்லை. மத்திய அரசாங்கம் இந்த இழப்பீட்டு தொகையை வழங்காததற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப் மாநிலம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் இவ்வளவு இழப்பீட்டு தொகை வராததால், வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிறைய தொகை வராததால் தெலுங்கானா மாநிலம் பல வளர்ச்சி திட்டங்களை குறைத்துவிட்டது.

ஜி.எஸ்.டி. சட்டம் உருவாக்கப்பட்டபோது, அருண்ஜெட்லி எந்த மாநிலத்துக்கும் ஒரு மாதத்துக்குரிய இழப்பீட்டு தொகை அடுத்த மாதம் 8-ந்தேதிக்குள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி.யை எளிமைப்படுத்துவது, சீர்திருத்தம் செய்வது என்பதற்கான அனைத்து மாநிலங்களிலும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி வணிகர்களிடமும், மாநில அரசு அதிகாரிகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் எந்த சீர்திருத்தமும் செய்யப்படவில்லை. ஜி.எஸ்.டி. கொண்டு வந்தபோது, அந்த வரியை கட்டுபவர்கள் தற்சான்றிதழ் கொடுத்து கணக்கு தாக்கல் செய்துவிடலாம். இன்ஸ்பெக்டர் ராஜ் என்று கூறப்படும் அதீதமான அதிகாரிகள் சோதனை இருக்காது என்று உறுதி அளிக்கப்பட்டது. அதுவும் இப்போது நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில், 38-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் இப்போதுள்ள 5 சதவீதம், 12 சதவீதம் வரி விகிதத்தை உயர்த்தப்போவதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரியால் பொதுமக்கள் விலை உயர்வு சுமையால் அவதிப்படுகிறார்கள். வியாபாரிகள், தொழில் அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை இன்னும் உயர்த்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும். பழைய வரி விதிப்பு முறைகளில் கிடைத்த வரி வருவாய் மத்திய அரசாங்கத்துக்கு இப்போது கிடைக்கவில்லை. மத்திய கலால் வரி மற்றும் வாட் உள்ளடக்கிய பயன்படுத்ததக்க மறைமுக வரி விகிதம் ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பு 25 சதவீதமாக இருந்தது. அது இப்போது 18 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஆக, அரசு வருவாயும் குறைந்து, பொதுமக்களுக்கும் பாதிப்பை அதிகமாக ஏற்படுத்தும் ஜி.எஸ்.டி. ஒரு தோல்வியான வரி விதிப்பு முறை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

- ரியா இவான்

No comments:

Popular Posts