Sunday 22 December 2019

கனவை நனவாக்கிய ‘கல்வி பெண்மணி’

‘‘நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்த நாளில் இருந்தே வக்கீலாக வேண்டும் என்று கனவு கண்டேன். இப்போது அது நிறைவேறி விட்டதால் உற்சாகமாக இருக்கிறேன். இத்தனை வயதுக்கு பிறகு வக்கீலாகியிருக்கும் எனது முயற்சி பலருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னை போல் நிறைய பேர் குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி இருக்கிறார்கள். என்னை பார்த்து அவர்களும் படிப்பை தொடர்ந்து தங்கள் கனவை நனவாக்குவார்கள் என்று நம்புகிறேன்’’ என்கிற நீனா தனது பள்ளி கால நினைவுகளையும் நினைவுபடுத்துகிறார்.

‘‘பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே எனக்கு திருமணமாகிவிட்டது. அதனால் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. எப்படியாவது படிப்பை தொடர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். ஏனெனில் என்னோடு பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்தார்கள்’’ என்கிறார்.

குழந்தைகள் வளர தொடங்கியதும் அவர்களுக்கான தேவையும், குடும்ப செலவும் அதிகமாகி இருக்கிறது. அதனால் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் நீனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

‘‘எனது குழந்தைகள் வளர்ந்ததும் நான் வேலைக்கு செல்ல விரும்பினேன். ஆனால் 10-ம் வகுப்பை பூர்த்தி செய்த சான்றிதழ் இல்லாமல் வேலை தேடுவது கடினமாக இருந்தது. அப்போதுதான் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்’’ என்கிறார்.

நீண்ட தேடுதலுக்கு பிறகு மரக்குடோன் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அதன் பிறகு வழக்கறிஞர் அலுவலகத்தில் கிளார்க் வேலை செய்திருக்கிறார். நீனாவின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கல்வியறிவு இயக்கம் பற்றி அவரிடம் எடுத்து கூறியுள்ளார். அது பற்றி அறிந்ததும் 10-ம் வகுப்பு தேர்வை எழுத முடிவு செய் திருக்கிறார். அலுவலகத்தில் வேலை பார்த்தவர்களும், குடும்பத்தினரும் அவரது படிப்பு ஆர்வத்திற்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.

‘‘கிடைத்த வாய்ப்பை வீணாக்கிவிடக்கூடாது என்று எண்ணினேன். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றேன். வக்கீலாக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் படிப்பை தொடர்ந்தேன். ஒருவழியாக 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு திறந்தவெளி பள்ளி கல்வி மூலம் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பை படித்து முடித்தேன்.

பின்னர் சட்டப்படிப்பு படிப்பதற்கு நுழைவு தேர்வு எழுத முடிவு செய்தேன். அந்த சமயத்தில் நுழைவு தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு 22 ஆக இருந்தது. அதை எதிர்த்து எங்களில் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. 2013-ம் ஆண்டு நுழைவு தேர்வு எழுதி எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. வக்கீல் கனவை நெருங்கிவிட்ட பெருமிதம் உண்டானது. கல்லூரியில் சேர்ந்து படித்தபோதும் கூட வேலையை விட வில்லை. முதலாளி மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை’’ என்று வெற்றிப் புன்னகையோடு சொல்கிறார், நீனா.

No comments:

Popular Posts