Sunday 22 December 2019

சாத்தியமா செயற்கை நிலவு?

சாத்தியமா செயற்கை நிலவு?
By எஸ். ராஜாராம்

சீனாவின் தென்மேற்கு மாகாணப் பகுதிகளில் வாழ்கின்றன சிவப்பு பாண்டா வகை கரடிகள். இரவு நேரத்தில் நடமாடும் பிராணியான இந்த சிவப்பு பாண்டா கரடிகள், இரவு எது, பகல் எது எனத் தெரியாமல் குழப்பமடையக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். தெரு விளக்குகளே இல்லாமல், சீனாவின் நகரங்கள் இரவிலும் ஒளிமயமாகத் திகழவும் கூடும். இவையனைத்துக்கும் காரணமாக அமையப் போகிறது சீனாவின் செயற்கை நிலவு.

எந்த ஒரு பொருளையும் அசலைவிட அசத்தலாகத் தயாரிப்பதில் சீனாவை விஞ்ச முடியாது. கார்களின் உதிரி பாகங்கள் முதல் ஆப்பிள் அறிதிறன்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) வரை சீனத் தயாரிப்புகள் அசலுக்கே சவால் விடுக்கும். அந்த வரிசையில், செயற்கையாக ஒரு நிலவையே தயாரித்து விண்வெளியில் வலம்வரச் செய்யப்போகிறது சீனா.

அந்நாட்டைச் சேர்ந்த "செங்டு ஏரோஸ்பேஸ் இன்ஸ்டிட்யூட்' என்கிற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட இந்த அறிவிப்பு, அந்நாட்டின் அரசு பத்திரிகையான "பியூப்பிள்ஸ் டெய்லி'யிலேயே வெளியானதால் முக்கியத்துவம் பெற்றது. 2020-ஆம் ஆண்டு செயற்கை நிலவு நிறுவப்படும் என்ற அந்த நிறுவனம், அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

இந்தச் செயற்கை நிலவு திட்டம் வெற்றி பெற்றால், சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த செங்டு நகரத்தில் இரவில் தெரு விளக்குகளுக்கு வேலை இருக்காது என நம்பிக்கை தெரிவிக்கிறார் அந்த விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் சன் ஃபெங்க். செங்டு நகரத்தில் இரவு நேர தெரு விளக்குகளுக்கான மின்சாரத்துக்கு ஆண்டுக்கு சுமார் 17 கோடி டாலர் செலவாகிறது. அந்தச் செலவு செயற்கை நிலவின் மூலம் மிச்சமாகும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

சூரியனிலிருந்து ஒளியை பெரிய கண்ணாடி மூலம் பெற்று அதை இரவு நேரத்தில் பிரதிபலிக்கச் செய்வதுதான் செயற்கை நிலவின் தொழில்நுட்பம். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் இது செயல்பாட்டுக்கு வரவேண்டுமானால் இன்னும் ஏராளமான பரிசோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கும். பூமியிலிருந்து  3,80,000 கி.மீ. தொலைவில் நிலவு உள்ளது. இந்தச் செயற்கை நிலவை செயற்கைக்கோள் மூலம் ஏவி, பூமியிலிருந்து 500 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்த சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இரவில் தெரு விளக்குகளுக்கான மின்சாரச் செலவை மிச்சப்படுத்தலாம்; புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலத்துக்குப் பிந்தைய மின்சாரம் இல்லாத இரவுகளில் வெளிச்சத்தைப் பெற இந்த செயற்கை நிலவு உதவும் என்கிற இந்த இரு அம்சங்கள்தான் செயற்கை நிலவின் இப்போதைய பிரதான நோக்கம்.
முதலில் மக்கள் வசிக்காத பாலைவனத்தில்தான் செயற்கை நிலவின் ஒளியைப் பெற்று சோதனை மேற்கொள்ளப்படும், அதன்பின்னரே செங்டு நகரத்தை நோக்கி நிலவின் ஒளி விழும் வகையில் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்படும் என சீன நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கேட்கும்போது பிரமிப்பை, விஞ்ஞான உலகின் சக்தியை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினாலும், செயற்கை நிலவு திட்டம் எப்படிச் செயல்படும், அதனால் சுற்றுச்சூழலுக்கு, உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன என்று விஞ்ஞான உலகம் கவலையும் தெரிவிக்கிறது.

முதலில் செயற்கை நிலவு நிறுவப்படுவதில் உள்ள சவால்களைப் பார்ப்போம். சீன நிறுவனத்தின் திட்டப்படி, விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கும் பூமிக்கும் இடையில்தான் செயற்கை நிலவு நிலைநிறுத்தப்படக் கூடும் எனத் தெரிகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையமே ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு பரப்பளவைக் கொண்டது. மூன்று பகுதிகளாக விண்வெளிக்கு ஏவப்பட்டுதான் அந்த ஆய்வு மையம் விண்வெளியில் கட்டமைக்கப்பட்டது.

நிச்சயம் செயற்கை நிலவும் அந்த அளவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. 10 கி.மீ. முதல் 80 கி.மீ. சுற்றளவு வரை ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை நிலவு, பூமியில் விழுந்துவிடாமல் இருக்க வேண்டுமானால் மணிக்கு 27,400 கி.மீ. வேகத்தில் சுழல வேண்டியிருக்கும். அதற்கான எரிபொருள் செலவையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.
அடுத்ததாக, செயற்கை நிலவால் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பாதிப்புகளையும் புறந்தள்ளிவிட முடியாது. ஒளி மாசுபாடு காரணமாக சீனா மட்டுமன்றி ஏற்கெனவே உலகம் முழுவதும் பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், நிலவின் ஒளியைவிட 8 மடங்கு பிரகாசமாக இருக்கும் எனக் கூறப்படும் செயற்கை நிலவின் ஒளியால் மனிதகுலத்துக்கு நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும்; இரவுநேர உயிரிகளின் வாழ்க்கைச் சக்கரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

செயற்கை நிலவு திட்டம் ஒன்றும் புதிதல்லை. ரஷியா 1990-களில் சூரிய ஒளியை பிரதிபலிப்பதற்காக ஒரு செயற்கைக்கோளை ஏவியது.
ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த "ராக்கெட் லேப்' எனும் நிறுவனம் ஒரு செயற்கை நட்சத்திரத்தை விண்வெளியில் செலுத்தியது. ஆனால், அதன் பிரதிபலிப்பால் ஒளி மாசுபாடு ஏற்படும் என்றும், பூமியின் சுற்றுப்பாதையில் பிற செயற்கைக்கோள்களுக்குக் குளறுபடிகளை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கற்பனைகளுக்கு எட்டாததையெல்லாம் சாத்தியமாக்கித் தருவதுதான் விஞ்ஞானம். ஆனால், அந்த விஞ்ஞான தொழில்நுட்பம் இயற்கைக்கு ஊறு விளைவிப்பதாகிவிடக் கூடாது. செயற்கை நிலவுக்கும் இது பொருந்தும். செயற்கை நிலவு ஒளி தருமா, வலி தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Popular Posts