Sunday 22 December 2019

குடியுரிமை திருத்தச் சட்டமும் எதிர்க்கட்சிகளும்...

குடியுரிமை திருத்தச் சட்டமும் எதிர்க்கட்சிகளும்...
By ஏ.என்.எஸ். பிரசாத் 

இந்தியா முழுவதும் "குடியுரிமை திருத்தச் சட்டம் 2019'  மிகப் பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.  இஸ்லாமிய நாடுகளில் உள்ள மாற்று மதத்தினர், மதத்தின் காரணமாக நடைபெறும் வன்முறையில் பாதிக்கப்படும்போது அவர்கள் அடைக்கலம் தேடும் நாடாக இந்தியா உள்ளது. அவர்களை அரவணைத்து  குடியுரிமை வழங்க இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் வழி செய்கிறது.

இதை மறைத்து எதிர்க்கட்சிகள், சில மாநில முதல்வர்களின் தவறான அணுகுமுறையால், அரசியல் ஆதாயத்துக்காக மதக் கலவரம் உருவாக்கப்பட்டு,  வன்முறை தூண்டப்பட்டுள்ளது; செயற்கையாக மாணவர்களுடைய போராட்டங்கள் உருவாக்கப்பட்டு, சமூக விரோத சக்திகள், பயங்கரவாத சக்திகள், மாவோயிஸ்ட் சக்திகள் ஒன்றாகச் சேர்ந்து மிகப் பெரும் வன்முறையை  இந்தியாவில் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.  ஆனால், எதிர்க்கட்சிகளின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில்  தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களினால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தபோது, "இந்தியாவில் உள்ள  முஸ்லிம்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, எல்லோரும் இந்த நாட்டு மக்களே' என உறுதிபடக் குறிப்பிட்டார்.


தற்போது பிரதமர்  மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது, இஸ்லாமிய நாடுகளாக தங்களை அறிவித்துக் கொண்ட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்படும் அல்லது வெளியேறி இந்தியாவில் குடியேற விரும்பும் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் உள்பட சிறுபான்மை சமுதாய மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திடீரென கொண்டுவரவில்லை. இத்தகைய குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என பாஜக-வின்  2014-ஆம் ஆண்டு,  2019 தேர்தல் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறும் சிறுபான்மையின மக்களின் நலன் கருதி, பாதுகாப்பை வழங்கும் பொருட்டு சில திருத்தங்களை மேற்கொள்வோம் என தேர்தல் அறிக்கைகளில் பாஜக ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் வாழக்கூடிய இஸ்லாமிய சமுதாய மக்களை இந்திய மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவதுபோல, அச்சத்தை விளைவிக்கும் வகையில் பொய்க் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அவ்வாறு இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்தியா அன்றும் இன்றும் பல்வேறு மதத்தினர் கூடி வாழும் மதச்சார்பற்ற நாடாகவே உள்ளது.

இஸ்லாமியர்கள் சுமார் 95 சதவீதம் உள்ள இஸ்லாமிய நாட்டில், அவர்களுக்கு எப்படி மத ரீதியான அச்சுறுத்தல் இருக்க முடியும்? இதில் அகமதியா முதலான இஸ்லாமிய சிறுபான்மையினர் அந்த மண்ணின் மைந்தர்கள். இஸ்லாமிய நாடுகளிலும், இஸ்லாத்தின் உட்கருவிலும் உள்ள வேற்றுமையைத் தீர்க்க வேண்டிய நோக்கம், கட்டாயம் இந்தச் சட்டத்துக்கு இல்லை. மேலும், அவர்கள் அங்கு துன்புறுத்தப்பட்டதாகவும் வரலாறு இல்லை.


மதத்தின் பெயரால், இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்ட பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் தாய் நாடாக ஏற்றுக்கொண்டு  வாழக்கூடிய இஸ்லாமியர்களுக்கு நாம் குடியுரிமை அளிக்க வேண்டுமா?  இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்பதை எதிர்க்கட்சிகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மியான்மரில் இருந்து விரட்டப்படும் ரோஹிங்கயா முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடான வங்கதேசத்தைக் கடந்துதான் இந்தியா வருகின்றனர். இஸ்லாமிய நாடான வங்கதேசம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுக்கிறது. ரோஹிங்கயா  முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள், அடைக்கலம் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக வங்கதேசப் பிரதமரே  தெரிவிக்கும்போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று இங்கு இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகள் கூறுவது ஏற்புடையதன்று.

வாக்கு வங்கி அரசியலுக்காக இந்திய மக்களின் அமைதியான வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் கணக்கில் கொள்ளாமல், வங்கதேசத்தில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்களை ஊடுருவ விட்டு வேடிக்கை பார்த்த கட்சிகள் இன்றைக்கு அரசியல் ஆதாயத்துக்காக அந்த மக்களைப் பயன்படுத்தி வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தை ஒரு கலவர பூமியாக மாற்றி இருக்கின்றனர். வாக்குகளுக்காக மக்களைப் பயன்படுத்தும் கட்சிகள்தான், இன்று  திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகளுக்குக் காரணம்.

இந்தியாவில் ஏனைய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் 1955-ஆம் ஆண்டின் குடியுரிமை சட்டப்படி தகுதி இருப்பின் குடியுரிமையும் பெற்றுக் கொள்ளலாம்.  இந்தியாவில் நீண்டகாலமாக எந்தவோர் உரிமையும் இல்லாமல் வாழும் அகதிகளுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற்றுத் தரக்கூடிய வகையில் இந்தத் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  அதே சமயம்,  எந்த ஒரு சான்றும் இல்லாமல் இந்தியாவில் ஊடுருவியவர்களுக்கு எந்தவோர் உரிமையும் அளிக்கப்பட மாட்டாது. இந்தக் குடியுரிமை திருத்தச்  சட்டம், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழக்கூடிய அகதிகளுக்குப் பொதுவானது.

ஆனால், பழங்குடியினர் அதிகம் வசிக்கக்கூடிய அஸ்ஸாம், மேகாலயா, மிúஸாரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அரசியல் சட்டப் பிரிவு அட்டவணையின்படி இந்தக் குடியுரிமை திருத்தச்  சட்டத்தைச் செயல்படுத்த முடியாது. இஸ்லாமிய நாடுகளில் அகதிகளாக வந்தவர்கள் இன்றைக்கு எல்லா மாநிலங்களிலும் வாழ்கின்றனர். 1.5 லட்சம் வங்கதேச ஹிந்துக்கள் அஸ்ஸாமில் வாழ்கின்றனர். ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தைப் பொருத்தவரை குடியுரிமை திருத்தச்  சட்ட விதிகள் அங்கு பொருந்தாது.

அதேபோல அஸ்ஸாம் உடன்படிக்கையின்படி அஸ்ஸாம் மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர் தவிர 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்குப் பின் குடிபெயர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய குடியுரிமை திருத்தச்  சட்டம், அஸ்ஸாம் உடன்படிக்கையின் நியாயத்தை உணர்ந்து ஒப்புதல் அளித்துள்ளது.

குடியுரிமை திருத்தச்  சட்டம் 2019, பிரிவு 5-இன் படி எந்த ஒரு தகுதியான மனிதனும் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம். இந்தச் சட்ட விதிகளின்படி இந்தியாவில் வாழும் எந்த ஒரு மனிதனும் இஸ்லாமியர்கள் உள்பட அனைவரும் குடியுரிமை பெறலாம். மேலும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள விதிகளின்படி இந்தச் சட்டத்தின் ஆறாவது பிரிவின்படி எந்த ஒரு மனிதனும்  ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நம் நாட்டில் வாழ்ந்திருந்தால் அவர்கள் குடியுரிமையைப் பெற முடியும்.

சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாக்கக்கூடிய பயங்கரவாதிகள், அகதிகள் போர்வையில் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையிலும், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் இருந்து வன்முறையால் வெளியேறி இந்தியாவில் குடியேற விரும்பும் ஹிந்து, சீக்கிய மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வகையிலும் விதிமுறைகள் கடுமையாக உருவாக்கப்பட்டன.

இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்ததற்கான அரசாங்க ஆவணங்கள், பஞ்சாயத்து அலுவலகம், நகராட்சி-மாநகராட்சி அலுவலக ஆவணங்கள், ஆதார் அட்டை,  தபால் நிலையங்கள் - வங்கிகளில்  வைத்துள்ள ஐந்து ஆண்டுகளுக்கான கணக்கு விவரங்கள், தொலைபேசி ரசீது, மின்சார ரசீது முதலானவற்றின் அடிப்படையில் அவர்கள்  விண்ணப்பித்து குடியுரிமையைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு சிறுபான்மை மக்களுக்கு இந்தியா அடைக்கலம் அளிக்க இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் வழி செய்யும்போது, இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் இந்த சட்டத்தில்  சேர்க்கப்படவில்லை என்று இங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சிங்களருக்குச் சமமான அரசியல் அங்கீகாரம்,  சிங்களர்களுக்கு நிகராகப் பொருளாதாரத்தில், கல்வியில் சம உரிமை வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கை. இந்தியாவில் அடைக்கலம் தேட இலங்கைத் தமிழர்கள் விரும்பவில்லை என்பதைக் கடந்த காலங்களில் அவர்கள் பெருமளவு இலங்கைக்குத் திரும்பிச்  சென்றதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கும்  வகையில் சட்டத் திருத்தம் செய்தால் அது இலங்கை தமிழர்களுக்கு  எதிராக முடியும். இலங்கையில் இலங்கைத் தமிழ் இனமே அழிந்து போகக்கூடிய சூழ்நிலை எதிர்காலத்தில் நிகழும். இதனால் இலங்கையில் வாழும் சிங்கள மக்களுக்குத்தான் ஆதாயம் ஏற்படும். இதை எதிர்க்கட்சிகள் ஏன் விரும்புகின்றனர் என்று ஆச்சரியமாக உள்ளது.

இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரம் தவறு என்பது நிரூபணமாகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து 2019 தேர்தலில் ஒரு நிலையான ஆட்சி அமைத்தது; அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இந்த அரசைக் கவிழ்க்கும் முயற்சியில், இந்த அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் உண்டாகும் முயற்சியில் இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.


கட்டுரையாளர்:
தலைவர், தமிழக பாஜக
மாநில ஊடகப் பிரிவு.

No comments:

Popular Posts